தமிழ் பாஷையைப் பற்றி – தனித் தமிழ் பதத்தை ஏன் உபயோகிக்க வில்லை என்று சிலர் சீறலாம்; தாயை சிதையில் வைத்துக் கண்டு களிக்க ஆசைப்படுகிறவர்கள் எழுதிக்கொள்ளட்டும் – தமிழ் பாஷையைப் பற்றி ஒரு தனிப்போக்கான கொள்கை பிலாக்கணம் வைக்கப்படுகிறது. அதில் ஒரே ஒரு மயக்கம். தமிழுக்கு ஒரு காலத்தில் பெருமை (இலக்கியத்தைப் பொறுத்து அல்ல) இருந்ததாம். இது இப்பொழுது போய்விடும் என்ற பயம். தமிழணங்கு ‘கலப்பு’ மணம் செய்துகொள்வாளோ என்ற பயம். அதனால், தனிமை என்ற திரையால் மறைத்து ‘பூசல் அம்பு நெறியின் புறஞ்செலா’ நங்கையாக்க பிரயத்தனம். சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.பாஷை ஒரு சக்தியாயுதம்; உள்ளத்தைத் திறந்து காண்பிக்கும்; மறைக்கவும் செய்யும். உபயோகப்படுத்தாது உறையில் போட்டு வைத்தால் துருப்பிடிக்கும். அந்தக் கதிதான் நமது பாஷைக்கும்.கொஞ்ச காலமாக இயற்கைக்கு மாறாக நாம் நடந்துவருகிறோம். பாஷை ஒரு சமூகத்தின் ஜீவசக்தி. சொந்த பாஷையில்தான் நமது அந்தரங்க உணர்ச்சிகளை வலிமையுடன் சொல்ல முடியும். இந்த இயற்கையை மறந்ததினால்தான் நமக்கு நமது பாஷையே அன்னிய பாஷையாக இருக்கிறது. எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் பழைய சங்கப் பலகையைத் தொத்திப்பிடித்து கீழே கவிழ்கிறோம்.

பாஷை, காலம் என்ற ஜீவநதியின் பாசனத்தில் ஓங்கி வளரும் கற்பகவல்லி. புதிய சக்தியைப் பெற்ற தமிழின் மறுமலர்ச்சியின் பொழுது, உலர்ந்து விழுந்த சருகுகளைக் கொண்டு பாமாலை தொடுப்பதுதான் பாஷை வளர்ச்சி என்றால், அது சௌந்தரிய உணர்ச்சியற்ற ஒட்டகங்களுக்குத்தான் பொருந்தும்.

தமிழ் ‘இன்ஸால்வெண்டு’ பாஷையல்ல. புதிய வார்த்தைகள் சேர்வது, அவள் சுய உருவைக் குலைத்துவிடாது. அவள் அரசி. புதிய வார்த்தைகளைப் பெறுவது, புதிய நாடுகளைச் சயித்து, புதிய கலைச் செல்வங்களின் பண்டசாலைகளைப் பெறுவதுதான்.இது பாஷை-இயற்கையின் சூட்சுமம். இதைக் கம்பன் அறிந்திருந்தான். அவன் காலத்துக் கலைச் செல்வர்கள் அறிந்திருந்தார்கள். அவன் இலக்கியத்தில், புதிய வார்த்தைகள் – வாய் நிறைந்த வடசொற்கள் – அழகுத் தெய்வத்தை அணி செய்கின்றன.

வசனம்

தமிழில் வசனத்திற்கு இதுவரை ஒரு ஸ்தானம் இல்லை. இதற்கு மூன்று காரணங்கள். ஒன்று எல்லா சமூகத்திற்கும் பொதுவானது. ஆதி மனிதனுக்கு மகத்தான, அடக்க முடியாத உணர்ச்சிகள்தான் தென்பட்டன. அதைத்தான் அவன் அறிந்தான், அனுபவித்தான். அது ஆட்டத்தில், வெறியாட்டத்தில் ஆரம்பித்து, நாட்டியத்தில் தனது முழு ஆகிருதியையும் பெற்றது. பாட்டில் (முதலில் கூப்பாடு தான்) ஆரம்பித்து கவிதையாக வடிவெடுத்தது. அதை சேமித்து வைத்தான். அதுதான் ஆதி இலக்கியங்கள். ஆதி இலக்கியங்கள் எங்கும் பாட்டில் இருப்பதின் இரகசியம் இதுதான்.

