உலகின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். ‘அமெரிக்காவின் செகாவ்’ என்று
அழைக்கப்படும் இவர் அமெரிக்காவின் வடமேற்கு பசிபிக் கரையோர நகரமான
கிளாட்ஸ்கனியில் 1938ல் மிகச் சாதாரணமான, கீழ்மத்திய வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார்.
தந்தைக்கு மரஇழைப்பகத்தில் வேலை. மகன் பள்ளியை முடித்ததும் இழைப்பகத்திலேயே ஒரு
வேலைக்குச் சேர்த்துவிட்டால் தனது கடமை ஓய்ந்தது என்று நினைத்தவர். ஆனால் இளம்
கார்வருக்கு இலக்கியத்தில் ஆர்வம். தந்தை வாங்கிக்கொடுத்த மரஇழைப்பக வேலையில்
தாக்குப்பிடிக்க முடியாமல் இலக்கியப் பயிற்சி வகுப்பில் சேர்கிறார். பள்ளிக்காதலியை அந்த
இளம் வயதிலேயே மணந்துகொள்கிறார். இருவருக்கும் வயது 17க்குள். இருவரும் வேலை
பார்த்துக்கொண்டே படிக்கிறார்கள். கடுமையான உழைப்பு கார்வரை மதுவில் இளைப்பாற
வைக்கிறது. பண நெருக்கடி, 18 வயதிலேயே தந்தையாகி குழந்தையை வளர்க்கவேண்டிய
நிர்ப்பந்தம், இளம் மனைவியோடு ஏற்படும் பூசல்கள், விரும்பியபடி எழுத்தில் கவனம் செலுத்த
முடியாத துயரம் இவையெல்லாம் இளைப்பாறலுக்காக நாடிய குடிப்பழக்கத்துக்கு அடிமையாக
வைக்கிறது. விரைவிலேயே மிக மோசமான குடி நோயாளியாகிப்போகிறார்.மனைவியும்
குழந்தையும் பிரிந்துவிடுகின்றனர்.இவ்வளவு நெருக்கடியிலும் கார்வரிடமிருந்து அபாரமான
சிறுகதைகளும் கவிதைகளும் பிறந்துகொண்டிருக்கின்றன.

70களின் பிற்பகுதியில் குடிநோய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவர்கள்
அவர் ஆயுளுக்கு 6 மாதம் கெடு விதிக்கின்றனர். அதன்பிறகு நடந்தவை ஒரு முழு தலைகீழ்
மாற்றம்! கடும் மனவுறுதியோடு குடிப்பழக்கத்தை விட்டொழிக்கிறார். சிகிச்சை மையத்திலிருந்து
வெளியேறியதும் கலந்துகொண்ட ஓர் இலக்கிய விழாவில் டெஸ் கல்லஹர் என்ற பெண்கவிஞரை
சந்திக்கிறார். அது காதலாக மாறி திருமணத்தில் முடிகிறது. பிறந்ததிலிருந்து கொந்தளிப்பும்,
குழப்பங்களுமாகக் கழிந்த நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகு முதல்முறையாக கார்வரின் வாழ்வில்
வசந்தம். மிக இனிமையாகச் செல்கிறது வாழ்க்கை. படைப்பெழுச்சியின் மிக உன்னதமான
கட்டமாக வாய்க்கிறது இந்தப்பத்தாண்டுகள். இந்த காலகட்டத்தில் கார்வர் படைத்த சிறுகதைகள்
உலகின் ஆகச்சிறந்த சிறுகதைகளின் வரிசையில் இடம்பெறுகின்றன.
இந்தத் தேனிலவு 88ம் வருடம் குரூரமாக முடிவுக்கு வருகிறது. மரணத்தின் வாசல்வரை சென்று
மீண்ட கார்வருக்கு இம்முறை காலன் நுரையீரல் புற்றுநோயைப் பரிசாகத் தருகிறான். கார்வர்
அதிக நாட்கள் கஷ்டப்படவில்லை. அவ்வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி உலகின் சிறுகதை
மேதைகளில் ஒருவரான கார்வர் ஓய்ந்து போகிறார்.
அவர் நோயுற்றிருந்த நேரத்தில் எழுதிய கவிதையே இங்கு இடம்பெற்றிருக்கும் GRAVY (கொடை).

ஏதோ நடந்து கொண்டிருக்கிறது

எனக்கு ஏதோ நடந்து கொண்டிருக்கிறது
என் உணர்வுகளை நான்
நம்புவதாக இருந்தால்
அன்பே, இது மற்றுமொரு கவனத் திருப்பல் அல்ல
இன்னமும் அதே பழைய தோலுக்குள்தான்
இறுக்கமாக கட்டப்பட்டிருக்கிறேன்
என்ன ஆனபோதிலும்
அதே பரிசுத்த எண்ணங்கள்
ஆர்வமிக்க ஏக்கங்கள்
சுத்தமும் ஆரோக்கியமுமான குறி
ஆனால் என் பாதங்கள்
தம்மைப்பற்றியும்
என் கைகள், இதயம், ரோமம், கண்களோடு
அவற்றிற்கு ஏற்பட்டிருக்கும்
புதிய உறவைப் பற்றியும்
பேசத் தொடங்குகின்றன.

