வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு – ரேமண்ட் கார்வர் [தமிழில் : செங்கதிர்] (சிறுகதை)
வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு
ரேமண்ட் கார்வர்

தமிழில்:செங்கதிர்
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
பக்கம்-224.ரூ.200

அமெரிக்கச் சிறுகதை இலக்கியத்தில் ஹெம்மிங்வேவுக்குப் பிறகு அவருக்கிணையாக புகழடைந்த பிறிதொரு எழுத்தாளர் என கார்வரைத்தான் சொல்ல வேண்டும்.இவர் எழுதிய தொண்ணூறுக்கும் மேற்பட்ட கதைகள் ஐந்து தொகுதிகளாக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.நகர்ப்புறத்தில் வசிக்கும் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைப்பாடுகளே இவரது கதைகளின் கச்சாப் பொருள். நேரடியான எளிய விவரணைகள் மூலம் கதையை நகர்த்திச் செல்லும் யதார்த்தவாத சொல்லல் முறை இவருடையது.இம்முறையிலான எழுத்தில் தென்படும் சாதாரணத்தன்மை உண்மையில் அவ்வளவு சாதாரணமானது அல்ல என்பதை இவருடைய கதைகளைப் படிக்கும் போது அழுத்தமாக உணரமுடியும்.கார்வரின் வெவ்வேறு பரிமாணத்தை உணர்த்தும் விதமான சிறிதும் பெரிதுமான பனிரெண்டு சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.தொகுப்பாசிரியர் செங்கதிர் எழுதியிருக்கும் நீண்ட முன்னுரை கார்வரின் கதையுலகை விரிவாக அறிமுகம் செய்வதோடு அவர் கதைகள் தமிழுக்கு வரவேண்டியதின் அவசியம் பற்றியும் எடுத்தியம்பியுள்ளது.சில இடங்களில் ஆங்கிலத்தில் கூட்டு வாக்கியங்களைப் பின்பற்றியிருப்பதற்குப் பதிலாக,தமிழ் வாக்கிய அமைப்பிற்கேற்ப சிறு வரிகளாகப் பிரித்து எழுதியிருப்பின் இன்னு ம் சரளமாக இருந்திருக்கும் என்பதைத் தவிர பெரிய குறைகளெதுவும் தென்படவில்லை.

எளிமையின் மேதமை வெளிப்படும் கதைகள்.