சிற்றிலக்கியங்கள் – நாஞ்சில்நாடன் (கட்டுரை)
சிற்றிலக்கியங்கள்
நாஞ்சில்நாடன்

தமிழினிபதிப்பகம், சென்னை
பக்கம்.400.ரூபாய்.300.

’கடல் குடித்த குடமுனியும் கரை காணக் குரு நாடும்’ வனமுடைத்தது நம் மொழி.பழையது எதுவும் உப்பு மிளகாய் புளிக்காகாது என்றெண்ணி பதரோடு சேர்த்து நிறை விளைச்சலையும் தள்ளிவிட்ட தலைமுறையில் பிறந்தவர்கள் நாம்.யாழ் காக்கும் தனிமகன் போல்,வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டத்தில் ஒருவர் காத்து வைத்த செல்வம் பலதும் இங்கு உண்டு.அவற்றின் சீர் முழுதும் அறிந்தோமில்லை.அத்தகு நிதியங்களில் ஒரு வைப்பு தான் சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்.தெய்வம்,மன்னர்,செல்வந்தர்,புரவலர்களைப் பற்றி விதந்து பாடப்பெற்ற இச்சிறு நூல்களின் கருப்பொருளால் அமைவது பேரளவு பக்தியும் ஓரளவு காமமும் ஆகும்.செய்யுள் விதிகளை ஒப்பேற்றி ஓய்ந்தவையே மிகுதியும் என்றாலும் கவித்துவத்தின் பலத்தால் விஞ்சியவையும் ஈங்குண்டு.சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைப்படுமென இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.அவற்றுள் கோவை,உலா,தூது,பள்ளு,பரணி,சதகம்,மாலை ஆகியவை பற்றின முழுமையான அறிமுகத்துடனும் எண்ணிறந்த மேற்கோள்களுடனும் ,ஆழங்கால் ரசனையுடன் விளம்பப்பட்டிருக்கும் இந்நூல்,பயன்மொழி என்பதற்கப்பால் தமிழின் பொருண்மையை வரலாற்றை வீச்சைத் தேடி பயணிப்போர்க்கு ஆன்ற கைவிளக்கு.

தொல்பழஞ் சொல் குறித்தெனினும் சுவைபுதிது.