அநேக விளக்கங்களும் வேறுபட்ட பார்வைகளும் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ (One Hundred Year Of Solitude ) நாவலுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விளக்கங்களும் பார்வைகளும் நாவலுக்குப் பெருமளவு பொருந்திப் போகின்றன என்பது வியப்பளிப்பது. அதே சமயம், மிக இயல்பானதும் கூட. வெளியான ஆரம்ப நாட்களிலேயே மூல மொழியான ஸ்பானிஷிலும் பின்னர் மொழிபெயர்ப்பு வெளிவந்த ஆங்கிலத் திலும் ஒரு கிளாஸிக்காகவே கருதப்பட்டது. இந்த உடனடி ஏற்பு வியப் பளிப்பது. ஒரு படைப்பு தொடர்ந்து வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் காலப்பழைமை ஏறிய பின்னரும்தான் கிளாஸிக்காகக் கருதப்படுவது இலக்கிய நடைமுறை. ஆனால் முதல் வாசிப்பிலேயே செவ்வியல்தன்மை கொண்டதாக ஒரு படைப்பு இனங்காணப்பட்ட அனுபவம் மிக அரிது. டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ தாஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசாவ் சகோதரர்கள்’ , தாமஸ் மானின் ‘ மந்திர மலை’ போன்ற நாவல்கள் இந்தப் பெருமையைப் பெற்ற அபூர்வங்கள். அந்த வரிசையில் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ இடம் பெற்றது வியப்பளிப்பதுதான். இந்த வியப்பை மிக இயல்பான ஒன்றாக ஆக்கும் செவ்வியல் கூறுகளை நாவல் கொண்டிருந்தது; கொண்டிருக்கிறது. ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ வெளியான ஆரம்பத் தருணத்திலேயே மார்க்கேஸின் சக எழுத்தாளரான மரியா வர்கஸ் யோசா ‘இந்த நாவல் இலக்கிய உலகில் நிகழ்ந்திருக்கும் பூகம்பம்’ என்று குறிப்பிட்டார்.செவ்வியல் படைப்பின் இலக்கணமாகச் சொல்லப்படும் மதிப்பீடுகளில் பலவற்றை மார்க்கேஸின் நாவல் பிறவிக் குணங்களாகவே கொண்டிருந்தது. ஒரு செவ்வியல் படைப்பு அதன் வாசகனை மறு வாசிப்புக்கு வலியுறுத்தும். அந்த வாசிப்பின் விளைவாக முன்பிருந்த பார்வையை மாற்றவும் செய்யும் என்பன ஒரு செவ்வியல் ஆக்கத்துக்குச் சொல்லப்படும் அளவீடுகளில் சில. மூல மொழியில் வெளியாகி ஏறத்தாழ அரை நூற்றாண்டும் ஆங்கில மொழி பெயர்ப்பில் வெளியாகி நான்கரைப் பதிற்றாண்டுகளும் ஆன பின்பும் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ வெவ்வேறு விதமாக வாசிக்கப்படுகிறது. வெவ்வேறு பார்வைகளில் முன்வைக்கப்படுகிறது. வெவ்வேறு தளங்களில் விளக்கப்படுகிறது.காபோவின் தீவிர வாசகன் என்ற நிலையில் நாவலைக் குறைந்தது ஐந்து முறையாவது முழுமையாக வாசித்திருப்பேன்.அதிர்ஷ்ட வசமாக இந்த நாவலைத் தமிழாக்க நேர்ந்த வாய்ப்பில் மேலும் ஐந்து முறை வாசித்திருக்கிறேன். வாசகனாக வாசித்த ஒவ்வொரு முறையும் ஒரு விளையாட்டாக நாவலை அதன் முதன்மைப் பாத்திரங்கள் சிலரின் கோணத்தில் வாசித்துப் பார்த்திருக்கிறேன்.அவ்வாறு கோணங்கள் மாறும்போது நாவலின் காட்சிகள் வேறாகின்றன. அதன் தளங்கள் முற்றிலும் வேறாகின்றன; எதிர்பாராதவையாகின்றன. ஹோசே அர்க்காதியோ புயேந்தியா, மகோந்தா என்ற நகரத்தை உருவாக்கு கிறார். அவரது சந்ததி பல்கிப் பெருகி ஏழு தலைமுறைகளாகத் தொடந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்பு ‘அந்தக் கண்ணாடிகளின் நகரம் ( அல்லது கானல்களின் நகரம் ) காற்றால் நிர்மூலமாக்கப் படுகிறது’ . நாவலின் அநியாயச் சுருக்கம் இது. நூறு ஆண்டுகள் வாழ்ந்த மனிதர்களின் கதையைச் சொல்லுகிறது நாவல்.குறிப்பாக ஒருவருக்கொருவர் அறியாமல், ஒவ்வொருவரும் தனித்து அனுபவிக்கும் தனிமையைப் பற்றிப் பேசுகிறது. ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டதும் சமயங்களில் முரண்பட்டதுமான காரணங் களால் உருவாகும் இந்தத் தனிமையை அவரவரும் மாற்றிக் கொள்ளவும் அதிலிருந்து மீளவும் முயல்கிறார்கள். மீள முடியாமல் அழிகிறார்கள். ’ஏனெனில் தனிமையின் நூறு ஆண்டுகளுக்காக என்று விதிக்கப்பட்ட வம்சங்களுக்கு பூமியில் இரண்டாவது வாய்ப்புக் கிடையாது’ இதை கதையாடலின் அடித்தளமாகக் கருதலாம்.அதன் மீது வெவ்வேறு தளநகர்வுகள் சாத்தியமாகின்றன.

