ஆட்டம் – சு.வேணுகோபால் (குறுநாவல்)
ஆட்டம் –
சு.வேணுகோபால்

தமிழினி பதிப்பகம்,சென்னை.
பக்.120.விலை.ரூ.90.

எண்ணெழுத்து இகழேல்
வெற்றி மகிழ்ச்சிக்குரியதாக இருக்கலாம்.வேண்டுமானால் வரலாறாக ஆகலாம்.ஆனால் அது ஒரு போதும் கதைக்கான பொருளாவதில்லை.அப்படியே ஆனாலும் அது விதிவிலக்காகவே அமையும்.எப்போதும் தோல்வி தான் கதையாகிறது.அவமானமும் வலியும் இழப்பும் கண்ணீரும் தான் கதைகளுக்கு அழியாத நிறங்களைக் கூட்டுபவை.ஆட்டம் என்ற இச்சிறுநாவல்,முன்நாளில் வெற்றிகரமான கபடி வீரனாக விளங்கிய வடிவேலின் பார்வையில் விரிகிறது.பிழைப்புத் தேடி வந்த இடத்தில் அவன் வாழ்க்கையில் பெரும்சறுக்கல்.அதிர்ச்சியிலும் இயலாமையிலும் உறைந்து போகிறான்.அதை ஈடுகட்டி தன் ஆண்மையை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என்ற வெறியோடு,தனக்கு ஆகி வந்த கபடி ஆட்டத்தினுள் மீளவும் இறங்குகிறான்.மனதின் வேகத்திற்கு வயதும் உடலின் வலுவும் ஒத்துழைக்க மறுக்க கேளிக்காளாகி விலகுகிறான்.முன்பு வெற்றி அவனை பிறருக்குக் காட்டியது.இப்போதோ தோல்வி அவனையே அவனுக்குக் காட்டுகிறது.வேதனையில் வெந்தடங்கும் அவன் கரிந்து,குளிர்ந்து பின் மலர்ந்து கனியும் சித்திரமே இச்சிறுநாவல்.அவன் தன்மிதப்போடு ஆடும் கபடி தானாடுகையில் தன் தசை இழந்து வாடும் வாழ்க்கை,இரண்டிற்கும் அப்பால் அவனையும் அனைவரையும் அனைத்தையும் வைத்து ஆடுமந்த அனந்தமின்மையின் நியதி இம்மூன்றையும் ஒன்றைத்தொட்டு மற்றவற்றைக் குறிப்புணர்த்தும் பாங்கில் இந்நாவல் சிறக்கிறது.