நிலவைப் பார்க்கும்போது….என்பது ஒரு காதல் கதை. அது சரி, காதல் கதை என்றால் என்ன? நான் அதை விவரமாகச் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான் அது. சமூக வரலாற்றின் . . . அதெல்லாம் வேண்டாம். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல், காதல் கதைகளும் பேய்களும்… நான் சொல்லப்போவதின் சாரப்பொருள் உங்களுக்கும் புரிந்திருக்குமல்லவா..? இங்கே இன்னொரு கேள்வி எழுகிறது. பேய் என்று ஒன்று இருக்கிறதா?

இல்லை . . . அல்லது . . . இருக்கிறது.

மற்றொரு கேள்வி: பேய் பிசாசுகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா . .? இந்தக் கேள்வியின் முன் நான் அமைதியாகிவிடுவேன். எந்தப் புரிதலுக்கும் அடங்காத சில அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டதுண்டு. மனித வாசமில்லாத பாலைவனங்களில்… மலையுச்சிகளில்… குகைகளில்… மயானத்தில்… புராதன நகரங்களின் இடிபாடு களில்… பாழடைந்த வீடுகளில்… கடற்கரையில்…நிலவொளி வீசும் ஏகாந்தப் பெருவெளிகளில். . .இங்கே கடற்கரையில் வைத்து நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்க இருக்கிறேன். நான் யோசிக்கிறேன். எதைக் குறித்து? விவரிக்கவே இயலாத ஒரு சம்பவம். இதை என்னுடைய கற்பனை என்று நீங்கள் கருதலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் இது உண்மை. இதை கற்பனையாக எடுத்துக்கொள்ள நானும் முயற்சி செய்திருக்கிறேன். என்னவோ தெரியாது, நிலாவைக் காணும்போது . . . அதெல்லாம் நினைவுக்கு வந்துவிடுகிறது. பண்டொரு காலத்தில், நானொரு இளைஞனாக இருந்தேன். அன்று, நானொரு தீவிரவாதக் குழுவின் தலைவர். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், அஃப்ஸாக்குல்லாகான், சந்திரசேகர ஆஸாத் போன்ற தீவிரவாதிகள் குழு. பிச்சுவாக்கத்தி, ரிவால்வர், வெடிகுண்டுகள், ரத்தம் சிந்துவது என அடிமை பாரதத்தின் சுதந்திரத்திற்கான முயற்சிகள். இதில் சுமார் முன்னூறு உறுப்பினர்க ளிருந்தனர். பெரும்பாலும் மாணவர்கள். கூடவே, நகரிலுள்ள முக்கியமான ரௌடிகள். சண்டியர்களான ரிக்ஷாகாரர்கள், ஓட்டல் பணியாளர்கள், ஒன்றிரண்டு சமையல்காரர்கள்…இப்படியாக முன்னூறு பேர்.

ஒரு தீப்பொறி பத்திரிகையும் நாங்கள் நடத்தி வந்தோம். அதன் ஆசிரியரும் நான்தான். இன்றைய முக்கியமான எழுத்தாளர்கள் பலர்அதில்கட்டுரைகள்தானம்செய்திருக்கிறார்கள்.சொன்னேன் அல்லவா, அதுவொரு தீப்பொறி பத்திரிகை. ரத்தத்தைச் சூடேற்றும் கட்டுரைகள்தான் அதில் வெளிவரும். ஆயிரம் பிரதிகள் அச்சடிப்போம். ஆனால், ஃபைலில் வைப்பதற்குக் கூட ஒரு பிரதி மிச்சமிருக்காது. ஏற்கனவே விற்பனை செய்த யாரிடமிருந்தாவது வாங்கி வந்து ஃபைலில் வைப்போம்.

இது ஒரு தீவிரவாதக் குழுவின் பத்திரிகை என்ற விஷயம் யாருக்குமே தெரியாது. ஆனால், இந்தக் குழு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் விஷயம் அரசாங்கத்திற்குத் தெரியும். போலீசும் சி.ஐ.டி.யும் மிகுந்தக் கண்காணிப்புடன் விசாரணையில் ஈடுபட்டு வந்தன. இந்தக் குழுவுக்கு பெரிய அளவிலான நோக்கங்கள் எதுவுமில்லை. வெறுமொரு ரகசிய அமைப்பு. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஒன்றும்… ஆமாம், அப்போது ஒரு அரசியல் இயக்கம் களத்தில் நின்றிருந்தது.