நாவலின் கதை ஒரு மீள்பார்வையில் தான் தொடங்குகிறது. மகோந்தாவை உருவாக்கிய ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவின் மகனான கர்னல் அவுரேலியானோ புயேந்தியாவின் நினைவுகூரலில் கதை முன் நகர்கிறது. அநேக ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியைச் சுட்டுக் கொல்லப் பணிக்கப் பட்ட படைவீரர் குழுவை எதிர்கொண்டபோது கர்னல் அவுரேலியானோ புயேந்தியா பனிக் கட்டியைப் பார்ப்பதற்காக அப்பா அழைத்துச் சென்ற வெகுகாலத்துக்கு முந்திய பிற்பகலை நினைத்துக் கொண்டார். அந்தக் காலத்தில் மகோந்தா, வெயிலில் உலர்த்திய செங்கற்களால் கட்டப்பட்ட இருபது வீடுகள் கொண்ட ஒரு கிராமமாக இருந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து முட்டைகள் போன்று பெரிதாகவும் பளபளப்பாகவுமிருந்த கற்கள் நிறைந்த படுகை நெடுக ஓடிய தெளிந்த நீருள்ள ஆற்றங்கரையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. உலகம் அப்போதுதான் தோன்றியிருந்தது என்பதானல் நிறையப் பொருட்களுக்குப் பெயர்களே இல்லை. சுட்டிக்காட்டி அவற்றைக் குறிப்பிட வேண்டியிருந்தது. என்று கர்னல் அவுரேலியானோ புயேந்தியாவின் பார்வைக் கோணத்தில் அல்லது நினைவுக் கோணத்தில் தொடங்கினாலும் மற்ற கதைமாந்தர்களின் பார்வைகள் அல்லது நினைவு களின் கோணங்களின் ஊடேதான் நாவல் வளர்ச்சியடைகிறது.இந்தப் பார்வைக் கோணங்களின் வழியே பார்க்கும் போது நாவல் நிறமாற்றம் அடைகிறது.

மகோந்தாவின் நிறுவனரான ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவின் கோணத்தில் இது ஒரு வம்சத்தின் கதை. கர்னல் அவுரேலியானோ புயேந்தியாவின் கோணத்தில் ஒரு சாகசத்தின் சரித்திரம். மகோந்தாவை உருவாக்க மூலகாரணமாக இருக்கும் பாத்திரம் புருடென்சியோ அகுய்லர். தனது ஆண்மையைக் கேலி செய்த புருடென்சியோ அகுய்லரை நேர்ச் சண்டையில் ஈட்டியால் குத்திக் கொல்கிறார் ஹோசே அர்க்காதியோ புயேந்தியா. குரல்வளையில் ஈட்டிக் காயத்துடன் தன்னை விடாமல் துரத்தும் புருடென்சியோ அகுய்லரிடமிருந்து விலகிச் சென்று வாழும் எண்ணத்தில் வேறு இடம் தேடிச் சென்று புதிய இருப்பிடத்தை உருவாக்குகிறார் ஹோசே அர்க்காதியோ புயேந்தியா. ஆனால் அங்கும் அவரையும் குடும்பத்தையும் பின் தொடர்கிறது புருடென்சியோ அகுய்லரின் ஆவி. அந்த ஆவியின் கோணத்தில் பார்த்தால் இது ஒரு பழிவாங்கலின் கதை.ஹோசே அர்க்காதியோ புயேந்தியா வின் மனைவி உர்சுலா இகுவரான்.தனது குடும்பத்தைச் சேர்ந்த எல்லாப் பெண்களையும்போல உர்சுலாவுக்கும் திருமணத்தில் நாட்டமிருந்தாலும் உடலுறவில் அச்சம் இருக்கிறது.அவள் மணக்க நேர்வது ரத்த உறவுள்ள ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவை. ஒரே ரத்தத்தைச் சேர்ந்தவர்கள் உடலுறவு கொண்டால் பன்றி வாலுடன் பிள்ளை பிறக்கும் என்ற மரபொழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் உர்சுலா தான் வாரிசு ஈன்றதைக் கழுவாய் இல்லாத பாவமாகவே கடைசிவரை நம்புகிறாள். அவளின் கோணத்தில் கதையை அணுகினால் பெண்ணின் ஆறாத் துயரத்தின் சித்திரிப்பாக நாவலைச் சொல்லக் கூடும். ஏனோ இந்தக் கோணத்தில் இதுவரை பார்க்கப்படவில்லை. வேறுபட்ட இந்தக் கோணங்களிருந்து பார்க்கும்போது நாவலின் தளங்கள் இன்னும் வலுவாகின்றன. கூடுதல் விளக்கங்களுக்கு நாவல் இடம் கொடுக்கிறது. நதிகளை வரவேற்கும் கடல்போல ஏற்றுக் கொள்கிறது. தொன்மக் கதையாக, அரசியல் பிரதியாக, ஆன்மீக விசாரமாக, மாயப் புனைவாக, விவிலியத்தின் தலைகீழ்ப் பதிவாக, வரலாற்று ஆவணமாக தேர்ந்த வாசகனுக்குப் பொருள்படும் நாவல் ஆரம்ப வாசகனுக்கு எளிய, சுவாரசியமான கதையாகவும் நிலைபெறுகிறது.

