அமெரிக்காவின் நேவடா மாநிலத்தின் சிறிய நகரம். அப்சரஸ்கள் நிறைந்த சொர்க்கம் என்றே புகழ்பெற்ற ஊர் அது. அவசரவசரமாக எனது மீட்டிங்கை முடித்துக்கொண்டு நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்த நகரத்திற்கு டாக்சி ஒன்றைப் பிடித்துப் புறப்பட்டேன். நூறு கிலோமீட்டர் இங்கேதான் மிக அருகில் என்பதைப்போல.சில மணித்துளிகளில் வந்தடைந்தேன். வழியில் வாங்கிய சாண்ட்விச்சைத் தின்று, தண்ணீர் அருந்தி, வயிற்றுப் பசியை தீர்த்துக் கொண்டேன். ஆனால் மற்றொரு பசி,தேகத்தைக் குடைந்து கொண்டிருந்தது! அதைப் பசி என்று சொல்வதை விட ஒருவிதமான உவகை என்று சொன்னால் பொருந்தும். ‘பயிற்சிக்கென்று நிறுவனத்தின் செலவில் அமெரிக்காவிற்கு,அதுவும் நேவடா நகரத்தின் வாயிலுக்குச் செல்கிறாய்,மற்றொருமுறை அங்கு செல்லும் வாய்ப்பு அமையுமா தெரியாது.என்னைப் பொருத்தவரை இது ஒரு நல்ல அவகாசம்.நேவடா ஒன்றும் பசிக்காக விலைபோகும் ஏழைப் பெண்களின் சேரியல்ல.இங்கிருப்பவர்கள் தின்றுகொழுத்துச் சுகப்பட விரும்பும் பெண்கள்.தேக சுகத்தின் ஆசைக்காக தொழில் செய்யும் ‘ப்ரொஃபஷனல்’ பெண்கள். உனக்கு வாழ்க்கையில் ஒருமுறை தான் கிடைக்கும் இதுபோலான சந்தர்ப்பம்.இதையும் ஒரு சோதனைபோல நினைத்து அனுபவித்து விட வேண்டும்.நான் அப்படித்தான் நடந்திருப்பேன். இனி உன் விருப்பம்’ என்று முன்பே நண்பன் வசந்தன் சொல்லியிருந்ததால் வாயில் எச்சில் ஊறியது.

எவ்விதக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத ஆண்-பெண் உடலுறவு என்னும் கற்பனையே எனக்கு வியப்பையும், ரோமாஞ்சனத்தையும் ஏற்படுத்தியது. பெரிய எழுத்தாளனாக வேண்டும் என்று ஆசைப்படுபவன், கதை, நாவல்களில் ஆங்காங்கே ரசனை நிறைந்த ஒரு செக்ஸ் காட்சியைச் இடைச்செருகாமல் இருந்தால் எழுத்து சப்பென்று தோன்றிவிடாதா?! பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கும் பல வெளி உறவுகள் இருந்தது என்றும், அப்படியான உறவுகள் தந்த அனுபவத்தால் ஊக்கம் பெற்று பெரிய படைப்புக்களை அவர்களால் படைக்க முடிந்ததாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.உண்மையாக எழுத வேண்டுமென்றால் பல அனுபவங்களைத் தனதாக்கிக்கொள்ளாமல் இருந்தால் எப்படி! ஆனாலும் ஒருவிதமான பயம். இங்கேயே இன்னும் அதை அனுபவிக்காதவன் அங்கே போய் அவமானப் பட்டுவிடக்கூடாதல்லவா!

‘அங்கிருக்கும் வைபோகத்தை மட்டுமே பார்த்து, யாருடனும் உடலுறவு கொள்ளாமலேயே திரும்ப முடியுமா?’ என்று உறுத்தலுடன் வசந்தைக் கேட்டிருந்தேன். அவன் வயிறு குலுங்கச் சிரித்து, “மடையா, உனக்கு அவ்வளவு அலர்ஜியாக இருந்தால் போகவேண்டாம். நீ போகாவிட்டால் அவர்கள் நஷ்டப்பட்டு கடைகளை மூடிவிடப் போவதில்லை.அங்கே சென்று எனக்கு தேக சுகம் வேண்டாம்,சும்மா உங்களின் அழகை ரசிக்க வந்தேன் என்று சொன்னால், இப்படியான இந்தியர்களும் இருக்கிறார்களா என்று அவர்கள் கேலி செய்வார்கள். எங்களைக் கேவலமாகப் பார்ப்பதற்கு இங்கே எதற்கு வரவேண்டும் என்று வெளியே தள்ளிக் கதவை மூடவும் செய்யலாம்.என் வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, உன் காலில் வேண்டுமென்றாலும் விழுகிறேன், நீ அங்கே போக வேண்டாம் என்றான். கடைசியாக குதூகலத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் டாக்சி பிடித்தேன். இன்பம் என்னும் அழகிய அனுபூதிக்கு எல்லை எதற்கு!

