அஞ்சலி : குவளைக் கண்ணன் (1964 – 2015)

ரவிக்குமார் என்ற இயற்பெயர் கொண்ட குவளைக்கண்ணன் 1964 ஆம் ஆண்டு சேலத்தில்
பிறந்தார்.முதல் கவிதை தொகுப்பு(1993) வெளிவந்து இருபது வருடங்களுக்குப் பின் அவரது
மூன்றாவது கவிதைத் தொகுப்பு வெளியானது.இதற்கிடையில் மொழிபெயர்ப்புகளை
தனியாகவும் நண்பருடன்(ஆனந்த்) இணைந்தும் மேற்கொண்டார்.புதுக்கவிதை
முன்னோடிகளைப் பற்றி வரிசையாக எழுதிய கட்டுரைகள் கவிதைகள் குறித்த அவரது நுட்பமான
வாசிப்புக்கு சான்று பகர்பவை.இலக்கிய கூட்டங்களிலும் விவாதங்களிலும் தனிப்பட்ட
உரையாடலிலும் உரத்து ஒலிக்கும் குரல் அவருடையது.மே 2015ல் மூளையில் ஏற்பட்ட
கட்டியால் திடீரென மரணமடைந்தார்.அவருக்கு அஞ்சலி.

குவளைக்கண்ணனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பான “கண்ணுக்குத் தெரியாததன் காதலன்”
நூலின் பின்னுரையில் கவிதை பற்றிய மிக நுட்பமான பார்வையை பகிர்ந்து
கொண்டிருந்தார்.அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நூலிருந்து அதை எடுத்து இங்கு
பிரசுரிக்கிறது ”கபாடபுரம்.”

வெள்ளி விழாக் கொண்டாட்டம்
விளையாட்டுப்போல் இருபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டன. அப்போது பதினேழு, பதினெட்டு
வயதிருக்கும், இளைஞனாகும் பருவம். மீசை முளைக்கவா என்று கேட்டுக்கொண்டிருந்தது.
கல்லூரி முதலாம் ஆண்டு, ப்ளஸ் ஒன் படிக்கிற பெண்ணிடம் காதல் வசப்பட்டிருந்தேன். மனம்
கூத்தாடத் தொடங்கி, றெக்கை கட்டிப் பறந்தது. அதுவரை ஏற்பட்டிராத புது அனுபவம். மனம்
நுரைத்துப் பொங்கியோடிக்கொண்டிருந்தது. அப்போது புத்தகம் ஒன்று படிக்கக் கிடைத்தது. ஒரு
வானம்பாடிக் கவிஞரின் கவிதைத் தொகுப்பு. நண்பனுடைய அண்ணனின் புத்தகம், ‘கண்கள்
காதலின் கட்டிலென்றால், சாதி தான் அதற்குச் சமாதி’ என்பது போன்ற வரிகள். அது வரை
கவிதையென்று நான் படித்திருந்ததெல்லாம் மனப்பாடச் செய்யுள்கள்தான். இந்தப் புத்தகம்
நானும் எழுதலாம் என்ற தைரியத்தைத் தந்தது. எழுதிப் பார்க்க ஆரம்பித்தேன். அப்பா தமிழரசுக்
கழகத்தில் இருந்து சென்னை மாகாணத்தை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தபோது
திருத்தணியிலும், திருச்செந்தூரிலும் போராட்டத்தில் கலந்துகொண்டு போலீசிடம் புளிய
விளாரில் அடி வாங்கியதாகச் சொல்வார். அவர் தமிழ்ப் பற்றாளர், தமிழெல்லாம் படிக்காத தமிழ்ப்
பற்றாளர். அவருக்கு பாரதியை அவ்வளவு பிடிக்கும். எட்டயபுரத்தில் கல்கியோ யாரோ பாரதிக்கு
எடுத்த விழாவில் தான் கலந்துகொண்டதைச் சொல்வார். ‘பாரதியார் படிடா’ என்பார். பாரதியின்
பெயரைச் சொல்லும்போது அவர் கண்கள் மின்னும்.