தமிழுக்கு இதுவரை வசனம், பேச்சுமட்டிலேயே இருந்ததின் காரணம், நாம் ஓலையை இலக்கியத்தை சேர்த்துவைக்கும் பண்டசாலையாக உபயோகித்தது. ஓலையில் நீண்ட வசனகாவியம் எழுதி வைக்க முடியாது. இதனாலேயே வசனத்திற்கு உரைநடை என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அதாவது பாட்டிற்குப் பொருள் தெரிவிக்கும் நடை என்று கவிதைத் தெய்வத்தின் சேடியாகப் பிணைத்து வைத்ததினால், வசனத்தில் பேசுவதே கேவலம் என்ற அபிப்பிராயம் பண்டித பாவலர்களிடம் ஏற்பட்டு அவர்களை சீட்டுக்கவி முதல் எடுத்ததெல்லாம் பாடும் செய்யுள் யந்திரங்களாக்கிவிட்டன. இதனாலேயே வசனம், தமிழில் ஒரு வளர்ச்சி பெறாத ஆயுதமாக இருக்கிறது.

வசனத்திற்கு ஒரு ஸ்தானம் கொடுக்க வேண்டுமானால், நமது துருப்பிடித்த அபிப்ராயங்களைக் கொஞ்சம் ஒதுக்கிவைக்க வேண்டும். இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் நெடுந்தூரம் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்பது பெருந்தவறு. அப்படியிருந்தால் ‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்பதில் சந்தேகமில்லை. இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் ஒரு சிறு வித்தியாசந்தான். இலக்கியத் தமிழ் கிரந்தகர்த்தாவின் சௌந்தர்ய உணர்ச்சியில் மெருகு போடப்பட்ட சிருஷ்டி. பேசுந்தமிழ் உள்ளத்தின் துடிதுடிப்பை அப்படி அப்படியே சொல்லும் பட்டை போடாத வைரம். பேச்சுத் தமிழ்தான் ஜீவசக்தி; சிருஷ்டிகர்த்தாவின் பண்ட சாலை. இவை இரண்டிற்கும் இடையில் சுவர் எழுப்பினால், லத்தீன், சமஸ்க்ருதம் முதலியவைகளுக்கு நேர்ந்த கதிதான்.

வாக்கியத்துக்கு உயிருண்டு. அது பல தசைகளும், நரம்புகளும், அவயவங்களும் கொண்ட சிருஷ்டி. அதை நாம் உம்மைத் தொகுதிகளால் பிணிக்கப்பட்ட வெறும் வார்த்தைச் சங்கிலிகளாக மதித்துவிடக் கூடாது. வாக்கியத்தின் கட்டுக்கோப்பு (Architectonics) மிகவும் முக்கியமானது. ஒரு வாக்கியத்தில் வார்த்தையின் ‘அமைப்பு’ நயமான அர்த்த விசேஷங்களைத் தந்துவிடும். வாக்கியங்களின் (Prose-rhythm) ஓசை இன்பம் – கவிதையைப் போல் வசனத்திலும் இருக்கிறது; ஆனால் அதைவிட சூக்ஷ்மமானது – வார்த்தை நயங்களையும், வாக்கியத்தின் ‘அமைப்பு’ வசீகரத்தையும் பொறுத்தே இருக்கிறது. இதைப் பற்றி எழுத முடியாது; பயிற்சியினாலும், மேதாவிகளின் நூல்களைப் படித்துப் படித்து அனுபவிப்பதினாலும் வரும். தமிழில் இதற்கு இலக்ஷிய கர்த்தாக்கள் அவ்வளவாக இல்லை. வெளியிலிருந்து தான் ஆகர்ஷிக்க வேண்டும். சிலர் மோனைகளையும் பிராசங்களை யும் வசனத்தில் உபயோகிப்பது ஓசை இன்பம் என்று நினைக்கிறார்கள். என்னமோ, அசுணப் பறவையையும் பறை முழக்கத்தையும் பற்றி கம்பன் சொன்ன கதைதான் நினைவிற்கு வருகிறது. அப்படி எழுதுவது ஆபாசம்; பேசுவது பைத்தியக்காரத்தனம்.