“இங்கே விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு அரசாங்கமே அதை ஊக்குவிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்”. என்றான் டாக்சிக்காரன்.

“அரசாங்கம் ஊக்கம் கொடுக்கிறது என்பது தவறு.அவர்களையும் காப்பாற்றுகிறது என்று சொல்லாலாம்.”” என்றேன். ”இல்லை.தற்போது அது பக்காவான உத்தியோகமாக வளர்ந்திருக்கிறது. அங்கே அவர்கள் அளிக்கும் சேவைகளுக்கு விலைப்பட்டியலைத் தருகிறார்கள்”என்று சொல்லிக்கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்துக் கேலியாகச் சிரித்தான்.

“இங்கே பேரம் பேசலாமா?” கேட்டேன் நான். “வியாபாரம் என்றால் பேரம் இல்லாமலா?, ஆனால் மோசம் செய்யமாட்டார்கள்.” என்று சொன்னான்.

“எங்கே இறங்குகிறீர்கள்?”என்று கேட்டான்.அவனுடன் சிறிது நேரம் பேசிய சலுகையில், “இந்த இடம் எனக்குப் புதிது. நீயோ அடிக்கடி வருபவன். எங்கே நல்ல சரக்குக் கிடைக்குமோ அங்கே இறக்கிவிடு. அந்த உதவியைச் செய்வாயா?.” என்றேன். அவன் குலுங்கிச் சிரித்தான்.சிறிது நேரத்திற்குப் பிறகு “நான் இங்கே பலமுறை வந்திருக்கிறேன், ஆனால் இங்கு வந்து சுகத்தை அனுபவித்தேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. எனக்கான தேவைகளே வேறு. இங்கே இன்பமளிக்க வரும் இந்த வத்தல் தொத்தல் பெண்களுக்கெல்லாம் பணத்தை வீணடிப்பவனல்ல நான். எனக்கு வாட்டசாட்டமான பெண்கள் வேண்டும்” என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தான். ‘என் டாக்சியில் வந்த பலர் இங்கேதான் வந்தார்கள், இங்கே இறங்குங்கள். மற்றும் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து விடுங்கள். பெஸ்ட் ஆப் லக்.”’ என்று சொல்லி மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் முன் நிறுத்தி பணத்தைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டான். சுற்றியும் நோட்டமிட்டேன். எதிரில் கடைகள், உணவகங்கள், மக்கள் கூட்டம், கண்களைக் கவரும் விளம்பர விளக்குகள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பல நகரங்களில் இதுபோலான ‘மால்’களைப் பார்த்திருக்கிறேன். இங்கே எங்கே இருக்கிறது அந்த சுகபோக சொர்க்கம்
என்று யாரை, எப்படிக் கேட்பது?!

அங்கிருந்த சிறிய உணவு விடுதியொன்றுக்குள் நுழைந்தேன். அங்கே மேசைகள் எல்லாமே இருவர் அமரக்கூடியதாக இருந்தது. காலியாய் இருந்த மேசையின் பக்கத்திலிருந்த நாற்காலி ஒன்றின் மீது அமர்ந்தேன். எல்லா மேசைகளிலும் ஒரு ஆண், ஒரு பெண் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதும், சிறிது நேரம் கழித்து எழுந்து போவதுமாக இருந்தார்கள். ஏறத்தாழ எல்லாப் பெண்களுமே உடலின் கவர்ச்சியான அங்கங்கள் தெரியும்படியான அரைகுறை ஆடைகளில் தென்பட்டார்கள். இவர்களின் தொழில் நடக்கும் இடம் இது.டீல் முடிந்தவுடன் அதைப் பூர்த்தி செய்துகொள்ள எழுந்து செல்கிறார்கள் என்று தோன்றியது. என்னைப்போல தனியாக அமர்ந்திருந்தவர்கள் இருவர் மட்டுமே. அவர்களில் ஒருவன் ஆர அமர நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தான். நாளிதழ் வாசிக்க அவனுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா! மற்றொருவன் என்னைப்போல அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தான். மற்ற இரு மேசைகளில்,மேசைக்கு இரண்டாக பெண்கள் அமர்ந்திருந்தார்கள்.சிறிது வயது முதிர்ந்தவர்களாகத் தெரிந்தார்கள். மற்றொரு மேசையில் மூன்று பெண்கள். இவர்களெல்லாம் கிராக்கியைத் தேடுகிறார்களா,என்ன!போய்க் கேட்கலாம் என்றால், என்னுள் இருந்த பகுத்தறிவு, ‘வந்து சில நொடிகளாகவில்லை, அதிகமான உற்சாகம் வேண்டாம், ஒரு ஐந்து விநாடி பொறுமையாக இரு’ என்று எச்சரித்தது. இப்படிப் பத்து விநாடிகள் கழிந்தன. ‘நீங்கள் ஓட விரும்பினால் உங்கள் கால்களை நீங்கள்தான் முன் வைக்கவேண்டும்’ என்ற அர்த்தம் தொனிக்கும் ஆங்கிலப் பழமொழியொன்று நினைவிற்கு வந்தது. ‘கங்கையில் குளிக்கக் காசிவரை வந்தவனுக்கு என்ன குளிர்.’என்று பகுத்தறிவைப் பின்னுக்கு தள்ளியது சபலம் பிடித்த மனம்.அதற்குள்ளாக இரு பெண்கள் அமர்ந்திருந்த ஒரு மேசையிலிருந்து ஒரு பெண் எழுந்து என்னைப்போலவே தனியாக இருந்தவனின் எதிரில் போய் அமர்ந்து, பேச்சைத் துவங்கினாள்.அந்த மேசையில் அவளுக்குத் துணையாக அமர்ந்திருந்த பெண்ணின் பக்கம் இருந்த காலியான நாற்காலி என்னை அழைத்தது.என் எதிரே இருந்த காலி நாற்காலி என்னைச் சீண்டியது.

