சதா யோக்கியதையை
கேள்வி கேட்கிறது
யோக்கியத்தனம்
அயோக்கியதைக்கு
இந்த சிக்கல் இல்லை
இல்லவே இல்லை.

நல்லவனாயிருப்பதைக்
காப்பாற்றத் தன் வாழ்நாளைச்
செலவழிக்கிறான் ஒருவன்.
அதையொரு பன்னீர் கரும்பைப்போல
கடித்துத் துப்பிச்செல்கிறான் மற்றொருவன்.

காட்டாற்று வெள்ளத்தின்
ஓரம் நின்று
கை கால் முகம்
கழுவிக்கொள்கிறான்
அயோக்கியன்
அவ்வளவு அயோக்கியத்தனமும்
அடித்துக்கொண்டு போனது
வெள்ளத்தில்.
வெதுவெதுப்பாக
நீரை விளவி
கைகளை நனைக்கிறாய்
உன் யோக்கியதை
இரத்தச் சிவப்பாய் மாற்றுகிறது
தண்ணீரை.

யோக்கியனாகவே கழித்துவிடும்
வாழ்க்கையை போலொரு
துயருண்டா இல்லையா.

ஆசாபாசங்களை
மலத்தைப்போல
அடக்கிக்கொண்டிருக்கிறது
யோக்கியதை
அயோக்கியத்தனத்திற்கு
அந்த மலச்சிக்கல் இல்லை.
சந்தர்ப்பவாதமும்
அயோக்கியத்தனமும்
நல்ல நண்பர்கள்
வேண்டுமானால்
இரண்டு நல்ல
நண்பர்களை உற்றுக்
கவனியுங்கள்.

அடுத்து