அப்படியானால் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ யாரை மையமாகக் கொண்ட பிரதி? எந்தப் பாத்திரத்தின் குரல் நாவலில் உரக்கக் கேட்கிறது? யாருடைய சார்பை நாவல் வலியுறுத்துகிறது? பாத்திரங்களா, நாவலாசிரியரா யார் கதையை முன்நகர்த்துகிறார்கள்? ஒருவிதத்தில் இந்த நாவலின் கதை காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் குடும்ப வரலாற்றை ஒட்டியது. கர்னல் ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவின் நெருங்கிய நண்பராக வரும் ஜெரினால்தோ மார்க்கேஸ் பாத்திரமும் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்கு முன்வடிவமாகக் கருதப்பட வேண்டிய ‘லீஃப் ஸ்ட்ராம்’ ( Leaf storm) இல் வரும் வயோதிக கர்னல் பாத்திரமும் இந்த ஊகத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றன.அதை வலுவாக நம்பினால் கதையை முன்னெடுத்துச் செல்பவர் நாவலாசிரியரான மார்க்கேஸ்தானா? என்ற துணைக் கேள்வியும் கிளைக்கிறது.

நாவல் தமிழாக்கத்தைப் புதிய பதிப்புக்காகச் செப்பனிட மேற்கொண்ட மறுவாசிப்பில் இந்தக் கேள்விகள் எழுந்தன. இதுபோன்ற கேள்விகள் எழக் கூடும் என்று காபோ முன்பே ஊகித்திருந்திருக்க வேண்டும். அதை இப்படிச் சொல்லியிருந்தார். ’இந்த நாவல் ஒற்றைக் கதைமையத்தைக் கொண்டதோ அல்லது குறிப்பாக ஒரு காலத்தைப் பின்னணியாக்க் கொண்டதோ அல்ல; வரலாறு நேர் சுழற்சியாக முன்னேறும் ஒன்றல்ல; பல வட்டங்களாக விரிவடைவது. எனவேதான் எந்தக் குறிப்பிட்ட பாத்திரத்துக்கோ, எந்தக் குறிப்பிட்ட காலத்துக்கோ நான் முக்கியத்துவம் அளிக்கவில்லை’. காபோவின் ஒப்புதல் நாவலுடன் பொருந்திப் போகும் எல்லா விளக்கங்களுக்கும் நியாய மளிக்கிறது. இதை ஒரு நுட்பமான வாசகன் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்கு வாய்த்திருக்கும் கோடிக் கணக்கான வாசகர்கள் அதை எப்படி ஏற்கிறார்கள்?அரை நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்பும் நாவல் வாசக ருசிக்கு உகந்ததாக இருப்பது எப்படி? அது வாசகனின் பிரதியாக மாறுவது எப்படி? மறு வாசிப்புக்கு இடையூறாக முளைத்த இந்தக் கேள்விகளுக்கும் பதில் தேடிக் கொண்டே செம்மை யாக்கத்தில் ஈடுபட்டிருந்தேன். பதில் அகப்படவில்லை. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் மறைந்தார். காபோவின் நல்லடக்கத்துக் காகத் திரண்ட வாசகர் கூட்டத்தின் காணொளிப் பதிவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கேள்விக்கான பதில் புலப்பட்டது. இறுதி ஊர்வலத்துக் காகக் காத்து நின்ற வாசகர்களிடையே பலர் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ ‘காலரா காலத்தில் காதல்’ ஆகிய நாவல்களின் பகுதிகளை வாசித்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள்.அதில் ஒரு இளம் வாசகியின் கூற்றில் மேற்கண்ட கேள்விகளுக்கான பதில் இருந்தது. ’காபோவின் படைப்புகளில் எனக்கு மிகவும் நெருக்கமானது ‘காலரா காலத்தில் காதல்’தான். அது எனக்குத் தெரிந்த கதையை அல்லது எனக்கு அணுக்கமானது என்று நான் நம்பும் கதையைச் சொல்கிறது.ஆனால் நான் பலமுறை படித்த நாவல் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’தான்.எனக்குத் தெரியாத பலருடைய கதைகளை அது எனக்குச் சொல்கிறது.’காலரா காலத்தில் காதல்’ நாவலை ஒரு முறை படித்ததுமே நான் ஈர்க்கப்பட்டு விட்டேன்.’