நான் பாரதி கவிதைகளையும், பாரதி பற்றிய புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்திருந்தேன்.
கவிதை போன்றதை எழுத ஆரம்பித்திருந்தேன். நண்பன் ஸ்ரீதரின் அப்பா டாக்டர் எஸ்.
கிருஷ்ணமாச்சாரி மூலம் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., க.நா.சு., சுந்தர ராமசாமி என்று
நவீனத் தமிழ் இலக்கியமும் கார்க்கி, செகாவ், டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி, கொகால்,
காஃப்கா, காம்யு, ஹெமிங்வே என்று ரஷ்ய மற்றும் உலக இலக்கியமும் அறிமுகமாயின.
நான் டாக்டரின் சிஷ்யனாக ஆகியிருந்தேன். பெயருக்குப் படித்துக்கொண்டிருந்த பி.காமில் பாஸ்
ஆகி வந்தேன். நான் காதலித்த பெண் கல்லூரிக்குப் போயிருந்தாள். காதல் வழியாக வந்த கவிதை
என்னை ஆக்கிரமித்திருந்தது. அந்தப் பெண்ணை நான் காதலித்ததுபோலவே, அந்தப் பெண்
யாரையோ காதலித்து கல்யாணம் செய்துகொண்டுவிட்டாள். நான் கவிதையுடன்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன். காதல் தோல்வியெல்லாம் இல்லை. அதைக் காதல் என்றுச் சொல்ல
முடியுமா என்றே தெரியவில்லை.

கவிதைப் பரிச்சயம் ஏற்பட்ட அந்த ஆரம்பக் கட்டம் அத்தனை இனிமையானது அல்ல.
அவஸ்தையும் போராட்டமுமான காலகட்டம் அது. வேலைக்குப் போனேன், நிரந்தரமாக
ஓரிடத்திலும் வேலை பார்க்க முடியவில்லை. ஏதோ என்னை ஆக்கிரமித்திருந்தது.
அதுவரை எனக்குச் சொல்லித்தரப்பட்டவற்றின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவை அத்தனையும்
தவறென்று தோன்றிக் கொண்டிருந்தது. அதுவரை இருந்த மனத்தின் அமைப்பு குலைந்து
வேறொரு அமைப்பு உருவாகும். பின்னர் சிறிது காலத்தில் அதைக் குலைத்து வேறொன்று, புதிய
அமைப்பு நிலைப்படுவதற்கு முன்பாக அதுவும் குலைந்து மெதுவாக வேறொன்று. இந்த
முறைப்பாடு நாளதுவரை தொடர்கிறது. ஒரு நிரந்தரமான மன அமைப்பு தேவையில்லை.
சொல்லப் போனால் அது ஒரு இடையூறுதான் என்பது சமீபத்தில் தெளிவுபட ஆரம்பித்துவிட்டது.
இது எப்படி நடந்தது? இதற்குப் பதில் கவிதை எழுதும் முறைப்பாட்டில் இருப்பதாகத் தோன்று
கிறது.

ஏதோ ஒன்றின் முட்டல். ஏதோ ஒரு அவஸ்தை. முடிந்த வரை தள்ளிப்போடுவது. வேறு
வழியில்லை, எழுதித்தான் தீர வேண்டும் என்ற நிலையில் எழுத உட்காருவது. இப்படி எழுத
உட்கார்ந்தாலுமே ஒவ்வொரு முறையும் ஒரு கவிதையை எழுதிவிட்டோம் என்பதில்லை. துவங்கி
இரண்டு மூன்று வரிகளில் நின்றுவிடும். சில சமயம் கவிதைபோல் துவங்கி வேறெதோ
ஆகியிருக்கும். ஆத்திரம் மட்டும் கொட்டியிருக்கும்.மூளையின் பிதற்றல் சொற்களாகியிருக்கும்.
இது பொய் வலி என்று எழுந்துவிட வேண்டியதுதான்.

