அவனை எழுதிவிட முடியாமல் தோற்கிறேன்
ஒரு நாக்கிலோ, ஒரு வார்த்தையிலோ
ஒரு புகைப்பட சட்டத்திற்குள்ளோ
அடங்கிவிட முடியாமல் பிதுங்குகிறது
அவன் என்ற சலனம்

எரிவதற்கு எதையும் விட்டுவிடாமல் அணைத்துவிடும்
அவனிடமிருந்து எதையாவது ஒளிப்பதற்கு
திணறுகிறது மொழி

வலிக்கிறது ஆனால் வலிக்கவில்லை
இடையில் வரும் வரிகளில் அவனை
சேர்க்க முடியவில்லை

தழும்பாக மறுக்கும் காயத்தில்
வழிந்துக் கொண்டிருக்கும் ரத்தமும் அவன்
ஊறிக் கொண்டிருக்கும் ரத்தமும் அவன்
இடையில் எந்த கவிதையையும் நிகழ்த்த முடியவில்லை
களிப்பின் எந்த எழுத்தில் அவன் தரிசனம் தருகிறான்
என்பதை கூட்டி கழித்துப் பார்ப்பதில் இருக்கும்
கிளர்ச்சி
எழுதுவதில் தேறவில்லை

விசித்திரமான மிதவையாக
என்னை இழுத்துச் சென்றுக்கொண்டிருக்கும் அவன்
இதுவரை காட்டியதெல்லாம்
அறிந்திராத திணைகள்
புழங்காத திசைகள்

புனைவாக மறுக்கும் அவனை அழுத்தமாக முத்தமிடுகிறேன்
அதன் ஈரம் ஆவியாகி மேகமாகி மழையாகி நதியாகி
கடலாகி
நிறைக்கிறது என் வெற்றிடங்களை
புன்னகைக்கிறேன்
அந்தக் கணம் நான் என்கிறான்
மேலும் புன்னகைக்கிறேன்
அப்படியாவது அவன் வடிவம் பெறட்டும்