எனக்கு ஏதோ நடந்துகொண்டிருக்கிறது
என்னால் முடிந்திருந்தால்
இதுபோல உனக்கு நேர்ந்திருக்கிறதா
என்று கேட்டிருப்பேன்
ஆனால் இன்றிரவு நீ ஏற்கனவே
வெகுதூரம் போய்விட்டிருக்கிறாய்
உனக்கு கேட்டிருக்காது
மேலும் என் குரலும் பாதித்திருக்கிறது

எனக்கு ஏதோ நடந்து கொண்டிருக்கிறது
என்றாவது சீக்கிரம் விழித்தெழுந்தபின்
இந்தப் பிரகாசமான
மத்தியத்தரைக்கடல் வெயிலில்
என்னைப் பார்க்கும்போது
எனது இடத்தில் பெண்ணொருத்தி இருந்தால்
ஆச்சரியப்படாதே
அல்லது அதைவிட மோசமாக
வெள்ளை முடியோடு
வினோதமாக ஒருவன்
கவிதை எழுதிக்கொண்டு,
சொற்களை உருவாக்க முடியாதவனாக,
வெறுமனே உதடுகளை மட்டும் அசைத்து
உன்னிடம்
எதையோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருப்பதைக் கண்டால்
ஆச்சரியப்படாதே.

அவசியமில்லை

மேசையில் ஒரு காலியிடம் தெரிகிறது.
யாருடையது? வேறு யார்? யாருடன் விளையாடுகிறேன் நான்?
காத்திருக்கிறது படகு.
துடுப்புகளுக்கோ, காற்றுக்கோ அவசியமில்லை.
சாவியை அதே இடத்தில் வைத்திருக்கிறேன்.
எங்கேயென நீயறிவாய்.
என்னையும், ஒன்றாய் நாம் புரிந்த அனைத்தையும்
நினைவில் பதித்திரு.
இப்போது இறுகப் பற்றிக்கொள்.
அதுதான்.
உதட்டில் அழுத்தமாய் முத்தமிடு.
அப்படித்தான்.
என் ஆருயிரே
இப்போது என்னை விடுவி.
என்னைப் போகவிடு.
மீண்டும் இவ்வாழ்வில்
நாம் சந்திக்கப்போவதில்லை.
எனவே இப்போது
முத்தமிட்டு வழியனுப்பு.
இன்னொரு முறை.
ம், மீண்டும் முத்தமிடு.
இன்னொரு முறை.
அப்படித்தான்.
போதும்,
என் பேரன்பே
இப்போது என்னைப் போகவிடு
செல்வதற்கு நேரமாகிவிட்டது.

கொடை

அதற்கு வேறெந்தச் சொல்லும் பொருந்தாது
இந்தச் சொல்தான் சரி.
கொடை.
கடந்த பத்து வருடங்களும் கொடைதான்.
பிழைத்திருக்கிறான், தெளிந்திருக்கிறான்,
உழைக்கிறான், நேசிக்கிறான்,
நல்லவள் ஒருத்தியால் காதலிக்கப்படுகிறான்.
பதினோரு வருடங்கள் முன்பு
அப்போதிருந்த நிலையில்
பிழைத்திருக்க ஆறுமாதம்தான் என்றார்கள்.
அவனும் சரிந்துகொண்டுதானிருந்தான்.
எனவே மாற்றிக்கொண்டான், எப்படியோ.
குடியை நிறுத்திவிட்டான்!
அப்புறம்?
அதன்பிறகு கிடைத்ததெல்லாமே கொடை.
ஒவ்வொரு நிமிடமும்.
அன்று அவனிடம் ஏதோ செயலிழந்து வருவதாகவும்,
தலைக்குள் ஏதோ வளர்ந்து வருவதாகவும்
தெரிவிக்கப்பட்ட அந்த நிமிடத்தையும் சேர்த்து
ஒவ்வொரு நிமிடமும் வழங்கப்பட்ட கொடை.
“எனக்காக அழாதீர்கள்”
அவன் நண்பர்களிடம் சொன்னான்.
“நான் அதிர்ஷ்டசாலி.
நானோ, பிறரோ
எதிர்பார்த்ததைவிட
பத்து வருடங்கள் கூடுதலாக வாழ்ந்திருக்கிறேன்.
அருட்கொடை.
அதை மறக்காதீர்கள்.”