அவளை ஒரு முறை பார்த்தேன்.அவள் ஏதோ சமிக்ஞை செய்ததுபோல
தோன்றியது. நான் மெல்லியதாகச் சிரித்தேன். அது போதுமானதாக
இருந்தது அவளுக்கு.மெல்ல எழுந்து என்னை நோக்கி வந்தாள்.
வெள்ளையாகவும் இல்லாமல், கருப்பாகவும் இல்லாமல்
எள்ளெண்ணையைப் போலான நிறம். ஐந்தரை அடி உயரமான வலுவான
தேகம்.சிறிது பெருத்த உடலை இறுக்கமாக அணைத்திருந்த
ஆடையிலிருந்து பிதுங்கி வெளியே தெரிந்தன உடலின் சில அங்கங்கள்.
அடர்த்தியான கறுப்பான கூந்தல். நிறைந்து வழிந்த புட்டங்கள்!
இடும்பியைப்போல என் பக்கம் வந்தவளின் திடகாத்திரமான தேகத்தைப்
பார்த்து என் மெலிந்த தேகம் நடுங்கியது. நெஞ்சு படபடத்தது.
‘தோற்றுவிடக்கூடாது’ எனக்குள் சொல்லிக் கொண்டேன். சிறுவர்கள்
பென்சிலை ஒடிப்பதைப்போல என்னை ஒடித்துவிட்டால்! ‘ஹாய்’ என்றாள்.
நானும் ‘ஹாய்’ என்றேன்.எனது வார்த்தையின் ஒலி வெளியே
வரவில்லை. உதடுகள் மட்டும் அசைந்ததைப் போலத் தோன்றியது.
‘நீங்கள் எனக்காகக் காத்திருக்கிறீர்களோ என்று எண்ணி வந்தேன்’ என்று
சொல்லிக்கொண்டே என் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். ‘என்
பெயர் லீனா, எங்களைத் தேடிக்கொண்டு நேவடா வருபவர்களைப் பற்றி
எனக்கு மிகவும் நன்மதிப்பு. அப்படி வருபவர்களை உபசரிப்பதில் எனக்கு
அலாதியான மகிழ்ச்சி. வெட்கப்படவேண்டாம். என்னுடைய நடை, உடை,
பாவனைகள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? ஓரிரு விநாடி உங்களை
ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களிடம் ஏற்பட்டிருக்கும்
உத்வேகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். பிறகு பேச்சைத் தொடங்கலாம்.’
என்று தெளிவான ஆங்கிலத்தில் பேசினாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு சுதாரித்துக்கொண்டு சொன்னேன், ‘நான்
இந்தியன், நேவடாவைப் பற்றி வலைத்தளத்தில் படித்துத் தெரிந்து
கொண்டேன். பாவச்செயல் என்ற உறுத்தலில்லாமல், உடல் சுகத்தை
தொழிலாக்கிக் கொண்ட உங்களைப்பற்றித் தெரிந்துகொள்ளும்
ஆர்வத்துடன் வந்திருக்கிறேன். முடிந்தால் உங்களிடமிருந்து போதுமென்ற
அளவிற்கு உடல் சுகத்தையும் அடைய விரும்புகிறேன்.’ சிறிது
உதறலுடனேயே வார்த்தைகள் வெளி வந்தன. அவளுக்கு எவ்வளவு
கேட்டதோ, எவ்வளவு புரிந்ததோ! ‘நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள்,
உங்களுடன் சுகப்படும் பாக்கியம் எனதல்ல. நான் இங்குள்ள ஒரு
நிறுவனத்தின் பெயராளர்.எங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை
உங்களுக்குத் தெரிவித்து, உங்கள் தேவைக்கும், பொருள் வசதிக்கும் ஏற்ப
அழகிகளைத் தேர்ந்தெடுக்க உதவியாக இருப்பது என் கடமை. உங்கள்
ஆர்வமும், உணர்ச்சிகளும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தால்
விவகாரத்தைப்பற்றிப் பேசலாமா?” என்றாள். ஓ! இவள் சேல்ஸ் லேடி.
எனது ருசிக்குத் தகுந்ததைத் தேர்தெடுக்க உதவி செய்பவள்!

