ஆயிரம் சந்தோஷ இலைகள் – ஷங்கர் ராமசுப்ரமணியன் (கவிதை)
ஆயிரம் சந்தோஷ இலைகள்
ஷங்கர் ராமசுப்ரமணியன்

பரிதி பதிப்பகம், ஜோலார்பேட்டை
பக்கம்-288;விலை ரூ.260.

அதிக ஆராவாரமில்லாமல் ஆனால் குறையாத தீவிரத்துடன் தொடர்ச்சியாக கவிதையுலகில் தொழிற்பட்டு வருபவர் சங்கர்.இதுகாறும் வெளியான அவருடைய ஆறு தொகுப்புகளினின்றும் தெரிவு செய்யப்பட்ட கவிதைகளின் பெருந்தொகையே இந்நூல்.’புதியது’ என்பது குறித்த அர்த்தத்தில் நம்பிக்கை உள்ளவை எனது கவிதைகள் எனக்கூறும் ஷங்கரின் கவிமொழி பாம்பொன்றினுடையதைப் போல சாத்தியமாகும் போதெல்லாம் தன்னை சட்டையுரித்துக் கொள்ளும் தன்மை கொண்டிருக்கிறது.சொற்களின் பேச்சரவம் குறைந்து தொனி வித்தியாசங்களின் வழியாக,அர்த்தத்தின் மாறுபட்ட தளங்களை தொடமுயல்வதை இவருடைய பல கவிதைகளிலும் காணமுடிகிறது.நிறுவப்பட்ட பெருவழிகLaளால் அல்லாமல் தனதேயான ஊடுவழிகளினூடாக அறியப்படாத நிலங்களின் வழி அலைவதனால் அடையப்பெறும் ஆனந்தத்தையும் விடுதலையையும் எதிர்பார்ப்பின்மையையும் உணரச்செய்வதாக உள்ளது இக்கவிதைகள்.சம்பிரதாயமாக அல்லாமல் ஆழ்ந்த அக்கறையுடன் எழுதப்பட்டுள்ள ஸ்ரீநேசனின் முன்னுரையும் தனித்துச் சொல்லும்படியானது.

பச்சையம் நிரம்பிய பசிய இலைகள்.!