மலையின் உள்ளே ஒரு கோட்டை
கோட்டையின் உள்ளே ஒரு கோயில்
கோயிலின் உள்ளே ஒரு சிலை
சிலையின் உள்ளே ஒரு தெய்வம்
தெய்வம் அது இப்போது அங்கில்லை
சிலை இருக்கிறது
கோயில் இருக்கிறது
கோட்டை இருக்கிறது
மலை இருக்கிறது
தெய்வமும் இருக்கிறது ஒருவருக்கும் தேவையில்லாமல்
தெய்வம் தேவையில்லையெனில்
சிலைகள் புனிதமிழக்கும்
சிலைகள் புனிதமிழக்க
கோயில்கள் பாழடையும்
கோயில்கள் பாழடைய
கோட்டைகள் சிதிலமடையும்
கோட்டைகள் சிதிலமடைய
மலைகள் கற்குவியலாகும்
கற்குவியலெனவே மதிப்புறும் மலைகள்
வெறும் பொருளாக விலையாகக் கூடும்
விலையாகும் மலைகள்
நாம் பார்த்திருக்கும்போதே
இருந்த இடத்தோடு காணாமல் போகும்.

அடுத்து