சிலசமயம் ஏதோவொன்றில் துவங்கி இரண்டு மூன்று வரிகள் சென்று சட்டென்று திசைமாறித்
தீவிரப்பட்டுத் துவக்கத்திற்குச் சற்றும் தொடர்பற்று முடிந்திருக்கும் கவிதை. இப்போது துவக்க
வரிகள் கவிதைக்குச் சம்பந்தமேயில்லாமல் கிடக்க அவற்றை நீக்க வேண்டியதுதான். ‘இந்தக்
கவிதை எங்கே ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது’ என்ற ஆத்மா நாமின் கவிதை வரிகள்
நினைவுக்கு வருகின்றன. இந்தக் கவிதை எனது கவனமற்ற நேற்றில் ஆரம்பித்திருக்கலாம். போன
மாதம், போன வருடம், போன ஜென்மத்தில் என்று எங்கும் ஆரம்பித்திருக்கலாம். கவிதை எங்கு
ஆரம்பித்திருக் கிறது என்பது பெரும்பாலும் தெரியாமல் போய்விடுகிறது. எப்படி இருந்தாலும்,
அது முதல் மனிதனுக்கு முன்னால் போய்விட முடியாது என்று அறிவின் துணைகொண்டு சொல்லி
முடிக்கும்போதே சொன்னதன் மீது சந்தேகமும் வந்துவிடுகிறது. ஒரு கவிதை எங்கிருந்து
ஆரம்பிக்க முடியும். முதல் உயிரிலிருந்தா? அல்லது, ‘அப்போது ஏதுமற்றிருந்தது. சூனியமாக
இருந்தது. இருப்பதெல்லாம் அந்த சூனியத்தில் இருந்தது’ என்றார்களே அந்தச்
சூனியத்திலிருந்தா?

சாலை விதிகளில் துவங்கி மாபெரும் சித்தாந்தங்கள் வரை பலதும் திட்டவட்டமானவையாக
இருக்கும்போது, திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாதபடிக்கு இருப்பது கவிதையின்
அடிப்படைக் கூறாக இருக்கிறது.

கவிஞன் இனச்சார்பு, மதச்சார்பு, அரசியல் சார்பு, ஏன் மொழிச்சார்புகூட எடுத்துவிட முடியாது.
கவிதை கவிஞனை எதன்மீதும் சாய்ந்துகொள்ள அனுமதிப்பதில்லை. சுய காரணங் களுக்காகக்
கவிஞன் சார்பெடுக்க நேரிடும்போது, கவிதை சொல்லிக்கொள்ளாமல் அவனை விட்டுப்
போய்விடுகிறது. கவிதை கவிஞனை விட்டு விலகிப்போக முடியும். ஆனால் கவிஞன்
கவிதையைவிட்டு விலகிப்போய்விட முடியாது.

ஆர்வத்தாலும், அசட்டுத் துணிச்சலாலும் கவர்ந்திழுக்கும் மனத்தின் இருளுக்குள்
நுழைந்துவிடுவது. ஒரு கட்டத்துக்கு மேல் பயம் திகிலாகி உதறலெடுக்க வீட்டாரின் அன்பாலோ,
நண்பர்களின் கனிவாலோ மீள்வது என்று கழிந்திருக்கின்றன இந்த இருபத்தைந்து வருடங்களும்.
இருளுக்குள் நுழைய வேண்டியதில்லை. இருளில் கிடப்பவை வாழ்வின் போக்கில் தானாக
வெளிப்படுகின்றன. வெளிப்படும்போது தெரிந்து கொள்வதற்குக் கவனம் அவசியமாகிறது என்ற
வாழ்வின் முறைப்பாடு இப்போது புரிகிறது.

