”எனது படைப்பூக்க ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகளே”

– காப்ரியல் கார்ஃசியா மார்க்குவஸ்

தமிழ்நாட்டு மக்கள் தொகையோடு இலக்கிய வாசிப்பு இருப்பவர்களை கணக்கீடு செய்தால் சொற்பமாகத்தான் இருக்கும். அதிலும் தீவிர இலக்கியம் வாசிப்பவர்கள், சொற்பத்திலும் சொற்பம். ஆயினும் எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல எனத் தொடர்ந்து இயங்குவதே கலைஞர்களின் பணி. மேலும், வாசகர் இன்னாரென்று அறிந்துகொள்ள முயலாத இயல்பும் அதோடு இணைந்திருக்கும். இந்த அடிப்படை சிறார் இலக்கியத்திற்கு பொருந்துவதில்லை. சிறார் இலக்கிய எழுத்தாளர் தனது படைப்பு எவருக்காக எழுதப்படுகிறது என்பதை தீர்மானித்த பிறகே தனக்குள் உருவான கதையை/பாடலை எழுதத் தொடங்குவார். இது கலைத் தனமைக்கு எதிரானது என்றும் சிலர் நினைக்கக் கூடும். ஆனால் அது உண்மையல்ல. பாதைகள் உருவாக்கப்படுவதும் தானே உருவாவதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் பாதை பற்றிய தட்டையான தன்மைக்குள் அடங்கி விடக்கூடாது. சிறார் இலக்கியத்தின் உள்ளடக்கம் பற்றி பேசுவதை விடவும் தமிழில் அதன் பயணம் எப்படி இருக்கிறது என்பதை பகிர்வதே முக்கியமென நினைக்கிறேன்.

தமிழில் சிறார் இலக்கியம் என்பது தொடக்கம் முதலே அறநெறி போதிக்கும் ஒரு உத்தியாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அழ வள்ளியப்பா, பெரியசாமி தூரன், வாண்டு மாமா, ரேவதி உள்ளிட்டவர்களின் படைப்புகளிலும் ஏதேனும் ஒருவகையில் அறநெறி போதித்தலே தலை தூக்கி நிற்பதைப் பார்க்கமுடிகிறது. பரமாத்த குரு கதைகள், பீர்பால் கதைகள், தெனாலி ராமன் கதைகள் போன்ற மொழி மாற்றம் செய்யப்பட்ட கதைகளிலும் இதே நிலைதான் நீடித்தது. இன்றுவரை மறைமுகமாகவேனும் அறத்தை போதித்தே ஆகவேண்டும் என்கிற முனைப்போடு சிலர் சிறார் இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. இது பெரிய அண்ணன் மனநிலையை பிரதிபலிப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். உன்னை விட நான் பெரியவன் அனுபவம் அதிகமுள்ளவன் எனவே நான் கற்றுத்தருகிறேன் என்பதாகவே இதன் உள்ளீடு இருக்கிறது. கலையிலிருந்து கற்றுக்கொள்ளமுடியுமே தவிர கற்றுக்கொடுக்கிறேன் என்பதற்காக கலையைப் பயன்படுத்த முடியாது என்று நம்புகிறேன். இது சிறார் இலக்கியத்திற்கும் பொருந்தும். ஆனால் உண்மையில் சிறாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இடத்தில்தான் நாம் இருக்கிறோம் என்பதை பலரும் உணருவதில்லை. உணரும் சிலரும் சிறாரிடமிருந்து கற்றுக்கொள்வதை தனது பெருந்தன்மைகளில் ஒன்றாக பீற்றிக்கொள்வதையும் காணமுடிகிறது. ஆனால் சிறாரை இவ்விதம் அணுகுவதன்மூலம் அவர்களை துளியும் புரிந்துகொள்ள முடியாது என்பதே உண்மை. புரிதல் இல்லாத இடத்திலிருந்து சிறாருக்கான படைப்புகள் வருவது சாத்தியமேயில்லை. தமிழில் பிறமொழிக்கு மொழிபெயர்க்க வேண்டிய அற்புதமாக நாவல்கள் என பட்டியலிட முடியும். அதேபோல கவிதை, சிறுகதை நூல்களையும் பட்டியலிடலாம். அதுமாதிரியான கிளாஸிக் படைப்புகளை தமிழுக்கு நம் படைப்பாளிகள் தந்துள்ளனர். ஆனால் சிறார் இலக்கியத்தில்? இந்த நிலையிலிருந்து தமிழ் சிறார் இலக்கியத்தில் ஏன் கிளாசிக் படைப்புகள் வரவில்லை என்பதைப் பார்ப்போம்.