அவ்வளவுதான்! இவள் எப்படியிருந்தால் என்ன!

தன்னுடைய கைப்பேசியிலிருந்த நான்கைந்து நிழற்படங்களைக் காட்டி,
அவர்களை வர்ணிக்கத் தொடங்கினாள். வயது, தோலின் வண்ணம்,
முடியின் வண்ணம்,உடல்வாகு,என்ன மொழி பேசுபவள் இப்படிப்
படபடவென்று சொல்லிக்கொண்டே போனாள்.பிறகு கைபேசியை என்
முன்னாள் நீட்டி “இந்தப் பொத்தானை அழுத்திக்கொண்டே போங்கள்,
எங்கள் நிறுவனத்தில் தொழில் செய்யும் எல்லாப் பெண்களின் படங்களும்
ஒன்றன்பின் ஒன்றாக வரும்.உங்களுக்குப் பிடித்த படத்தை காட்டுங்கள்,
அவளைப்பற்றிய எல்லா விவரங்களையும் தருகிறேன். அவள் தற்போது
கிடைப்பாளா என்பதையும் உடனே சொல்கிறேன். அல்லது நான்கைந்து
படங்களைத் தேர்ந்தெடுங்கள்,அவர்களை உங்கள் முன் ஆஜர்
படுத்துகிறேன் அவர்களைப் பார்த்த பின் தேர்வு செய்து உங்கள்
முடிவைச் சொன்னால் போதும்’என்று சொல்லி அவளுடைய கைபேசியை
என்னிடம் கொடுத்தாள். பல வருடங்களுக்கு முன் அப்பா பத்துப்
படங்களை என் முன் வைத்து ‘இந்தப் பெண்களெல்லாம் நல்ல
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எந்தப்பெண் பிடித்திருக்கிறது?
எந்தப்பெண்ணின் பெற்றோர்களுடன் பேசலாம் சொல்லு, சும்மா காலம்
கடத்தவேண்டாம். வயது பின்னோக்கிப் போகாது.’ என்று சொன்னது
நினைவிற்கு வந்தது.

வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கவேண்டிய உறவைத் தேர்ந்தெடுக்க
பத்து விநாடியும் நேரம் தரமுடியாத அப்பா, இங்கே அரை மணி நேர
உறவைத் தேர்வு செய்ய அரை மணி நேரம் தரும் இவள்! தேர்வு
செய்யும் சுதந்திரம் எனக்கு அங்கும் இருந்தது, இங்கும் இருக்கிறது.
ஆனால் அதற்கு நான் அங்கேயும் தயாராக இருக்கவில்லை. இங்கேயும்
ஏன் பின்வாங்குகிறேன்? வாழ்க்கை முழுவதற்குமான உறவிற்காகவோ
அல்லது ஓரிரு மணி நேரத்திற்கானத் துணைக்காகவோ, தனது
துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆண்-பெண் இருவருக்கும்
சரிசமமாக கிடைக்கவேண்டும் இப்படியான பொன்மொழிகளை
முகநூலிலும், ட்விட்டரிலும் பதிவு செய்யும் எனக்கு இப்போது ஏன் இப்படி
ஒரு தயக்கம் என்று புரியவில்லை.

