அவளுக்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. அந்த நிலைமையில் எப்படி அவளால் சிரிக்கமுடியும். அவளைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? தனியிட மயக்க மருந்தின் விளைவுகளை அவள் அனுபவிப்பது இதுதான் முதல்முறை. அதுபற்றி பலவிதமான கதைகளை அவள் கேட்டிருக்கிறாள், ஆனால் அது இப்படி கிச்சுகிச்சு மூட்டுவதாக அதுவும் முதுகெலும்பின் அடியில் கிச்சுகிச்சு மூட்டுவதாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அவள்மேல் கவிந்திருந்த மருத்துவர்களின் முகங்களில் மறந்துபோன ஒரு சிரிப்பின் தடயம் இருக்கிறதா என ஆராய்ந்தாள். அவர்களது வாய்களைச் சுற்றியமைந்த கோடுகள் ஏதேனும் நகைச்சுவையை வெளிப்படுத்தக் கூடும், இம்மாதிரிச் சூழ்நிலையில் அவள் சத்தம்போட்டுச் சிரித்தால் அதற்கு அவற்றைக் காரணமாகச் சொல்லிவிடலாம். வறண்ட பிரிட்டிஷ் உச்சரிப்பில் ஆங்கிலம் பேசிய பெண் மருத்துவரையும், அறுவைக் கருவிகள் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருப்பது போலத் தோன்றிய இந்திய மருத்துவரையும் மட்டுமே அவள் பார்த்தாள். அவள் சிரிக்கவில்லை. கிச்சுகிச்சு மூட்டும் உணர்வு மறைந்து பாதங்கள், வயிறு, முதுகு, கால்களும்கூட – மயக்க மருந்து நாபிக்குக் கீழே அவளை உணர்வற்றுப் போகச் செய்திருந்தது – மரத்துப்போயிருப்பதை உணர்ந்தாள். அவளது கால் நகங்கள் கூட மரத்திருந்தன. சற்று கழித்து இந்திய மருத்துவர் பேசினார். அவளது இதயத்துடிப்பு அதிகரிப்பதை ஒளிர்திரையில் அவர் பார்த்திருந்தார். அவளுக்கு மயக்கமூட்டி அளித்து உறங்க வைக்க வேண்டும் என்றார். அவள் பதிலேதும் சொல்லவில்லை.

தனக்கு முன்னிருந்த வெள்ளைத் திரைமீது அவள் கவனம் சென்றது. கூரிய கத்தியால் தசை கிழிக்கப்பட்ட தன்னுடலின் கீழ்ப்பாதியில் நடப்பதை அவளிடமிருந்து அது மறைத்தது. அவள் கண்டதெல்லாம் நிழலுருவங்கள். தன்னுடலின் அப்பகுதியில் சிலந்திகள் ஊர்வது போல உணர்ந்தாள். தன் உடலை அவளால் உணர முடியவில்லை. ஆனால் காலம் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவள் காத்திருந்தாள். திரைப்படங்களில் பார்ப்பது போல அவனோடு பேசுவதற்காகக் காத்திருந்தாள். ஆனால் அவன் வாழ்வின் ஆழங்களுக்குள் புதைந்திருந்தான். அவன் அந்த தென்னாப்பிரிக்கச் செவிலி அவளுக்குத் தந்திருந்த நம்பிக்கை. அவள் சொன்னாள்: “உன் வயிற்றைத் திறந்து அவனை எடுப்போம். பிறகு உன் குழந்தையை முதல் தடவையாக நீ பார்ப்பாய்.” அவளது குழந்தை. அவன் எங்கேயிருந்தான்?