இவர்களுக்கு உதவியாகச் செயல்படுவது மட்டும்தான் எங்களுடைய நோக்கம். இதை அவர்கள் சொல்லி நாங்கள் செய்யவுமில்லை. எங்களுடைய சொந்தக் கருத்து. எங்களை இதற்குத் தூண்டியது எதுவென்றா? அரசாங்கத்தின் மோசமான அடக்குமுறைகளும் போலீசின் பைசாசிகச் செயல்பாடுகளும்தான். இயக்கவாதிகள்மீது அராஜகங்களை அவர்கள் கட்டவிழ்த்து விட்டனர். பற்களை உடைப்பது; கை கால்களை ஒடிப்பது; கண்களில் குத்துவது; அவர்களது தாயையும் சகோதரிகளையும் மானபங்கம் செய்வது . . . இப்படியாக நிறைய.இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள், இன்ஸ்பெக்டர்களின் பட்டியல் ஒன்று எங்களிடமிருந்தது. நாங்கள்… இந்த முன்னூறு பேர் நினைத்தால் என்ன நடக்கும் என்பதை அவர்களுக்குப் புரியவைத்தோம். நன்றாகவே புரிய வைத்தோம்.

கடைசியில், எதற்கு… நான் சொல்ல வருவது அதெல்லா மில்லை. இந்த முன்னூறு பேரில் முக்கியஸ்தர்களாக நாங்கள் ஒன்பது பேரிருந்தோம். இதிலொருவர் ஏற்கனவே குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தில் சேர்ந்தார். மட்டுமல்ல, அதன் தலைவரும் இவரும் சேர்ந்து எங்களை போலீசாரிடம் காட்டிக்கொடுத்தனர். பத்திரிகைக் கைப்பற்றப்பட்டது. நாங்கள் கைது செய்யப்பட்டோம். எங்களை நாடு கடத்துவதற்கான எல்லா நியாயங்களும் அவர்களிடமிருந்தன. ஆனால், குற்றம் உறுதி செய்யப்படவில்லை. அதாவது, வழக்கை அரசாங்கமே பலவீனமாக்கியது. ஏனென்றால், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பெரும் செல்வந்தர்களின் வாரிசுகள். சரி, அதை விடுவோம். காட்டிக்கொடுத்த அந்த மனிதர் இருக்கிறாரே, அவர் இன்றொரு அமைச்சர். பெயர்…?

