கண்டி வீரன் – ஷோபா சக்தி (சிறுகதை)
கண்டி வீரன்
ஷோபா சக்தி

கருப்புப் பிரதிகள், சென்னை.
பக்கம்.192.விலை.ரூ.160.

விடுதலைப் போராட்டம் அல்லது உள்நாட்டுத் தீவிரவாதம் என எப்பெயரிட்டு அழைத்தாலும் ஆயுதம் தாங்கிய யுத்தம் என்பது அதற்கு ஆட்பட்டவர்கள் அனைவருக்குமே குரூரமானதொரு எதார்த்தம்.விதிகள் ஏதுமற்ற அவ் ஆட்டத்தின் போது,மனித வாழ்வு பற்றி,அதன் பண்பாடு,நாகரீகம் குறித்து நாம் தொகுத்து வைத்திருக்கும் அத்தனை மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் நொறுங்கியப் போகும் அபத்தத்தை வரலாறு நெடுக நாம் காண்கிறோம்.அந்த அவலத்தை,அரசியலை முன்னிட்டு வாழ்வை பரிகசிக்கிற மூர்க்கத்தை,அதன் கருணையின்மையை பலகாலும் கதைகளின் வழி புனைந்துரைக்கும் ஷோபாசக்தி சமகாலத் தமிழ்ச் சிறுகதையாளர்களில் முக்கியமானவர்.இவருடைய கதைகளில் தொனிக்கும் நகைமுரண் என்பது அதன் நேரெதிர் விளைவான அவலச்சுவையை ஏற்படுத்துவதோடு நம்மை ஒரு வித கையறு நிலைக்கு ஆளாக்கிவிடுவதை பதட்டத்தோடு உணருகிறோம்.இத்தொகுப்பிலுள்ள பத்து கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவை என்றாலும் ஒரு கப்டன்,மாதா,கண்டி வீரன் ஆகியன அழிய மறுத்து நினைவில் துருப்போல படிந்து வெகுநாட்களுக்கு நம்மை தொந்தரவுக்கு உள்ளாக்கும் தன்மையிலானவை.

கண்டி வீரன் – நம் காலத்து நாயகன்.