சீனப் பழங்கவிதைகளுக்கு அநேக சிறப்பியல்புகள் உண்டு.

1. இயற்கையின் அலகுகளை அதிகம் பயன்படுத்துபவை. நதியும் மலையும் பறவைகளும்
படகுகளும் என திரும்பத் திரும்ப இடம்பெறும் படிமங்களுக்கு தனித்துவமான சிறப்பு, அவை
எதையுமே குறியீடாக நிறுத்துவதில்லை என்பது. நேரடி உருவகங்களாகவும் நிலை மாறுவதில்லை.

2. மனக்கண்ணின் முன்காட்சியை உருவாக்கித் தந்துவிட்டு, அலுங்காமல் விலகிக்கொள்கிறவை.
முழுமையான காட்சியுருவாக்கத்துக்கு மிகக் குறைந்த சொற்களே போதும் என்று அறியத்தருகிறவை.

3. இன்னொருசிறப்பு, அதிராத மொழியின் வழி வாசக மனத்தில் அவை உருவாக்கும் சாந்தம்.

4. நிலவெளியை மனமும், மனத்தை நிலவெளியும் என்று பரஸ்பரம் தழுவும் காட்சிக்
கோணமானது, தத்துவம்எதையும்வலிந்துமுன்னிறுத்தாதிருப்பது.

5. இறுதியாக, இக்கவிதைகளின் வழியே உருவாகும் தனிமையுணர்வு, கொஞ்சமும் துயரம்
கலக்காதது; மிகுந்த வாஞ்சையுடன் மனிதவாழ்வுடன் ஒத்திசைவது.

6. அநேகக்கவிதைகளுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன.
சித்திரமொழியை சொற்களின் மொழிக்குப் பெயர்க்கும் போது நேரும் பேதங்களோடு. எத்தனை
விதமான ஐரோப்பிய மனங்களுக்குள் புகுந்து புறப்பட்டாலும், தமது கவிப்பெறுமதியைக்
கொஞ்சமும் இழக்காத ஆன்ம வலுகொண்டவை சீனக் கவிதைகள்.

கீழ்வரும் கவிதைகள், ஒளிரும் நிலவெளி – சீன ஓவியங்கள் மற்றும் கவிதைகள் தொகுப்பிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டவை.

தொலைவிலுள்ள மாந்தருக்கு விழிகள் இல்லை:
தொலைவிலுள்ள மரங்களுக்குக் கிளைகள் இல்லை.
தொலைவிலுள்ள மலைகளில் கற்கள் இல்லை;
அவைநயமாகவும் மிருதுவாகவும் இருப்பவை,
புருவங்கள் போல.
தொலைவிலுள்ள நீரில் வளையங்கள் இல்லை,
மேகங்களை நோக்கி உயர்கிறது அது.
இவைதாம் ரகசியங்கள்

– வாங் வெய்

பெரியதும் சிறியதுமான கற்கள்
சதுரங்கப் பலகைக் காய்கள் போல
உறவு கொண்டவை.
நீரருகே உள்ள சிறு கற்கள்
தாய்ப்பாறையின் அணைப்புக்குக் கைகள் நீட்டி
சூழ்ந்திருக்கும் குழந்தைகள் போன்றவை.
மலையின் மீது இருக்கும் பெரிய பாறை
வயதில் மூத்தது அது
குழந்தைகளை தன்னைச் சுற்றிச் சூழ்வதற்கு
அழைக்க முனைவதுபோல் தெரிகிறது.
பாறைகளின் மத்தியில்
நேசம் இருக்கிறது.

– ஜீ ஸி யுவான் ஹுவா ஷுவான்

தாமரைக் குளம்

குளத்தின் பரப்பில் சாடும் மழைக்கு அஞ்சாது
நிறம் பூண்ட இலைகள்
ஒன்றையொன்று மறைக்கின்றன.
வண்ணங்கள் ததும்பும் பறவைகள்
சட்டென்று சுதாரித்து
பறக்கின்றன.
அவற்றின் துரிதம்
நீர்வளையங்களில் மினுங்கும்
சூரியாஸ்தமனத்தை சிதறடிக்கிறது.

மெய் யா-சென்

ஒரு கவிதை
உயர்ந்து வானளாவி நிற்கும் அடுக்குப் பாறை
அதுதான் எவ்வளவு தனியாய் நிற்கிறது.
அதிர்ஷ்டவசமாய்
இந்த வலுத்த காற்றில்
பச்சை மூங்கில்கள் கூட்டம் சேர்கின்றன;
சூரியன் மறைகிறான், யாருமேஇல்லை,
கடற்பறவைகளும் போய் விட்டன.
தொலைதூரத் தண்ணீர் மட்டும் எஞ்சுகிறது
குளிர்ந்த நாணல்களுக்குத் துணையாய்.– சு ஷி

ஆறு

தானே வெண்ணிறமாய் இருக்கிறது;
தற்போது
அற்புதமான உறைபனி
வானையும் நிலத்தையும் நிரப்புகிறது.
ஆற்றுக்குப் பிரத்தியேக ஒலி உண்டு;
இப்போது
முரட்டுக் காற்றின் உறுமலையும்
சேர்த்துக் கொள்கிறது.

