தடித்த கண்ணாடி போட்ட பூனை – போகன் சங்கர் (கவிதை)
தடித்த கண்ணாடி போட்ட பூனை
போகன் சங்கர்

உயிர்மை பதிப்பகம், சென்னை.பக்கம்
160;விலை ரூ.130.

நம் மனதின் சமநிலைகளை கலைத்து அலைகழிக்கச் செய்யும் ஆற்றாமை,கோபம்,குற்ற உணர்வு,நிச்சயமின்மை,பயம்,காமம்,அருவருப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை அதிகமாக உணரும் பிரத்யேக நரம்பொன்று நம் தண்டுவடத்தினூடாக மூளையை நோக்கி நகருமெனில்,அதை நடுவழியிலாக நசுக்கி அதிரச்செய்யும் வல்லமை கொண்ட வர்ம் ஆசானின் பிடியையொத்தவையாக முடிவற்று விரிவது போகனின் காட்சி படிமங்களின் வரிசை.மல்பெரி இலைகளைப் புழுக்கள் தின்னும் ஓசை கேட்குமளவிற்கு துல்லியமான பட்டு அமைதியிலிருந்து,கண்ணீரின் உப்பு துளியும் சேராத விஷயங்களின் ஆபாசம் வரையிலுமாக இவருடைய வரிகள் தொட்டுமீளும் நுண்தருணங்களும் மனதின் இருட்டு மூலைகளும் புதியதொரு வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.குறுங்கவிதைகளிலிருந்து நெடுங்கவிதைகள் வரைக்கும் கட்டற்று எழுதிக் குவித்திருக்கும் கவிதைகளில் சற்றும் நகல் பிரதித்தன்மை காணப்படுவதில்லை என்பதொரு ஆச்சரியமே.இவர் முன்வைக்கும் உவமைகளிலும் படிமங்களிலும் தென்படும் பரிச்சயமழிப்பும் எதிர்பாராதத் தன்மையும் விநோதமும் வாசிப்பின் போது ஆர்வத்தையும் புத்துணர்வையும் அளிக்கிறது.தீவிரமாகவும் அதே சமயம் விளையாட்டுப் போலவும் அவர் எழுதியடுக்கும் வரிகளினூடாக தனது விசாலமான வாசிப்பின் சாரத்தையும் அதன் விளைவான அனுபவத் திவலைகளையும் அழுத்தம் ஏதுமின்றியே வாசகனுக்கு மடைமாற்றுவிக்கும் மொழி எளிமையும் இவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது.ஒரு புனைகதைக்குரிய ஈர்ப்புடன் இவருடைய கவிதைகள் வாசிக்கமுடிகிறது என்பது மற்றுமொரு சிறப்பு.

இந்தப் பூனையின் மியாவ்மியாவ்
வேறு பூனைகளின் மியாவ்மியாவிலிருந்து
நிறையவே வித்தியாசமானது.