எனக்கு தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமாகிவிட்டது. ரியாலிடி ஷோக்களில்
நீதிபதிகளாக வருபவர்களின் மனநிலையும் இப்படித்தான் இருக்குமோ
என்று தோன்றியது. நேரத்தைத் தள்ளிப்போட சிறிது நேரம் அவளது
கைபேசியின் ஸ்க்ரீனை முன்னும் பின்னுமாக தள்ளிப் படங்களை
புரட்டிக்கொண்டிருந்தேன்.’என்ன, யாரும் பிடிக்கவில்லயா? பரவாயில்லை
அங்கே வேறொரு நிறுவனத்தின் ஆட்கள் இருக்கிறார்கள் அவர்களில்
ஒருவரை அனுப்புகிறேன். அவர்களிடம் இருக்கும் பெண்களையும்
பாருங்கள்.’ என்று எழுந்து தனது கைப்பேசிக்காக கையை நீட்டினாள்.
கைப்பேசியைத் திருப்பித் தந்துகொண்டே, ‘பெண்கள் நன்றாவே
இருக்கிறார்கள்.ஆனால் இந்திய வம்சாவளியர்கள் இல்லையா?’ இப்படி
சாக்குச் சொல்லி அவளைத் துரத்தப் பார்த்தேன்.‘இந்தியாவில் மிகவும்
அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் அவர்களுக்கு இங்கே பெரிய கோரிக்கைகள் இல்லை. அதனால்
அவர்களை இங்கே வைத்துக்கொள்வதில்லை. ஆனால் நான்கு பெண்கள்
எங்கள் பகுதிநேரப் பட்டியலில் இருக்கிறார்கள். தேவைப்படும்போது
அழைத்தால் வருவார்கள். ஆனால் ஒரு பிரச்சனை, உங்களுக்கு இப்போதே
வேண்டுமென்றால் கிடைப்பது சிரமம். நீங்கள் நால்வரில் ஒருவரைத்
தேர்ந்தெடுத்தால் அவருக்கு எப்போது தோதாக இருக்குமென்று
தெரிந்துகொண்டு ஏற்பாடு செய்து கொடுக்கமுடியும்.’ என்று
சொல்லிக்கொண்டு கைபேசியைக் காட்டி ‘இவர்கள்தான் அந்த நான்கு
பெண்கள்.. பஞ்சாபி, மணிப்பூரி, மலையாளி, நான்காவது யாராக
இருக்குமென்ற விவரம் கிடையாது.’

லீனா காட்டிய அந்த நான்கு பெண்கள் அப்படியான அழகிகளாக
இருக்கவில்லை. மேலும் தேர்வு செய்யத் தயாராக இல்லாத மனது தேர்வு
செய்வதை எதிர்த்தது.லீனா என் பதிலுக்காக தவித்துக்கொண்டிருந்தாள்.
உணவகத்தில் வேறு பல வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். என்னுடன்
பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக நேரம் செலவிட்டிருந்தாள்.
ஆனாலும் வியாபாரம் கைகூடுமான எவ்வித அறிகுறிகளும் அவளுக்குத்
தென்படவில்லை.உபயோகப்படாத வாடிக்கையாளன் யாருக்கு வேண்டும்!
‘சுமாராக இவர்கள் என்ன ‘சார்ஜ்’ செய்வார்கள்?’ என்று அவளிடம்
கேட்டேன். என்னுடைய நடவடிக்கை அவளுக்கு வெறுப்
பேற்றியிருக்கலாம்.என் இடத்தில் வேறு வாடிக்கையாளன் இருந்தால்,
இந்நேரம்…என்பதை நினைத்து எனக்குச் சிரிப்பு வந்தது. ‘இந்தியப்
பெண்களா? சுமார் ஆயிரத்து இருநூறு டாலர். இங்கு எங்கள் நிறுவனத்தில்
இருக்கும் பெண்களானால் இருநூறு டாலரிலிருந்து ஆரம்பித்து மூவாயிரம்
டாலர்கள்வரை. சார்ஜ் செய்வோம்’ என்று சொல்லிக்கொண்டே என்னிடம்
விடைபெற்றவுடன் எந்த வாடிக்கையாளனைப் பார்க்கலாம் என்று சுற்றியும்
பார்க்க ஆரம்பித்தாள். ஓரிரு நிமிடங்களில் அடுத்த வாடிக்கையாளனைப்
பார்த்த அவள் என்னிடமிருந்து விடைபெறுவதைப்போல ‘நீங்கள்
பொறுமையாக முடிவெடுங்கள்.நான் இங்கே இன்னொரு
வாடிக்கையாளரிடம் பேசிவிட்டு வருகிறேன்’என்று எழுந்து போய்விட்டாள்!
அவள் வேண்டுமென்றே என்னை அலட்சியப்படுத்தி எழுந்து போனது
எனக்குப் புரிந்தது.

சரியான தருணத்தில் உறுதியான முடிவெடுப்பது எவ்வளவு
முக்கியமென்று எத்தனை செமினார்களில் கேட்டிருப்பேன் மற்றும்
பேசியிருப்பேன்.என்னுடைய இந்த அனுபவம் அதைத் தெளிவுப்படுத்தியது.
தெளிவான விடையை அறிய எனக்கு நானே கேள்விகளைக்
கேட்டுக்கொண்டேன்.டாக்சி வைத்துக்கொண்டு நான் இவ்வளவு தூரம்
வந்தது எதற்காக?இனபத்தை இங்கு ஒரு சரக்காக விற்பனை
செய்கிறார்கள் என்கிறார்கள், அப்படி விற்பனை செய்வது உண்மையானால்
அந்த சுகம் எனக்கும் வேண்டும். இங்கு நடப்பது பெண்களின் சுரண்டல்
என்றால் எனக்கு அது தேவை இல்லை, என்று என் நிலையை எனக்கு
நானே தெளிவுப்படுத்திக் கொண்டேன்.இப்போது உண்மைகளையும்,
பொய்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்னும் விவரமாக தெரிந்து
கொள்ளவேண்டும்.அப்பா, அம்மாவுடன் பெண் பார்க்கச் சென்ற நாட்கள்
நினைவிற்கு வந்தது.பெண் ஒருத்தியை பாலின ஆசையுடனும் பார்த்த
முதல் பார்வை கண்முன் தோன்றியது.