வெள்ளைத்திரைக்குப் பின்னால் நிழலுருவங்கள் இப்போது வேகமாக இயங்கின. ஒரு கணம் தன்னையவள் அதன் பற்சக்கரங்களும் நெம்புகோல்களும் இடவலமாக இயங்கும் ஒரு மின் இயந்திரத்தின் உலோக அடிப்பாகமாக உணர்ந்தாள். அவளுக்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. அந்த இந்திய மருத்துவரது மயக்கமூட்டியின் விளைவாக இருக்க வேண்டும். அந்தக் கணத்தை, ஒன்பது மாத சிருஷ்டியின் பித்துநிலையை தவறவிட்டாளெனில் அது பெரும் குற்றவுணர்வாகிவிடும். எளிமையாகச் சொன்னால் இதுதான்: உலக மொத்தமும் சூல்கொள்கிறது, குழந்தை ஈனுகிறது, இனப்பெருக்கம் மற்றும் எதிரொளிப்புகள் மூலம் வளர்ந்தபடியே இருக்கிறது, ஆனால் அவளது வயிறு மட்டும் விதிவிலக்கு. எல்லா கருத்தரிப்புகளும் பிறப்புகளும், இதன் கவித்துவத்தை உலகு அறியாது, அவளுள் குவிந்துவிட்டன. அவற்றின் அறிகுறிகள், நிலைமைகள், உணர்வுகள் யாவும் அவள் நரம்புகளுக்குள் குடிகொண்டன. அவை யாவும் அவளுள். அவள் இதயத்தில். அவள் சிந்தனையில். இந்த ஒன்பது மாதக் காத்திருப்பின்போது ஒரு சிறு உயிர் விரல் நகங்களால் பற்றிக்கொண்டு அவள் வயிற்றுக்குள் ஊர்வதை உணரும்போதெல்லாம் அவ்வாறுதான் இருந்தது.

எங்கேயிருந்தான் அந்தக் குட்டி மனிதன்?

அவள் காத்திருந்தாள், காத்திருந்தாள், அந்த மயக்கமூட்டி அவளது கண்ணிமைகள் வரை வந்து, அந்தக் கணத்தை அவள் தவற… அழுகுரல் கேட்டு அவள் விழித்தாள், அந்தச் சிறு குரல் எங்கிருந்து வருகிறது என அவளால் கண்டறிய முடியவில்லை. அவள்தான் அவனது தாய் என்பதை அவர்கள் மறந்துவிட்டிருக்க வேண்டும். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் சத்தமாக அழுதாள். வார்த்தைகள் ஏனோ வரவில்லை. பழைய குழாய்த்திறப்பின் வழியே பீறிடும் நீரின் ஒலியைப் போன்ற, மெலிதாக ஒலிக்கும் அழுகுரலை அவளால் கேட்க முடிந்தது. அவள் மகன் ஒன்றும் பழைய தண்ணீர்க் குழாய் இல்லையென்பதை அவள் அறிவாள், ஆனாலும் அதை அவள் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினாள், அக்கணத்தின் மறதியிலும் விழிப்புநிலையிலும் அவனைப் பார்க்க அவள் விரும்பினாள்.

“உன் குழந்தை.”

ஈரத் தலைமுடியிலிருந்து சுருண்டு நெளிந்த பாதங்கள் வரை மனித நத்தை போன்று தோன்றிய அழுக்கும் அம்மணமுமான அந்தச் சிறு உயிரை அவர்கள் காட்டும் முன்பாக இந்த வார்த்தைகள் ஒலித்தன. அது அவளை அழவைத்த உயிர் என்பதன்றி வேறொன்றுமில்லை. அவள் அழுகை விம்மல்களானது, வெம்மையான கண்ணீராகவும் ஆனது.

அந்த உயிருக்கான அச்சம், அவனது மரபுரிமையாக அவள் விட்டுச் செல்லப்போகும் இந்த உலகு பற்றிய அச்சம் ஆகியன அந்த அழுகையில் இருந்தது. இன்னொரு அச்சமும்கூட இருந்தது: தனது நம்பிக்கைகளிலும் கனவுகளிலும் ஏமாற்றத்தை அவன் உணரும்போது அவள் அடையப்போகும் குற்றவுணர்வு குறித்த அச்சம். அது மனதில் புதியதொரு காயத்தை எழுதிச் சென்ற அழுகை. ஆனால் அந்தக் காயத்துக்குப் புராதனமானதொரு பெயர் இருந்தது: அன்பு.

அரபியிலிருந்து ஆங்கிலத்தில்:
கரீம் ஜேம்ஸ் அபு-செய்த்

அஸ்மா அல்கவுல் அதிகமும் பாலஸ்தீன அகதிகளால் நிறைந்த எகிப்தையொட்டிய காஸா நகரமான ரஃபாவில் பிறந்தவர், பத்தரிகையாளர், பெண்ணியவாதி. அரசுக் கொள்கைகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக கருத்துகளைச் சொல்லும் எழுத்தாளர்களுக்கென Human Rights Watch வழங்கும் விருதினை 2010 ல் பெற்றவர். ஊடகச் சுதந்திரத்திற்காக இயங்கும் லெபனானின் சமீர் காசிர் அறக்கட்டளைக்காக தற்போது பணிபுரிகிறார்.