-யுவான் ஷாங்-டாவ்

காற்று தணியும் போது,
நீரலைகளும் நீர்வளையங்களும்
அமைதி கொள்கின்றன.
மேகங்கள் அகலும்போது
நிலவு எழுகிறது.
நிலவொளிரும் மூடுபனிகள்
விஸ்தாரமானவை, எல்லையற்றவை.
அவற்றின் விளிம்புகளைக்
கண்ணால் காண முடியாது.
ஆறுகள், கடல்கள், வாய்க்கால்கள், குளங்கள் என
அத்தனையும்
ஒரே தருணத்தில்
குளிர்ந்து அமைதிகொண்டு
மௌனமாகலாம். இவ்விதமாய்
ஓடாத நீரின் இயல்பு
வெளித்தெரியக் கூடும்.

– ஜி ஸி யுவான் ஹுவா ஷுவான்

குவாங்கௌவில் இரவுமழை

தெளிந்தும் சாந்தமாயும்
இருக்கிறது ஆறு.
துரித மழையொன்று
மலையிடுக்கில் பொழிகிறது.
நள்ளிரவில்
குளிர்ந்த, தெறிக்கும் ஒலி தொடங்குகிறது.
கண்ணாடித் தாம்பாளத்தில்
ஆயிரமாயிரம் முத்துக்கள் சிந்துவதுபோல.
ஒவ்வொரு துளியும்
எலும்பைத் துளைக்கிறது.
கனவில் தலையைச் சொறிந்தபடி
கவனிக்க எழுகிறேன். விடியும்வரை
கவனித்தபடியே இருக்கிறேன்.
வாழ்நாள் முழுவதும் மழையொலி
கேட்டவன் நான். வயோதிகன்.
ஆனால் தற்சமயம்
முதன் முதலாகப் புரிகிறது
இரவில் நதியின் மீது பொழியும்
வசந்த கால மழையின் ஒலி.

– யாங் வான் – லி

ஒலியைப்பற்றி
பிறக்கும் போது
பத்தாயிரம் சங்கதிகள்
காதில் விழுகின்றன.
ஆனால் எப்போதும்
அதி உச்ச வானுலகம்
சலனமின்றி இருக்கிறது.
என்றாலும்,
எதுவுமே நிசப்தத்தில் தான்
ஆரம்பித்தாக வேண்டும் –
அது மறைவதும்
நிசப்தத்திலேயே.

-வெய் யிங்-வு

மலையில் தோய்ந்ததாகத் தென்படும் உருவம் ஒன்று.
பதிலுக்கு, தானும் வளைந்து
அந்த உருவத்தைக் கவனிக்கிறதாய்த் தென்படுகிறது மலை.
தனது யாழை மீட்டும் இசைஞன்
நிலவின் இசையைக் கேட்கிறவன் போலத் தெரிகிறான்.
சாந்தமாக, சலனமற்று இருக்கும் நிலவோ
யாழின் ஸ்வரங்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாய்த்
தென்படுகிறது.

-ஜீ ஸி யுவான் ஹுவா ஷுவான்

வெண்ணிற இரவு

நாண் பூட்டாத வில்போன்று நிலவு
கரிந்த விளக்குத்திரி பாதி எரிந்துவிட்டது
மலைக் காற்று ஊளையிடுகிறது
மான்கள் நிலைகொள்ளாதிருக்கின்றன
மர இலைகள் உதிர்கின்றன
சிள்வண்டு பதற்றமுறுகிறது
ஒரு கணம்
ஆற்றின் கிழக்குக்கரை நயங்களை
நினைவுகூர்கிறேன்
உதிரும் பனியின்கீழ் இருந்த படகு
ஞாபகம் வருகிறது.
காட்டுமிராண்டிப் பாடல்கள் உயர்கின்றன
விண்மீன்களையே ஊடுருவி.
நான் காலியாய் இருக்கிறேன்
இங்கே
ஆகாய விளிம்பில்.

– டூ ஃபு

இலையுதிர்காலம் ஆரம்பிக்கிறது
தட்பவெப்பம் குளுமையடைகிறது
சுவர்க்கோழிகள் என் கட்டிலுக்கடியில்
பாடுவதற்காக இடம்பெயர்கின்றன.
ஓராயிரம் சங்கதிகள் மனத்தில் உயர்ந்து
இதயம் கனக்க வைக்கின்றன.
சொற்களைத் தேடும்
ஓராயிரம் கதைகள். ஆனால்,
யாருக்குச் சொல்வது அவற்றை?
காலைக் காற்று
என் சட்டைக்கைகளின் கீழ் பாய்கிறது
நிலவொளி மங்குகிறது
சேவல் கூவுகிறது
என் குதிரைகளின் தலையை
வீடு நோக்கித் திருப்புகிறேன்.

– ருவான் ஜி