நான் சொல்ல வந்தது இதுவல்ல.கைதுசெய்வதற்கும்வழக்குத் தொடுப்பதற்கும் முன்… தீவிரவாதக் குழுவின் செயல்பாடுகள் வீரியத்துடன் நடந்துகொண்டிருந்தன. சொன்னேன் அல்லவா, நிறைய மாணவர்கள் இருந்தனர். இதில் நான்கு பேர் மேனிலைப் பள்ளி மாணவர்கள். அவர்கள் படிக்கவே இல்லை. பரீட்சை நெருங்கியது. தோற்றுப் போய்விடுவோமென்ற பயம் . .. (இந்த நான்கு பேரில் ஒருவர், இன்று போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். சில போலீஸ்காரர்களுடன் வந்து, என் வீட்டை இவர் சோதனை செய்ததுடன் என் பெற்றோர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் நிறைய தொல்லைகள் கொடுத்தார். எழுதுகிற எனது வலது கையை ஒடித்து விடுவதாக மிரட்டினார்.) சொன்னேன் அல்லவா? பரீட்சையில் தோற்றுவிடுவோமென்பது அவர்களுக்குத் தெரியும். அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தவர் ஒரு பாதிரியார். பரீட்சைக்கான கேள்வித்தாள்கள், அவரது மேசையிலோ அலமாரியிலோ இருக்குமென்று அவர்களாகவே முடிவு செய்தனர். சமையல்காரனின் உதவியுடன் மேசைக்கும் அலமாரிக்கும் கள்ளச்சாவிகளைத் தயார் செய்தனர். இரவில், பாதிரியாரின் சாப்பாட்டு வேளையில் அவரது அறைக்குள் நுழைந்து மேசையையும் அலமாரியையும் திறந்தார்கள். கேள்வித்தாள்கள் மட்டுமல்ல, வேறொன்றும் அவர்களது கண்ணில் பட்டது. வலைத் துணியிலான ஒரு பெரிய மடிச்சீலை. அதில், நிறைய ரூபாய் நோட்டுகள். ஆறாயிரம் ரூபாய்வரை இருக்குமென்று அவர்கள் யூகித்தார்கள். மாணவர்கள் செலுத்திய கட்டணமாகவோ ஆசிரியர்களின் சம்பளப்பணமாகவோ இருக்கலாம். கேள்வித்தாள்களில் ஒவ்வொரு பிரதி எடுத்துக்கொண்டனர். பணத்தையும் எடுத்துக்கொள்ள நினைத்தார்கள். இதில், எதையுமே எங்கள் அனுமதியுடன் அவர்கள் செய்யவில்லைதான். இருந்தாலும், பணத்தை மட்டும் எங்கள் ஒன்பது பேரிடமும் அனுமதி கேட்டு எடுக்கலாமென்று முடிவு செய்தார்கள். இந்தச் சம்பவம் இரவு ஒன்பது மணிக்கு நடக்கிறது. எங்களிடம் வந்து பிரச்சினையை முன் வைத்தார்கள். என்னுடைய தனிப்பட்ட கருத்து, அந்தப் பணம் நமக்கு வேண்டாமென்பதுதான். எவ்வளவு பணமிருந்தாலும் அதற்கான தேவைகளுமிருந்தன. இருந்தாலும் அதை எடுக்கச் சொல்வதற்கான தைரியம் எனக்கில்லை. என்னால் இதை அனுமதிக்க இயலாதென்று சொல்லிவிட்டேன். சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தொந்தரவு செய்த போலீஸ்காரர்களையோ இன்ஸ்பெக்டரையோ தண்டிப்பதை நான் மறுத்துப் பேசியதில்லை. ஆனால், நிரபராதியான போலீஸ்காரர்களைத் தொந்தரவு செய்வதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. இந்தப் பணத்தைப் பொறுத்தவரைக்கும், இது ஒருவகையான திருட்டு. அது போகட்டும். பத்திரிகை மூலம் வாராவாரம் கொஞ்சம் பணம் கிடைக்கிறது. குழுவுக்கான அத்தியாவசிய செலவுகளுக்கு இதுவே போதும். பிறகு எதற்காக அந்த ஆறாயிரம் ரூபாய்? துப்பாக்கிகள் வாங்கலாம். பிச்சுவாக்கத்திகள் செய்யலாம். வெடிகுண்டுகள் தயாரிக்கலாம் . . .எங்களிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. பிச்சுவாக் கத்திகளும் இருந்தன. கொஞ்சம் அதிகமாக இருப்பது நல்ல விஷயம்தான். எதுவாயினும் இது ஒரு முக்கியமான விஷயம். ஒன்பது பேரும் கலந்தாலோசனை செய்து ஒரு முடிவுக்கு வருவதாக தீர்மானித்தோம். இரவு ஒரு மணிக்கு ஏகாந்தமான கடற்கரையில் ஒன்று கூடினோம்.

நான் ஒரு பழைய சைக்கிளில் சென்றேன். ரோட்டிலிருந்து, சீனிபோன்ற மணல் பரப்பினூடே ஒரு பர்லாங் நடக்க வேண்டும். அந்தப் பகுதியில் கறுத்தப் பாறைக்கூட்டங்கள் நிறைய இருந்தன. கரைகளில் வந்து மோதும் அலைகளின் ஓசையைத் தவிர நிசப்தமான சூழல். முழு நிலவின் வெளிச்சம்.