தனிமையின் நூறு ஆண்டுகளை’ ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஈர்க்கப்படுகிறேன். மறு வாசிப்பில்லாமல் நீங்கள் இந்த நாவலை உணர முடியாது’. அந்த அநாமதேய வாசகியின் அவதானிப்பு கேள்விகளின் சிக்கலை அவிழ்த்தது. புதிய விளக்கத் துக்குக் கொண்டு சென்றது. மறுவாசிப்பைக் கோரும் படைப்புத்தான் செவ்வியல் ஆக்கம் என்பதையும் அது பன்முக விளக்கங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் இன்னும் ஆழமாகப் பதியவைத்துக்கொள்ள முடிந்தது. இது பொதுவானது.‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலின் முதல் வாசிப்பு முழுமையடையும் அதேநொடியில் தான் அதன் மீதான மறு வாசிப்பும் தொடங்குகிறது.இது பிரத்தியேகமானது.புயேந்தியா வம்சத்தின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த கர்னல் அவுரேலியானோ புயேந்தியா முதன்முறையாகப் பனிக்கட்டியை பார்க்கப் போனதை நினைவுகூரும் தருணத்தில் கதை தொடங்குகிறது. ஏழாம் தலை முறையினான அவுரேலியா பாபிலோனியா ஏற்கனவே எழுதி வைக்கப் பட்டிருக்கும் பட்டயங்களில் தனது வம்சத்தின் கதை எழுதப்பட்டிருப்பதை வாசிக்கும் சந்தர்ப்பத்தில் முடிகிறது. அந்த வம்ச வரலாற்றில் தன்னுடைய விதியும் எழுதப்பட்டிருப்பதை அவன் தெரிந்துக் கொள்கிறான். அதை வாசித்து முடித்த மறுகணம் தனது இருப்பு இல்லாமல் போகும் என்பதையும் புரிந்து கொள்கிறான். மகோந்தா என்ற கண்ணாடி நகரத்து மனிதர்களில் ஒருவனாக அவனும் இல்லாமற் போகிறான். ஆனால் அந்த நகரமும் அதில் நிகழ்ந்த நூறு ஆண்டுக்கால வாழ்க்கையையும் வாசகன் தெரிந்து கொள்ள முடிகிறது. எப்படி? அவுரேலியானோ பாபிலோனியா வாசித்த அதே பிரதியைத்தான் வாசகர்களான நாமும் வாசிக்கிறோம்.அந்தப் பிரதி நாவலின் முதன்மைப் பாத்திரங்களில் ஒன்றான மெல்குயாதெஸ் எழுதி வைத்த பிரதி. மகோந்தா நகரத்தை நிர்மாணித்த ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவின் தோழனும் ஞான வழிகாட்டியுமான நாடோடிக் கிழவன் மெல்குயாதெஸ் நாவலின் அழிவற்ற பாத்திரம். இறந்தும் மீண்டும் உயிர்த்தும் மறுபடியும் மரித்தும் ஆவியுருவாகப் புத்துயிர் பெற்றும் ஏழு தலைமுறைகளினூடே நூறு ஆண்டுகளைக் கடக்கும் அந்த நாடோடிக் கிழவனின் கதையாடலைத்தான் நாம் வாசித்திருந்திருக்கிறோம். நூறு ஆண்டுகள் கதாபாத்திரமாகவே இருந்த மெல்குயாதெஸ் கதை முடியும் இடத்தில் கதை சொல்லியாக மாறுகிறான்.இப்போது நமக்கு மகோந்தாவில் வாழ்ந்த மனிதர்களின் நூறு வருடங்களின் கதை தெரியும்.அதையொட்டி மீண்டும் வாசிக்கும்போது மார்க்கேஸின் நாவல் நமது வாசிப்புக்குரியதாக உருமாற்றம் அடைகிறது. புதிய பார்வைகளுக்கும் விளக்கங்களுக்கும் தன்னை ஒப்புக் கொடுக்கிறது. ‘நிலைபெற்ற எதார்த்தத்தின் வெவ்வேறு வடிவங்களைத் தனது படைப்புக் கற்பனையால் விடுவிக்கிறார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.அதை நாம் புரிந்து கொள்ள நாவலை மீண்டும் வாசிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்துகிறார்.தவிர்க்கவியலாத மறுவாசிப்பைக் கோரும் பிரதி இந்த நாவல்’ என்று மெக்ஸிக நாவலாசிரியரான கார்லோஸ் புயெந்தெஸ் குறிப்பிட்டார்.’தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலின் செவ்வியல் தன்மையைப் பாராட்டிச் சொன்ன வாசகங்கள் இவை. அதே வாசகங்கள்தாம் நாவலைப் புதிய பார்வையில் பார்க்கவும் அதைப் பற்றிப் புதிய விளக்கங்களைக் கண்டடையவும் தூண்டுகின்றன.தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் ஆங்கில மொழியாக்கம் 1970 ஆம் ஆண்டு