முதலில் குறிப்பிட்டதுபோல அறநெறி போதிப்பது எனும் அளவில் சிறார் இலக்கியத்தை குறுக்கிப் பார்த்தது முக்கியமான ஒன்று. அதன்பின் காமிக்ஸ் வரவிற்கு பிறகு துப்பறியும் கதைகளாக தமிழ்ச் சிறார் இலக்கியம் மாறிப்போனது. மொழி மாற்றம் செய்யப்பட்ட காமிக்ஸ் போல, வாண்டு மாமா போன்றவர்களும் சி.ஐ.டி சிங்காரம், கழுகு மலை போன்ற துப்பறியும் கதைகளை எழுதினர். இது அந்தக் காலத்தின் சிறாரை ஈர்த்தது. மெய்மறந்து வாசிக்க வைத்தது. ஆனால் சுவாரஸ்யம் தவிர்த்த அதில் ஏதுமில்லை. இதை நாம் வணிக எழுத்துகளோடு ஒப்பிடுவதில் தவறில்லை. இந்த வகை எழுத்து ஒரு கட்டத்தில் தேக்கம் அடைவது இயல்பே. அதுதான் நிகழ்ந்தது. இன்னொரு புறம் ரஷ்ய நாட்டு சிறார் இலக்கிய நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு பரவலாக வாசிப்புக்குள்ளானது. இன்றைக்கு எழுதிகொண்டிருக்கும் பலருக்கு அந்நூல்களே முதன்மையான நுழைவு வாயிலாக அமைந்தன. ஆனால் அதிலிருந்து உள் நுழைந்தவர்கள் பெரியவர்களுக்கான இலக்கியத்தில் கவனம் செலுத்தினார்களே தவிர, சிறார் இலக்கியப் பக்கம் செல்ல வில்லை. விதிவிலக்குகள் உண்டு. யூமா வாசுகி தன் படைப்பாக்கத்தை விட இன்று சிறாருக்கான மொழி பெயர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதுபோல.

நமக்கு அண்மையிலிருக்கும் கேரளத்தைப் போன்று தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் சிறார் இலக்கியம் மீது கவனம் குவிக்காதததும் தமிழில் சிறார் இலக்கியத்தில் கிளாசிக் படைப்பு வராமல் போனதற்கு காரணமாக குறிப்பிடலாம். இதிலும் விதிவிலக்காக எஸ்.ராமகிருஷ்ணன் ஆலிஸ் வொண்டர் லேண்ட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்தததோடு, கிறுகிறு வானம், ஏழு தலை நகரம் உள்ளிட்ட சிறார் நூல்களை எழுதிவருகிறார். ஜெயமோகன் பனிமனிதன் நாவலோடு ஒதுங்கிகொண்டார். கம்பீரன், பெருமாள் முருகன், முரளிதரன், கீரனூர் ஜாஹிர் ராஜா, ஆகியோரின் பங்களிப்புகள் தொடர்ந்தபோதும் அது கவிதை, கதை போன்று தீவிரமான எழுத்து நிலைக்குச் செல்லவில்லை. தமிழின் சிறந்த எழுத்தாளர்கள் சிறார் இலக்கியத்தில் ஈடுபடவில்லை என்பதைப் போலவே தீவிர இலக்கிய வாசகப் பரப்பும் சிறார் இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கக்கூட இல்லை. இதில் எழுதிக்கொண்டிருப்பவர்களின் பெயர்களைக் கூட பல வாசகர்கள்/எழுத்தாளர்களுக்கு தெரியாது. இந்தக் கவனிப்பற்ற போக்கு, சிறார் இலக்கியத்தில் புதிதாக எழுத நுழைபவர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அடுத்து, தமிழில் எழுதப்படும் சிறார் இலக்கியப் பிரதிகளுக்கு சரியான விமர்சனங்களும் யாராலும் முன்வைக்கப்படுவதில்லை. பல இலக்கிய நிகழ்வுகளிலும் இலக்கிய இதழ்களிலும் சிறார் இலக்கியம் பற்றிய உரையாடலே நிகழ்வது இல்லை. தற்போது சிறார் இலக்கியம் என்பது தமிழில் சிறார் இலக்கியம் என்றோ அல்லது தமிழில் ஏன் சிறார் இலக்கியம் வளமையாக இல்லை என்றோ உரையாடல்கள் நடக்கவில்லை. அரசு சார்ந்த நிறுவனங்களில் நடைபெறும் சிறார் இலக்கியத் தொடர்பான நிகழ்வுகளும் சம்பிரதாயமானதாகவே அமைந்துவிடுகிறது.