நாங்கள் ஒன்பது பேரும் உறுப்பினர்கள் நான்கு பேருமாக மொத்தம் பதிமூன்றுபேர். அந்த ஆறாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொள்வது குறித்து நாங்கள் விவாதித்தோம். கருத்துகள்,வாதப் பிரதிவாதமாகி, பரஸ்பரம் சர்ச்சையாக மாறியது. கிட்டத்தட்ட கோபமான சூழ்நிலை. எங்களைக் காட்டிக்கொடுத்த அந்த அமைச்சர் சொன்னார்: “நீங்க ஒரு மழுங்கலான ஆள் மிஸ்டர். முக்கியமான ஒரு பிரச்சினைனு வரும்போது நீங்க மழுங்கலாயிடுறீங்க.” என்னைப் பற்றித்தான் சொல்கிறார். நான் சொன்னேன்: “இந்த ஆறாயிரம் ரூபாயையும் திருடுறதுக்கானத் தேவையிருப்பதாக நான் நினைக்கலை என்பது மழுங்கலான குணமாக இருந்தா, நீங்க சொல்றது சரிதான். நம்ம கையில நிறைய துப்பாக்கிகளும் கத்திகளும் இருப்பது நல்ல விஷயம்தான். ஆனா, நாம யாரைக் கொல்லப் போறோம்? அரசாங்கத்தோடு மோதி, அதிகாரத்தைக் கைப் பற்றுகிற நோக்கமும் நம்மகிட்ட இல்லை. தற்போதைய அரசியல் அமைப்புகளுக்கு நாம ஒரு எளிய உதவி செய்றோம் என்பது மட்டும்தான் உண்மை. போலீஸ், அவங்களுக்கு மிகமோசமாகத் தொல்லை கொடுக்குது. நீங்கள் அவங்களைத் தொந்தரவு பண்ணினா, உங்களைத் தொந்தரவு செய்யவும் ஆட்களிருக்கிறாங்க என்கிறதை போலீசுக்குப் புரிய வைக்கிறோம். இதுதானே நம்முடைய இப்போதைய நோக்கம்?” சுருக்கமாகச் சொன்னால், பெரும்பான்மை பலமும் திருட்டுக்கெதிராகவே இருந்தது. பிறகு, சிரிப்பும் வேடிக்கையுமாக நேரம் போனது. சுமார், இரண்டு மணிக்கு அனைவரும் பிரிந்து சென்றார்கள். எனக்கு, கொஞ்ச நேரம் தனியாக அமர்ந்திருக்க வேண்டும்போல் தோன்றியது. தனியாக உட்கார்ந்திருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தேன்.

எதிரில் எல்லைகளற்ற கடல்.பின்பக்கம்ஒருநகரமிருப்பதையே நான் மறந்துவிட்டேன். நிலவு வெளிச்சத்திற்கொரு . . . என்ன சொல்வது? . . . ஒரு மனோலயமும் பயங்கரமும் . . . இவை இரண்டும் சேர்ந்து ஏதோ ஒன்று உண்டல்லவா . . . நான் அதில் மூழ்கினேன். கடலைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். அலைகள்… ஒன்றன்பின் ஒன்றாக… இனம் புரியாத ஓசைகள். இரைச்சல், முழக்கம், மனப்பதற்றம். எதுவெல்லாமோ சேர்ந்த தொடர் ஓசைகள் . . . நூறு நூறாயிரம் யுகங்களுக்கு முன்பே ஆரம்பமானவை. உயிர்கள் வருகின்றன . . . போகின்றன . . .ஆனால், கடலின் இந்த ஓசை நிரந்தரமானது. இதற்கு மட்டும் முடிவே கிடையாது.இந்த எண்ணங்கள் மனதிலிருந்தனவா தெரியவில்லை. எங்கள் தீவிரவாதக் குழுவின் நிகழ்வுகளைப் பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன். எனது உடலில் அப்போது யாரோ தண்ணீரைத் தெளித்ததுபோல் உணர்ந்தேன். தண்ணீர் தானாகவே தெறித்ததுபோல் அல்ல. யாரோ தெளித்ததுபோல். நான் பார்க்கும்போது … முழு நிர்வாண கோலத்தில் அழகிய வெண்ணிறமான பெண்ணொருத்தி. என்னெதிரில் அவள் கடலில் குளித்துக்கொண்டிருக்கிறாள்.நேரம், அதிகாலை மூன்று மணியென்பதோ, ஏகாந்தமான கடற்கரை என்பதோ… அதாவது, சூழ்நிலை உணர்வு குறித்து எனக்கு எதுவுமே தோன்றவில்லை. ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கிறாள். அவ்வளவுதான். எனக்குள் சிறு கோபம் கலந்த பயம் உருவானது. எங்களுடைய வாதப்பிரதி வாதங்களை எல்லாம் அவளும் கேட்டிருக்கக்கூடும். உண்மையிலேயே எனக்கு வேர்த்துவிட்டது. அவளுக்குக் கேட்பதுபோல் சொன்னேன்:

“ஓரளவுக்காவது மரியாதை தெரியணும். குறிப்பாக, பெண்களுக்கு. எதிர்ல அறிமுகமில்லாத ஒரு ஆணிருக்கிறான். அவன் முன்னால இப்படியா பிறந்த மேனியாக நின்னுக் குளிக்கிறது? ஓ… பெண்ணில்லையா… இதுவே ஆணாக இருந்தா, இந்நேரம், ஐயோ . . . பண்பாட்டோட எல்லாக் கட்டுமானங் களும் தகர்ந்து விழுந்திருக்கும். என்னவெல்லாம் கூக்குரல்கள் கேட்டிருக்கும். மோசமான நடத்தையுள்ளவன்; நாகரிகம் தெரியாதவன்னு என்னவெல்லாம் சொல்லியிருப்பாங்க?

பெண்ணில்லையா? அவ உலகம்.”

இதைச் சொல்லிவிட்டு நான் மெதுவாக எழுந்தேன். அவள் எனது முகத்தைப் பார்க்கவோ பதில் சொல்லவோ இல்லை. என் கவனத்தை அவள்மீது திருப்புவதற்காக வேண்டுமென்றே தண்ணீரைத் தெளித்திருக்கிறாள் என்பதை நான் புரிந்துகொண்டேன். எங்கள் தீவிரவாதக் குழுவின் பேச்சுக்களையும் அவள் கவனித்திருப்பாள். எனக்கு ரொம்பவே கோபம் வந்தது.நான் சைக்கிளைத் தள்ளிச் சென்று தொலைவில் போய் அமர்ந்தேன். காற்று பலமாக வீசியது. சிரமத்துடன் தீக்குச்சியை எரியவைத்து சிகரெட் பற்ற வைத்தேன். நாங்கள் பேசுவதை அவள் கேட்டாளா? இதை எனக்கு அறிந்தாக வேண்டும். அவளிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்து தந்திரமாக இதை அறிய வேண்டும். அவள் எப்போது குளிக்க வந்தாள்? உடைகளை எங்கே வைத்திருக்கிறாள். இந்த நள்ளிரவில் அவள் தனியாக வருவதற்கான காரணமென்ன? இதெல்லாம் எனக்குத் தோன்றவே இல்லை. சொன்னேன் அல்லவா? எனக்கு கோபம்தான் வந்தது. எங்கள் ரகசியப் பேச்சுகளை அவள் அறிந்துவிட்டாள். போதாக்குறைக்கு என்மீது தண்ணீரையும் தெளித்தாள்.

பேச்சைஎப்படிஆரம்பிப்பது?நான்நினைத்துக்கொண்டேன்.அவளாகவே வந்து ஏதாவது பேசட்டும். அப்படி இருக்கும்போது என் எதிரில் நின்று தண்ணீரைத் தெளித்துவிட்டு ஓடி வருகிறாள்!என்னை மிதித்துவிட்டு ஓடப்போவதுபோல்… நான் துள்ளியெழுந்தேன். இப்போது அவள் என்முன் . . . இடுப்பில் கைகளை ஊன்றியபடி சிருங்கார பாவனையுடன் நிற்கிறாள். தலை முடியிலிருந்தும் உடலிலிருந்தும் நீர் வடிந்துகொண்டிருக்கிறது. திடமான உந்தி நிற்கும் வெளுத்த மார்பகங்கள் . . .

என் மனதில் கோபத்தைத் தவிர வேறெதுவுமில்லை. நான் கேட்டேன்: “என்னடீ, கண்ணு தெரியாதா உனக்கு? எதிர்ல ஒரு மனுஷன் நிக்கிறது உனக்குத் தெரியலையா? என்னை யார்னு நினைச்சிருக்கே நீ?” அவளது சிருங்கார பாவனையில் சற்று கௌரவமும் சேர்ந்துகொண்டது. என்னையே பார்த்தாள். நான் கேட்டேன்:

“என்னடீ நினைச்சிருக்கே நீ? உன் உடைகளெல்லாம் எங்கே?”
அவள் பதில் சொல்லவில்லை.
நான் மீண்டும் கேட்டேன்:
“உன் வாயில நாக்கு இல்லையாடீ?”
அவள் மிகுந்தக் கௌரவத்துடன் என்னையே பார்த்தாள்.
நான் சொன்னேன்:
“முறைச்சுப் பார்த்தா பயந்துடுவேனா? உதைச்சு எலும்பை உடைச்சிடுவேன். போ . . . போ.
போயிடு இங்கிருந்து.”
இதை நான் உரத்தக் குரலில் சொன்னேன். அவள் என் சைக்கிளை விட்டு விலகி நடந்தாள்.
சரியாக என்னெதிரில் வந்தபோது, விரிந்து கிடந்தத் தலைமுடிகளினூடே என்னை ஒரு தினுசாகப்
பார்த்தாள். மீண்டும் நடந்தாள்.
நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது . . . திடீரென்று அவளைக் காணவில்லை.
என்னுடல் முழுவதும் சில்லிட்டது… என்ன இது? எங்கே போய்விட்டாள்? பரந்து விரிந்த சூனியமான கடல் பரப்பு. நட்சத்திரங்கள் நிறைந்த, நிலவுடன்கூடிய வானம். ஏகாந்தமான மணல் வெளி. அவள் எங்கே? கடல் நீரைக் குடித்து இறந்து போன பெண்ணின் . . . என் மனதில் பயத்தின் நிழல் படர ஆரம்பித்தது… அதாவது, எதுவோ சரியில்லைபோல் தோன்றியது. நான் சைக்கிளைத் தள்ளியபடியே நடக்கத் தொடங்கினேன். அப்போது ஒரு வேடிக்கை.சைக்கிள் அசையவில்லை.

நான் அப்படியே உறைந்துபோனேன். வேர்வைத் துளிர்த்தது. குளிர்ந்த வேர்வை. அந்த இடத்தில் அப்படியே நின்றபடியே தொண்டையைக் கனைத்துக்கொண்டேன். எதுவோ எனக்குப் புரிந்துவிட்டதுபோல் சொன்னேன்:

“ஓ…அதுவா விஷயம்? சரி, இதில, யார் வெற்றி பெறப்போறாங்க என்கிறதையும் பாத்துடுவோம்; நீயா அல்லது நானான்னு. பாத்துட்டே இரு.” நான் சைக்கிளைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நடந்தேன். பின்பக்கமிருந்து கடலில் இரைச்சலுடன் கூடவே மற்றொரு ஓசையையும் நான் கேட்டேன். பத்து இருபது பெண்கள் ஒன்று சேர்ந்து குரவையிடுவதுபோல். தெளிவாகக் கேட்கவில்லை. எதிரொலிபோல். அத்துடன், எனது உடம்பில் மண் விழுந்தது.

நான் திரும்பியே பார்க்கவில்லை. காற்றும் மண்ணும் கடல் இரைச்சலும் குரவைச் சத்தமும் . . .
நான் நடந்தேன். ஷூவில் மண் ஏறி, விரல்களில் தோலுரிவதுபோலிருந்தது. நான்
நடந்துகொண்டிருந்தேன். இதற்கு சில மணி நேரங்களானது போலிருந்தது. மின் விளக்குகள் எரியும் ஆளரவமற்ற ரோட்டுக்கு வந்த பிறகு திரும்பிப் பார்த்தேன்.

“இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். பயங்கரமாக மூச்சு வாங்கியது. பிறகு, சைக்கிளிலேறி விரைந்தேன். தங்கியிருந்த இடத்துக்குச் சென்று உடைகளையெல்லாம் மாற்றி தண்ணீரில் வைத்துவிட்டு நன்றாகக் குளித்தேன். துவைத்த உடைகளை அணிந்துகொண்டேன். அப்போதும் எனக்குள் கேட்டுக்கொண்டேன்:

“இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?”

காலங்கள் கடந்தன. நாடு சுதந்திரமடைந்தது. பல்வேறு மாற்றங்கள் உருவாயின. கடல் மட்டும் மாறவே இல்லை. கறுத்துருண்ட பாறைக்கூட்டங்களும். அவ்வப்போது இந்தச் சம்பவம் நினைவுக்கு வருவதுண்டு. குறிப்பாக, நிலவைக் காணும்போது.

ஓவியங்கள் : றஷ்மி.

(விரைவில் காலச்சுவடு பதிப்பாக வெளியீடாக வரவிருக்கும் பஷீரின் ‘அனல்
ஹக்’(மொ-ர்-குளச்சல் மு.யூசுப்) என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள
சிறுகதை)