இந்த இடத்தில் வேறொன்றைப் பேசத் தோன்றுகிறது. கவிதை தன்னிடம் இருந்து வருவதாகக்
கவிஞன் நினைத்து விடுவதுண்டு. ஒரு காலத்தில் நான் நினைத்திருக்கிறேன். தானே கவிதையின்
தோற்றுவாய் என்று கவிஞனுக்குத் தோன்றக்கூடும். இது கவிஞனுக்கு நேரக்கூடிய மிகப் பெரிய
கோளாறுகளில் ஒன்று. இந்தக் கோளாறுக்கு வைத்தியம், எழுதிய கவிதையைப் பொறுமையாக
வாசித்துப் பார்ப்பது தான். பொறுமையாக வாசித்துப் பார்த்தால், நம் அறிவின் எல்லைக்கும்
அனுபவ எல்லைக்கும் அப்பாலிருந்து வந்த வரிகள் கவிதையில் இடம்பெற்றிருப்பது தெரியவரும்.
இதை மற்றவர் சொல்லித் தெளியவைத்துவிட முடியாது. படாதபாடு பட்டபின் மெதுவாக இந்தத்
தெளிவு கவிஞனை வந்து சேர் கிறது. என்னதான் கவிதை அவஸ்தைக்கு ஆட்படுத்திப் படாத பாடு
படுத்தினாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையையும் கவிதைதானே தந்தது. சாதாரணமாக
எவரும் நுழையத் துணியாத இடங்களுக்குள் நுழைந்து புழங்க முடிந்தது இந்த
வலிமையால்தானே? இந்த வலிமையால்தானே பெரிய தோல்விகளைத் தாங்கிக்கொள்ள
முடிந்தது. எதையும் நேரிடும் அசாத்தியத் துணிச்சல் இதனால்தானே கிடைத்திருக்கிறது.
கவிதை எனும் பிரம்மாண்டம் என் தலையிலிருந்து வருவதாக நினைத்துக்கொள்ளும் அளவுக்கு
மடையனல்ல நான். கோடானுகோடி மனிதர்களில் இருந்து கவிதை வெகு சிலரைத்
தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக வெளிப்படுகிறது. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்
ஒருவனாக இருக்கிறேன்.

கவிதை என்னிடமிருந்து வரவில்லை, என் வழியாக வெளிப்படுகிறது. என் வழியாக எது
வெளிப்பட வேண்டுமோ அது வெளிப்படுவதற்குத் தோதாக என் மனத்தையும், என் மொழியையும்
பராமரித்து வைத்துக்கொள்வது என் கடமை. இப்படியாகக் கவிதையின் முறைப்பாடும் புரிய
ஆரம்பித்திருக் கிறது.

ஆதியில் வார்த்தை இருந்தது என்கிறது பைபிள். இந்திய மரபிலும் வார்த்தையின் முக்கியத்துவம்
பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வாக்தேவி, வாக்கின் தேவி அதாவது சொல்லின் தேவி,
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் என்னைத் தீண்டி உள்ளே நுழைந்திருக்கிறாள். அப்போது
அவளுடைய வேகத்தையும், தாக்கத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத இளைஞனாக இருந்தேன்.
நான் திணறினேன், திமிறினேன், விட்டாளில்லை. இந்த இருபத்தைந்து வருடங் களும் கூடவே
இருந்து என்னைப் பழக்கிவிட்டாள். உங்களுக் குத் தெரிந்திருக்கும். வருடத்தில் ஒரேயொரு நாள்
அதுவும்

கண்ணாடிச் சட்டமிட்ட படத்தில் ரவிவர்மா வரைந்த ஓவியமாகப் பார்த்திருப்பீர்கள். பரீட்சை
ஹாலில் நுழைவதற்கு முன்னால் வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொண்டிருப்பீர்கள்!
வருடத்திற்கு ஒரு நாள் கண்களை மூடிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்கிறவளோடு
இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தாயிற்று. நிறைவாக இருக்கிறது.
அவள் இன்னும் என்னை இளைஞனாகத்தான் வைத் திருக்கிறாள். நான் கவிஞனாகிவிட்டேன்.
கவிதை எழுதி விட்டேனா என்றுதான் தெரியவில்லை. வாழ்க்கை இன்னமும் புதிதாகவே
இருக்கிறது. புதிது புதிதாக வந்துகொண்டே இருக் கின்றன. இன்னமும் என்னவெல்லாம்
பார்க்கப்போகிறேன், எதையெல்லாம் எழுதப்போகிறேன் என்று தெரியவில்லை. இப்போது
ஒருவகையான தெளிவோடிருக்கிறேன். ஒருவகை யான திளைப்புடன்

வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்தக் கொண்டாட்ட நேரத்தில் உங்களுடன் இந்த மகிழ்ச்சியைப்
பகிர்ந்துகொள்கிறேன்.

சொல்லின் செல்விக்கு வந்தனம்.