பெண் பார்க்கச் சென்றபோது, நான் பட்டபாடு, சங்கடம்
ஆண்டவனுக்குத்தான் தெரியும்.எதைக் கேட்டாலும் ‘என் அப்பாவிடம் கேள்’
என்று ஒருத்தி சொன்னாள்.வெறுப்பாகி, இவளிடம் ‘கிஸ்’ கொடு என்று
கேட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது!‘எங்க அப்பா அம்மாவிற்கு
வேறு வேலை இல்லை. நான் எனக்கு பிடித்தவரை மணம் செய்துகொள்ள
விரும்புகிறேன். வந்ததற்கு சும்மா பார்த்துவிட்டுப் போங்கள். உங்களுடைய
முடிவைத் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை.’ என்றாள் இன்னொருத்தி.
‘முதலில் என்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா சொல்லுங்கள், பிறகு
நான் யோசிக்கிறேன்’ என்று தன் புருவத்தை உயர்த்திப் பார்த்தாள்
மற்றொரு பெண். மற்றொரு அழகானவளிடம் ‘எனக்கு உன்னைப்
பிடித்திருக்கிறது, உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டதற்கு,
‘எனக்கு பாடி பில்டர்களைப் பிடிக்கும்’ நறுக்கென்று சொன்னாள். என்
தேகத்தைப் பார்த்து பகடி செய்யவே அப்படிச் சொன்னதாக எனக்குத்
தோன்றியது. இன்னும் சில பெண்களிடம் ‘எனக்கு உன்னைப்
பிடித்திருக்கிறது, உனக்கு?’ என்று கேட்டபோது ‘ஆம், இல்லை’ இப்படி
எந்த பதிலையும் வெளிப்படுத்த முடியாமல் தவித்தனர்!

கனவு உலகத்திலிருந்து நேவடாவிற்கு திரும்பி வந்தேன்.கிடைத்த
மற்றொரு வாடிக்கையாளனை ஐந்தே விநாடியில் மயக்கி
ஒத்துக்கொள்ளவைத்து லிப்ட் பக்கம் அழைத்துப் போகும்பொழுது,
என்னையும் இழக்க மனமில்லாமல்,‘இப்ப வந்தர்ரேன்’என்று
சொல்லிப்போனாள் லீனா.திரும்பி வந்தவள் ‘இப்போதாவது உங்களின்
தேவையைத் தெளிவாகச் சொன்னால், நான் உங்களுக்கு உதவி செய்யக்
காத்திருக்கிறேன்’ என்றாள்.‘உண்மையாகவும் இங்கே தங்கள் விருப்பத்தின்
பேரில் சுகத்தை விற்பனை செய்கிறார்கள் என்றால், அப்படியான சுகம்
எனக்குத் தேவை.அதன் போர்வையில் வெகுளிப் பெண்களை விபசாரத்தில்
ஈடுபடுத்தியிருந்தால் வேண்டாம்.அப்படியான சுரண்டலுக்கு என்னால்
துணைபோக முடியாது.அதை நான் வெறுக்கிறேன் மற்றும் கண்டிக்கிறேன்’
என்றேன்.‘இந்த நகரத்தின் சில இடங்களில் அப்படியான சுரண்டல்கள்
இருக்கலாம்.ஆனால் எங்கள் நிறுவனத்தில் அப்படி இல்லை. நாங்கள்
இருபத்தைந்து வயதிற்குட்பட்ட பெண்களை தொழிலிற்கு
சேர்த்துக்கொள்வதில்லை.நாற்பது வயதானவுடன் ஓய்வு
கொடுத்துவிடுவோம்.அந்த சமயங்களில் நிறுவனத்தின்
விதிமுறைகளின்படி மானியம் மற்றும் வாரம் ஒருமுறை மருத்துவ
பரிசோதனைகள் இப்படியான சலுகைகள்.பெண்களை வன்முறையிலிருந்து
பாதுகாக்க ஆங்காங்கே செக்யூரிட்டி கார்டுகள். அங்கே பாருங்கள் ஒருவன்
நாளிதழ் படித்துக்கொண்டிருக்கிறான்’என்றாள் லீனா.