வாண்டுமாமா, ரேவதி உள்ளிட்ட சிறார் இலக்கியத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர் தொடர்பான பத்திரிகையில் வேலை செய்தவர்கள். அதன் பொருட்டு எழுத முனைந்ததும் ஒரு காரணமாக கொள்ளலாம். மற்ற வடிவங்களைப் போல தன்னியல்பாக இதில் ஈடுபட்டோர்/படுவோர் குறைவே. அதனால் பத்திரிகையின் தன்மைக்கேற்ற கதைகளைத் தாண்டி பயணிக்காத சூழல் அமைந்திக்கலாம். புத்தக ஆக்கம், முன்னோடியற்ற சூழல் உள்ளிட்ட இன்னும் சிலவற்றைப் பட்டியல் இடலாம். இவையெல்லாம் சேர்ந்துதான் தமிழில் சிறார் இலக்கியத்தில் கிளாஸிக் படைப்புகள் வராமைக்கு காரணங்களாக பார்க்கலாம்.

தமிழ் சிறார் இலக்கியத்தில் ஆரோக்கியமான போக்கு நிலவுவதை மகிழ்ச்சியோடு பார்க்கமுடிகிறது. இதற்கு முந்தைய தலைமுறையில் புழங்கப்பட்ட கதை, கதை மொழியிலும் மாறுபட்டு வந்திருக்கிறது. குறிப்பாக நீதி சொல்லியே ஆகவேண்டும் என்கிற தன்மையிருந்து விலகி, வாசகர்களுடன் உரையாடலுக்கேற்ற மொழியில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. பெரியவர்களுக்கான சிறுகதை எழுதப்படும்போது புதிய ஒன்றாக இருக்க வேண்டும் எனும் முனைப்பு இப்போது சிறார் இலக்கியத்திலும் தொடங்கியிருக்கிறது. சுவாரஸ்யம் மட்டுமல்லாமல் புதிய உலகை விரித்துக்காட்டி, அதில் சிறுவர்கள் பயணித்து, அந்தக் கதையிலிருந்து தானே ஒரு கதையை உருவாக்கி கொள்கின்றனர். தமிழகத்தில் சிறுவர்கள் மத்தியில் பணியாற்றும் அமைப்புகள் மற்றும் நபர்கள் அதிகரித்துள்ளனர். இது சிறுவர்களிடம் படைப்புகளைக் கொண்டு செல்ல உதவும். மேலும் படைப்பாளிகளும் சிறுவர்களுடன் இணைந்து படைப்புகளை உருவாக்கும் ஆரோக்கியமான சூழலும் அமையும். இந்த நிலையை சிறார் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்டுள்ளோர் வளர்த்தெடுத்தால் சிறார் இலக்கியத்திலும் கிளாஸிக் படைப்புகள் உருவாகும் என்றே நம்பலாம்.

தொடரும்…