வார்த்தைகள் ஓர் பாஷையின் ஜீவசக்தியை சுமந்து செல்லும் பரமாணுக்கள். தனித் தமிழ் என்ற ஆவேசத்தில், ஒரு காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டு இப்பொழுது துருப்பிடித்து அகராதியில் ஒளிந்துகிடக்கும் வார்த்தைகளைத் தோண்டி எடுத்து கோத்து வைப்பதைவிட, குழிப்பிள்ளையை எடுத்துக் கொஞ்சலாம். பழைய கலைவாணர்கள் வார்த்தைகளின் இரகசியத்தை அறிந்துதான் தமிழுக்கு, பைந்தமிழ், அதாவது பசுந்தமிழ் அல்லது ஜீவசக்தி நிறைந்த பேச்சுத் தமிழ் என்று கூறிக் களித்தார்கள். இலக்கியக் கிழவி ஔவை தமிழின் அருமையைப் பற்றிப் பேசுகையில் ‘பழகு தமிழ் சொல்லருமை’ என்று குறித்துக் கூறுவதின் ரகசியம் இதுதான். ‘பழகு தமிழ் சொல்லருமை’ என்ற இலக்ஷியம் போய் ‘செத்த தமிழருமை’ வேண்டுமானால்தான் அகராதியில் சுரங்கம் போடுவதில் ஈடுபட வேண்டும்.

வசனத்தை அழகுணர்ச்சிக்குப் பொருந்த சிருஷ்டிப்பதற்கு பல பாஷைகளில் நல்ல பயிற்சி வேண்டும்; அதன் நயங்களை ஆகர்ஷிக்கும் சக்தி வேண்டும். இந்த விஷயத்தில் பண்டிதர்களால் ஒரு உதவியும் செய்ய முடியாது. அவர்களிடம் சிருஷ்டி சக்தியும் கலையுணர்ச்சியும் நாம் எதிர்பார்க்க முடியாது; அவ்விரண்டும் கபாடபுரத்தைப் போல் கடல் கொண்டுபோன ‘சரக்குகள்’. இப் பொழுது சில காலமாகப் பெருகிவரும் ஆங்கிலம் படித்த பண்டிதர்களோ, பழைய பண்டிதர்களுக்கு மேற்பட்ட பண்டிதர்களாக இருக்கிறார்கள். அபூர்வ நடையும் அபூர்வ அபிப்பிராயங்களும் நிறைந்த இந்தப் ‘போலி’களை செல்லாக் காசுகளாக மதித்து ஒதுக்க வேண்டும். இவ்விருவரிடமும் சிறைப்பட்டு இருக்கும் தமிழை மீட்க வேண்டுமானால், கலைவளர் மன்றங்கள் என்று சொல்லுகிறார்களே, எழுதிய மை காயுமுன் உலர்ந்து விழும் தமிழ் இலக்கிய கோரங்களைப் பொறுக்கி எடுத்து பாட புத்தகமாக வைக்கும் சர்வகலாசாலைகள், அவைகளால் முடியுமா?

பத்திரிகைகள் இருக்கின்றன. ‘தனித் தமிழ் உரை நடைக்கென்று தொண்டாற்றும்’ பத்திரிகைகள், அவைகளல்ல, எழுதுவது வாசிப்பதற் காகத்தான் என்பதை மட்டும் கவனித்து வெளிவரும் பத்திரிகைகள் தான் இந்த மகத்தான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவைகளால் இலக்கியத்தை சிருஷ்டிக்க முடியாமல் இருக்கலாம்; ஆனால் ‘வளைந்து’ கொடுக்கும் வசனத்தைப் பழக்கிவிட முடியும்.

(காந்தி, 25.6.1934)


குறிப்பு: புதுமைப்பித்தன் கட்டுரைகளின் முழுத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை இது. இக்கட்டுரை முதல் இதழில் வெளிவர வேண்டுமென  கபாடபுரம் விரும்பியது.

நன்றி: புதுமைப்பித்தன் கட்டுரைகள்
பதிப்பாசிரியர் : ஆ.இரா. வேங்கடாசலபதி
காலச்சுவடு பதிப்பகம்.