வெளியானது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் உலக அரங்கில் முன்னணி எழுத்துக் கலைஞரும் வாசக ஆதரவு பெற்றவரும் ஆனார். அவரையும் அவரது படைப்புகளையும் முன்னிருத்தியே லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றி ஆய்வுகளும் ஒப்பாய்வுகளும் வெளிவந்தன. மார்க்கேஸின் படைப்புகளைப் புதிய விளக்கங்களின் ஒளியில் அறிமுகப்படுத்திய நூல் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்: புதிய வாசிப்புகள் ( Gabriel Garcia Marquez: New Readings ) என்ற தொகுப்பு. keeகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் 1987 இல் வெளியிட்ட இந்த நூலில் அந்த ஆண்டுவரை வெளிவந்த மார்க்கேஸின் எல்லாப் படைப்புகளைப் பற்றியும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. வெறும் குறுகுறுப்பில் நூலின் பிற்சேர்க்கையில் கொடுக்கப் பட்டிருந்த விவரப்பட்டியலைத் துளாவியபோது வியப்புத் துள்ளியது. ஆங்கிலத்தில் மட்டும் மார்க்கேஸின் படைப்புகளைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகச் சரியாக அறுபத்து ஐந்து. அவற்றில் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலை முன்னிலையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டவை மூன்றில் ஒரு பங்கு. இலக்கிய அடிப்படையிலும் பண்பாட்டுச் சார்பிலும் கலை நோக்கிலும் வாழ்வின் பிற துறைகள் சார்ந்தும் பார்வைகள் முன் வைக்கப்பட்டிருந்தன; புதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்தன. மார்க்கேஸின் வாசகனாகத் தலைநிமிரச் செய்த பெருமித நொடிகளை அந்தத் தேடல் எனக்குப் பரிசளித்தது.

’தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலின் இறுதிப் பகுதியில் இடம் பெறும் சித்தரிப்பை முகாந்திரமாகக் கொண்டு நாவலை விவிலியத்துடன் ஒப்பிட்ட ஒரு ஆய்வு சட்டென்று ஈர்த்தது. ’பைபிளில் சொல்லப்பட்ட ஊழிக் காற்றின் சீற்றத்தில் அகப்பட்ட மகோந்தா புழுதியும் கூளங்களும் வட்டமடிக்கும் சுழற்காற்றுப் பிரதேசமாக மாறியிருந்தது’ என்ற வரிகளைsச் சலுகையாக எடுத்துக் கொண்டு ஓர் ஆய்வு நாவலை விளக்கியிருந்தது. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள ‘ஆதியாகமத்தையே காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தனது நாவலுக்கு முன் மாதிரியாகக் கொண்டிருக்கிறார்’ என்று அந்த ஆய்வு நிறுவ முனைகிறது. உலகின் ஆதி மனிதர்களாகக் கருதப்படும் ஆதாமும் ஏவாளும் உறவு கொண்டு பிந்தைய சந்ததிகளை உருவாக்கு கிறார்கள். அந்த சந்ததிகள் இடங்களை உருவாக்குகிறார்கள். இடங்களுக்காக மோதிக் கொள்கிறார்கள். உறவுகளை உருவாக்குகிறார்கள். உறவுகளின்பேரில் போரிட்டுக் கொள்கிறார்கள். ஒரு ஊழியில் அழிகிறார்கள். மார்க்கேஸும் அதையே தனது படைப்பில் காட்டுகிறார்கள். யாரும் அறியாத பிரதேசத்தில் ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவும் உர்சுலாவும் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்.ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு நகரத்தை நிர்மாணிக்கிறார். பிள்ளைகள் வளர்ந்து உறவுகளை ஏற்படுத்துகிறார்கள். அந்த உறவுகளைச் சொல்லி முரண்படுகிறார்கள். சண்டையிடுகிறார்கள். இறுதியில் காற்றில் கரைந்து காணாமலாகிறார்கள். மேலோட்டமான அர்த்தத்தில் இந்த ஒப்பீடு சரியானதுதான்.