இலட்சிய நோக்குடன் இருந்த எனக்குப் புரியவைக்க மிகவும் முயற்சி
எடுத்தாள். ‘எங்கள் நிர்வாகத்தில் சுரண்டலின் பேச்சுக்கே இடமில்லை.
ஆனால் யாராலும் தரமுடியாத விசேஷமான சலுகைகளைத் தருகிறோம்.
இங்கே எந்தப் பெண்களிடம் வேண்டுமானாலும் கேட்டு உண்மையை
உறுதிப் படுத்திக்கொள்ளலாம்.பிறகு நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்.
உங்களைப் பார்த்தால் இலட்சியத்திற்குக் கட்டுப்பட்ட அறிவுஜீவி அல்லது
சமூக சேவை செய்பவரைப் போலத் தோன்றுகிறீர்கள்.
உங்களைப்போலவே பலர் முன்பே வந்திருக்கிறார்கள்.எங்கள்
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு ஒத்துக்கொண்டு ஒருவளைத்
தேர்ந்தெடுங்கள்.அவளுடன் செலவிடும் அரைமணி நேரத்தில் அவளுடைய
ஒப்புதலுடன்,சமுதாயச் சீர்திருத்தம் முதல் கொண்டு, எதை
வேண்டுமென்றாலும் பேச,செய்ய உங்களுக்கு உரிமையுண்டு.உங்களைச்
சகித்துக்கொள்வது அவள் விருப்பம்.அப்படிச் சகித்துக்கொள்ள
முடியாவிட்டால் மெய்க்காப்பாளனை அழைக்கும் சுதந்திரமும் அவளுக்கு
உண்டு,நினைவிருக்கட்டும்.எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.

இனியாவது மனதை உறுதிப்படுத்திக் கொண்டு ஒத்துக்கொள்ளுங்கள்.
லீனாவிற்கு வியாபாரம் படியவேண்டும்,தேவையில்லாத என்
இலட்சியங்களல்ல!

முடிவில் ஆசைதான் சமரசம் செய்துகொண்டது.நான் லீனாவின்
வலைக்குள் விழுந்தேன்.‘உங்களில் அதிக அனுபவமிக்கவள்,மனதைத்
திறந்து வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லக்கூடியவள் யார்?
அவளுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும்?’ஏதோ உறுதியாக
முடிவெடுத்தவனைப்போலக் கேட்டேன்.‘இங்கே வருபவர்களில்
அதிகமானவர்கள் புதிதாக வந்த பெண் யார் என்றுதான் கேட்பார்கள்.மற்ற
சிலர் பெயர் சொல்லி இந்தப் பெண்தான் வேண்டும் என்பார்கள்.
எல்லாவற்றையும் திறந்துவைக்கும் பெண்களிடம் மனதையும்
திறந்துவைக்கும் பெண்ணைக் கேட்பவர்கள் அபூர்வம்.அப்படி
வெளிப்படையாக பழகுவது நல்லதுதான். எங்களிடம் மிகவும்
அனுபவமிக்க ஒருத்தி இருக்கிறாள். வரும் டிசம்பரில் ஓய்வுபெற
இருக்கிறாள். இங்கே பாருங்கள் படத்தை, சௌகரியமான விலையில்.

வெறும் முன்னூறு டாலர்கள். உங்கள் விருப்பத்திற்கு இவள்தான்
தகுந்தவள் என நினைக்கிறேன், பாருங்கள்.’ என்றாள் அவள்.
ஆறு நாட்களுக்கான என் அமெரிக்காவின் பயணச் செலவுகள் போக,
அதிகமாக எனது நிறுவனம் எனக்கு கொடுக்கும் நாள்படி ஆறு நாட்களுக்கு
அறுநூறு டாலர்கள்.அதில் முன்னூறு டாலர்களை இங்கே தர்ப்பணம்
செய்துவிட்டால்!ஆனாலும் பேரம் பேச மனது இடம் கொடுக்கவில்லை.
தாங்கள் அளிக்கும் சேவைக்குத் தகுந்த ஊதியம் கேட்கும் உரிமை
நமக்கிருப்பதைப்போல அவர்களுக்கும் இருக்கிறதல்லவா! ஆனால் இதற்கு
இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா என்று உடனே முடிவெடுக்கத்
தயங்கிக் கொண்டிருந்தேன். ‘இருநூற்றி ஐம்பது டாலர்கள், சரியா?’என
லீனா என் தயக்கத்தைப் புரிந்துகொண்டு கேட்டாள். நான் கேட்காமலேயே
தள்ளுபடி செய்தது என்னைச் சீண்டியதுபோல தோன்றியது.எனக்கு
மானப்பிரச்சனையானது.‘சரி, சரி’ என்று எனக்குள்ளிருந்த குற்ற
உணர்வுகளைக் களைத்து .எழுந்து நின்றேன்.‘குட், இப்படி வாருங்கள்,
இரண்டாம் தளத்தில் இருக்கிறாள்.அங்கேயே பணம் செலுத்தும் வசதிகள்
இருக்கின்றன. ஜாஸ்மின் என்பது நீங்கள் தேர்வு செய்த பெண்ணின் பெயர்.
அவள் நல்ல கட்டை.உங்கள் ருசிக்கு தகுந்தவளைத் தேர்ந்தெடுத்
திருக்கிறீர்கள்,வாழ்த்துக்கள்.’என்று சொல்லிக்கொண்டு,சாவு கிராக்கியை
படியவைத்த மகிழ்ச்சியில் பெருமிதமாக என்னை அழைத்துக்கொண்டு
புறப்பட்டாள் லீனா.

