வளர்பிறை நாட்களை நேசிப்பவன்
அந்நாட்களின் இரவுகளை
வெட்டவெளிகளில் கழிப்பது வழக்கம்
எப்போதும் நல்வாய்ப்பு கிட்டாத வாழ்க்கைதான்.
அன்றொருநாள் அந்தியில்
நீர்நிலை சூழ்ந்த சிற்றூருக்கு பயணப்பட்டான்.
தென்னைகள் நிறைந்த ஊரானதால் அந்தியே
முன்னிரவைப்போல தோற்றப்பிழை காட்டியது.
பசிக்கு அன்னம்பாலிக்கும் பேரிளம்பெண்
எங்கிருந்தோ நாயை அழைத்துக்கொண்டிருந்தாள்.
சற்று காலாற நடந்தாலென்ன வென்று
பாதங்கள் தேய்த்த பாதைவரை சென்று மருகினான்.
தேவதைகளை காவியமாக்கும் பெண்ணொருத்தி
நிழலுருவாய் அருகில் நின்று
அய்யா சற்றுத் தள்ளிச் செல்லுங்கள்
இது பெண்கள் செல்லும் பாதையல்லவா
என்றழைக்கவும் நகர்ந்தான்
பிறகு பிருஷ்டத்தில்பட்டு ஆடிய கூந்தலை
வலக்கையால் அள்ளி வரப்புகளைத்தாண்டி
வயல்களை விட்டு மட்டைவழிச் சிதறிய
கதிர்களைப்பற்றி வானம்வரைச் சென்று
வளர்மதியானாள்.

அடுத்து