ஆனால் ஆழமில்லாதது என்று தோன்றியது. பெரும் போக்காகப் பார்த்தால் ’நிரந்தரமானவர்களாகப் போற்றப்படும் இறையம்சத் தினரை மானுடவயமாக்கும் பணியை விவிலியம் செய்தது; நிரந்தத் தன்மை யற்ற மனிதர்களை நிரந்தரமானவர்களாக மாற்றும் தெய்வீகச் செயலை காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் செய்திருக்கிறார் என்று புதிய விளக்கத்தை முன்வைக்கலாம். சற்று அத்துமீறி யோசித்தால் ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவை யோசேப்பாகவும் உர்சுலா இகுவரானை மரியாளாகவும் கர்னல் அவுரேலியானோ புயேந்தியாவை யேசு கிறிஸ்துவாகவும் உருவகப் படுத்தி விட முடியும். ஆனால் மார்க்கேஸின் நாவல் பிரதி அதன் உள்ளடக்கத்தில் முற்றிலும் இம்மையியல் சார்ந்தது. எதார்த்தம் சார்ந்த மாயநிலையை அது பெருவிருப்பத்துடன் அனுமதிக்கிறது.ஆனால் எதார்த்தத்தின் பொய்மையை மூர்க்கமாக விலக்குகிறது.

இதே நூலில் இடம் பெற்றிருக்கும் இன்னொரு ஆய்வு உண்மையாகவே புதிய பார்வையைக் கொண்டது. புதிய விளக்கங்களுக்கு இட்டுச் செல்வது. மிக நவீனமானது. முற்றிலும் இம்மையியல் சார்ந்தது. ‘தனிமையின் நூறு ஆண்டுக’ளில் – மாய எதார்த்தவாதமும் முறைபிறழ் காமமும்’ (Magical realism and the theme of incest in One Hundred Years Of Solitude )Mam என்ற எட்வின் வில்லியம்சனின் ஆய்வு மார்க்கேஸின் நாவலைப் புதிய கோணத்தில் பார்க்க உதவுகிறது. மகோந்தா என்ற கற்பனை நகரத்தின் இயக்கத்தைத் தீர்மானிப்பது அடையாளத்துக்கும் வேற்றுமைக்குமான எதிர்நிலைகள்தாம் என்பது ஆய்வின் முடிவு. இந்த எதிர்நிலைகள் முறைபிறழ் காமத்தின் உந்துதலால்நிகழ்கின்றன என்று கண்டடைகிறது ஆய்வு. தனிமையின் நூறு ஆண்டுகளின் கதையாடல் உத்தியான மாய எதார்த்த வாதத்தைப் போலவே முறைபிறழ் காமமும் வெவ்வேறு வகைமைகளை ஒன்றிணைக்கிறது. அதன் மூலம் சமூக நிறுவனத்துக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. கலாச்சார ஒழுங்கைக் கேள்விக் குட்படுத்துகிறது. ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்குமிடையில் நிலவும் வித்தியாசத்தை நியாயப்படுத்துகிறது. இந்த அளவில் மாய எதார்த்தவாதமும் தன்னிருப்பு ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று நிறைவு செய்வனவாகின்றன. மாய எதார்த்த வாதம் நடப்பியலை அப்படியே பிரதிபலிப்பதில்லை. அதேபோன்று முறை பிறழ் காமம் உறவுகளின் நிறுவனத்தன்மையை அடையாளப்படுத்துவ தில்லை. அதனால் சமூக ஒழுங்கும் குடும்பமுறையும் சிக்கலுக்குள்ளாக் குகின்றன. அதனால் சமூக ஒழுங்கைப் பாதுகாக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன. ஆனால் மனிதனின் தன்னிருப்பு இயல்பு அதை மீறவே விரும்பு கிறது. அந்த மீறலும் அடக்குமுறையுமே சரித்திரமாகின்றன. வரலாற்றின் பொதுப் புத்தியை அல்ல; அதன் மறைத்து வைக்கப்பட்ட மனத்தை வெளிப் படுத்துபவன் தானே கலைஞன்? அந்த நிலையில்தான் காபோ எதார்த்தங் களின் வேற்றுமைகளின் மீது கற்பனையை ஸ்தாபிக்கிறார். வரலாற்றை நேர் சுழற்சியாக அல்லாமல் பல வட்டங்களின் இயக்குதளமாகச் சித்தரிக்கிறார். முறையான காமத்தின் புளகாங்கிதத்தில் அல்லாமல் முறைபிறழ் காமத்தின் அபாயச் சுழலில் மனிதர்கள் தத்தளிப்பதைக் காட்டுகிறார். ’தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் ஆசிரியரே சொல்லுவதுபோல ஒரே கதைமையத்தைக் – தீமை (theme) கொண்ட படைப்பு அல்ல. முதன்மையா கவும் துணையாகவும் வெவ்வேறு கதைமையங்கள் அதில் செயல்படுகின்றன. புயேந்தியா வம்சத்தின் கதையைச் சொல்லிச் செல்லும்போதே மகோந்தா வுக்கு வந்து போகும் ஜிப்சிகளின் விசித்திரங்களையும் பேசுகிறது. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.முதன்மையான மையங்களுக்கு நிகராகவே துணைமையங்களையும் நாவல் முழுவதும் பார்க்கலாம்.