என்னிடம் பணத்தை வாங்கிக் கட்டி ரசீதை வாங்கிக்கொடுத்த லீனா
நேராக ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றாள். அறையின்
கதவைத் தட்டி உள்ளே நுழைந்து, ‘ஜாஸ்மின், உனக்கு ஒரு சிறப்பான
வாடிக்கையாளரை அழைத்து வந்திருக்கிறேன். எந்த பலவந்தத்திற்கும்,
சுரண்டல்களுக்கும் ஆளாகாத, தன் விருப்பத்துடன் இன்பம் அளிக்கக்கூடிய
பெண் ஒருத்தியைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார் இவர். சிறிய வயதில்
இலட்சியங்கள் இயல்பானவை.இவருடைய விருப்பங்களை முழுவதுமாக
புரிந்துகொண்டு, மென்மையாக நடந்துகொள்வாய் என நம்புகிறேன்..விஷ்
யூ போத் ஆல் த பெஸ்ட்’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுப்
போனாள்.

பாதியாகத் திறந்திருந்த கதவிலிருந்து உடல் அழகைக் காட்டிக்கொண்டு
வந்த ஜாஸ்மின் ‘வாடா, காந்தி நாட்டிலிருந்து வந்த என் இனியவனே,
வாழ்க்கை முழுதும் உன்னைப் போன்றவர்களின் அட்டகாசங்களைப்
பார்த்துப் பழகிப்போனவள் நான்.ஓய்வுபெறும் நிலையையும்
அடைந்துவிட்டேன். சூரியன் தினமும் எழுந்து வருவதைப்போல உன்னைப்
போன்றவர்கள் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எங்களைப்
போன்றவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிக் கொண்டுதான்
இருக்கிறார்கள்.’ என்று புன்சிரிப்புடன் என்னை படுக்கைக்கு இழுத்தாள்.
அவள் மகிழ்வுடன், முழு சம்மதத்துடன் என்னுள் கரைந்தாள் என்றே நான்
உணர்ந்தேன்.அல்லது அவள் அப்படி நடிக்க என்னைப்போல உரிய பயிற்சி
எடுத்திருந்தாளா? அமெரிக்காவில் நான் பெற்ற ‘கஸ்டமர் கேர்’ பயிற்சிக்
குறிப்புக்கள் இப்படியான சந்தேகத்தை என்னுள் தோற்றுவித்தது.

(‘சகி’ கன்னட 1-15 மே 2015 இதழில் வெளியான சிறுகதை)

கோபிநாத ராவ் .

கோபிநாத ராவ் பிறந்தது கர்நாடகாவின் கடலோரப் பகுதியில்.
துபாயில் இருபது வருடங்களாக சார்ட்டெட் அக்கௌன்டென்ட் ஆக
பணிபுரிகிறார். ன்னடத்தில் கதை எழுதுவதில் மிக்க ஆர்வமுள்ளவர்.
இதுவரை முப்பத்தைந்து சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.இரண்டு
சிறுகதைத் தொகுப்புக்கள் ‘சார்வபௌமா’ மற்றும் ‘பாம் பாம் ரயில்’ என்ற
தலைப்புக்களில் வெளியாகியுள்ளன.மூன்றவாது தொகுப்பு விரைவிலேயே
வெளிவரவிருக்கிறது.

கே. நல்லதம்பி-

பிறப்பு 29.11.1949, மைசூரில். படிப்பு B..A..தனியார் கம்பெனியில் வியாபாரப்
பிரிவின் அகில இந்திய மேலாளராக 35 வருடம் வேலை பார்த்து,
ஓய்வுபெற்றவர். நிழற்படக் கலையில் ஆர்வமிக்கவர். பல உலக மற்றும்
தேசிய கண்காட்சிகளில் இவரது நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு,
பல பரிசுகளும் வென்றிரிக்கின்றன.கன்னட கவிஞர் பி.லங்கேஷ்
அவர்களின் நீலு காவ்யா என்னும் கவிதைத் தொகுப்பை “மொட்டு விரியும்
சத்தம்”” என்னும் பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். கன்னடத்திலிருந்து
தமிழுகுக்கும்,தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கவிதைகள் ,சிறுகதைகள்,
கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு, பல கன்னட மற்றும் தமிழ்
இதழ்களிலும் வெளியாகியுள்ளன.இவரது இரண்டாவது கன்னட நாவல்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு,விரைவில் வெளிவர இருக்கிறது.கன்னடம்,
தமிழில் இரண்டிலும் கவிதைகள் எழுதுகிறார்.