மிக முதன்மையான நான்கு கதைமையங்கள் (அல்லது கதைக் கருக்கள்) தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் செயல்படுகின்றன.மாயம், தனிமை, காலம்,முறைபிறழ் காமம்.இவற்றில் நாவலாசிரியர் அதிமுதன்மையாகக் கருதுவது மனிதர்களின் தனிமையைத்தான்.நாவலின் தலைப்பும் அதைத் தானே அழுத்தமாகச் சொல்கிறது.இந்தத் தனிமையை மேலும் ஆழமான தாகவும் இருண்டதாகவும் சிக்கலானதாகவும் மனிதர்கள் விடுபட முடியாத விதியாகவும் மாற்றவே பிற மையங்கள் செயல்படுகின்றன. கதையாடலின் எதார்த்த தளத்தை இன்னும் விரிவாக்கவும் நுட்பமாக்கவுமே அதன் மீது மாய நிகழ்வுகள் புனையப்படுகின்றன.நாவலின் முக்கியப் பாத்திரமான அழகி ரெமேதியோஸ் உலரப்போட்ட படுக்கை விரிப்புகளுடன் பறந்து ஆகாயத்தில் மறைந்து போகிறாள். இந்த மாயக் காட்சியின் அடித்தளத்தில் எதார்த்தமான சிக்கல் இருக்கிறது.அழகி ரெமேதியோஸ் மீது அடங்காத பொறாமை கொண்ட ஃபெர்னாண்டாவின் எதிர்பார்ப்பு அவள் எப்போது ஒழிந்து போவாள் என்பதுதான்.அவளுடைய உட்கிடக்கை நிறைவேறும் உச்ச கணமே மாயப் புனைவாகச் சித்தரிக்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் சலனத்தையொட்டி நிர்ண யிக்கப்பட்ட காலம் அல்ல; மார்க்கேஸ் கதையாடலில் சுட்டும் காலம். அது மனித மனக்கடிகையில் நிறையவும் குறையவும் செய்யும் அநாதியான பொழுது. அதன் முற்றான உதாரணம் ஜிப்ஸி மெல்குயாதெஸ். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் மகோந்தாவுக்கு வரும் நாடோடிகளில் ஒருவனாகச் சொல்லப்படும் மெல்குயாதெஸ் புயேந்தியா வம்சத்தினரின் ஏழாவது தலைமுறைவரை வருகிறான்.காலத்தின் அடையாளமாக. இன்னொரு முதன்மைக் கதைமையமான தனிமையும் முறைபிறழ் காமமும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுப்பவை.ஒருவகையில் முறைபிறழ் காமமே தனிமையை வலுவாக்குகிறது. காமமே அவர்களைத் தனியர்களாக்குகிறது. போர், தலைமறைவு, பயணம், பகை, துவேஷம் ஆகியவற்றின் மூலம் தனிமைப்படுபவதை விட இந்த வகையில் ஏகாந்திகளாகிறவர்கள் இவர்கள்.புயேந்தியா வம்சத்தின் வரலாறே முறைபிறழ்ந்த காமத்திலிருந்துதான் தொடங்குகிறது. ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவும் உர்சுலாவும் ரத்தத் தொடர்புடையவர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மணந்து கொண்டால் பன்றி வாலுடன் பிள்ளை பிறக்கும் என்ற அச்சத்தால் உறவுக்கு மறுக்கும் உர்சுலாவை ஹோசே அர்க்காதியோ புயேந்தியா கிட்டத்தட்ட வன்கலவி மூலம்தான் அடைகிறார்.குடும்பத்தின் மூலத் தீவினை அங்கே ஆரம்ப மாகிறது. அது ஒவ்வொரு தலைமுறையிலும் தொடர்கிறது.இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஹோசே அர்க்காதியோ தன்னுடைய சகோதரி முறையுள்ள ரெபேக்காவை மணந்து கொள்கிறான்.மூன்றாம் தலைமுறையினனான அவுரேலியானோ ஹோசே அமரந்தாவை மணக்கிறான். அவள் அவனுக்கு அத்தை. ஐந்தாவது தலைமுறையினரான மேமே என்ற ரெனேட்டா ரெமேதியோஸ் சகோதரனான மவுரேசியோ பாபிலோனியாவை மணம் புரிந்து கொள்கிறான்.அவுரேலியானோவும் அமரந்தா உர்சுலாவும் ஆறாவது தலைமுறை வாரிசுகள்.இருவரும் மணந்து புயேந்தியா குடும்பத்தின் கடைசி வாரிசைப் பெறுகிறார்கள். புராதன அச்சுறுத்தலுக்கு ஏற்றபடி அந்தக் குழந்தை பன்றி வாலுடன் பிறக்கிறது. வம்சத்தின் கடைசி புயேந்தியா. வால் முறிக்கப்பட்ட அந்தக் குழந்தையை யுகத்தின் எறும்புகள் அரித்துத் தின்று விடுகின்றன. வம்சத்தின் முதல்வன் மரத்தில் கட்டப் படுகிறான்; கடைசியானவன் எறும்புகளால் உண்ணப் படுகிறான் என்று பட்டயங்களில் எழுதியிருப்பதைப் படிக்கும் அவுரேலியானோ அப்போதுதான் அறிந்து கொள்கிறான். தான் சகோதரி என்று நினைத்து மணந்து உறவு கொண்டது தனது சிற்றன்னையை என்பதை. ஒரு நூற்ற்றாண்டுக்காலத் தனிமையை அவன் உணரும் நொடியில் வம்சமே அழிந்து விடுகிறது. பேசும் கண்ணாடி முன்னால் நின்று பார்ப்பதைப்போலத் தனது குடும்பத்தின் வரலாற்றைப் பார்க்கும் அவுரேலியானோவின் மனதில் பாவ உணர்வோ குற்ற உணர்ச்சியோ எழுவதில்லை. மாறாக தானும் அழியப் போகும் கணத்திற்கு முந்தைய முடிவற்ற தனிமையையே அனுபவிக்கிறான். அவன் வாயிலாக வாசகர்களும்.தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் அறிமுகத்தை ‘இலக்கியத்தில் நிகழ்ந்த பூகம்பம்’ என்றார் யோசா. மறு வாசிப்புகளுக்குப் பின்பு நாவலை ’அபாய வசீகரம்’ என்று வியந்து சொல்லத் தோன்றுகிறது.எட்வர்ட் வில்லியம்சன் ‘நிலுவையிலிருக்கும் எல்லா மதிப்பீடுகளையும் மார்க்கேஸ் புரட்டிப் போட்டிருக்கிறார். முறைபிறழ் காமத்தை நாவலில் அவர் கையாளும் விதத்தில்தான் நாவல் இத்தனை செறிவானதாக மாறியிருக்கிறது’ என்று விளக்கம் கூறுகிறார். ஒருவேளை அது சரியாக இருக்கலாம். ஒரு இனம் உருவாகும் கதை, அது மேற்கொள்ளும் இடர்ப்பாடுகள், ஒரு நகரம் உருவாகி நிலை பெறுவது, அந்த நகரத்தை ஆதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பது, சாதாரண மனிதர்கள் தங்கள் உரிமைக்காகக் கூட்டமாக மரிப்பது என்று பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும் நாவலில் மனிதனின் ஆதார வேட்கைகள் அவனை ஆட்டி வைப்பதைப் பற்றியும் சொல்ல இடமிருக்கிறது என்பது அவரது வாதம் இதை நாவல் ஏற்றுக் கொள்கிறது. நாவலாசிரியர் ஏற்றுக் கொண்டிருப்பாரா? தெரியாது. ஆனால் புதிய விளக்கங்களுடன் வாசித்துப் பார்க்க அவருடைய வார்த்தைகள் அனுமதிக்கின்றன. ‘எனது எந்தப் புத்தகத்திலும் நிஜமான அனுபவத்துடன் தொடர்பில்லாத ஒற்றை வரிகூட எழுதப்படவில்லை. தூலமான எதார்த்ததுடன் எப்போதும் அதற்கு உறவு இருக்கிறது’ என்பது காபோவின் ஒப்புதல் வாசகம்.எந்தப் புனைவையும் விட மாயத்தன்மை மிகுந்தது எதார்த்தம்தானே?அபாயகரமானதும் வசீகரமானதும் கூட இல்லையா? என்று காபோவிடம் கேட்டிருக்க வேண்டும்.அவர் மறுமொழியாக என்ன சொல்லியிருக்கக் கூடும்? ஆமாம் என்பதைத் தவிர.