கனத்த மனத்துடன் இருந்தேன்
இறக்கிவிட
தோதான இடம்
தோதான பொழுது
தோதான முகம்
இல்லாமல் அலைந்துகொண்டிருந்தேன்
நண்பர்களிடம் சென்றேன் திரும்பினேன்
ஏரியின் அந்திக் கருக்கலுக்குள் இருந்தும் மீண்டேன்
மலையின் உச்சிவரை ஏறியும் இறங்கினேன்
சுமை இறங்கியதாய் இல்லை
மழை மேகம் திரண்டு இருட்டிக்கொண்டு வந்த
ஒரு மதியம்
ஏதோ ஒரு பழமையான ஊருக்கு வெளியே
ஒரு முதுமையான மரத்தின் கீழ்
பேரமைதியில் நிலைத்திருந்த ஒரு தொன்மையான கூரிய கல்
கற்கால மனிதனின் ஆயுதம் போல
தெய்வீகப் பூச்சு ஏதுமில்லாமல்
அதனெதிரே இதோ அமர்ந்திருக்கிறேன்
எனக்குள்ளிருந்த யாவற்றையும் அது உறிஞ்சிக் குடிக்கலாம்
இன்னும் சில நிமிடங்களில்
சிறு காற்றுக்கும் புரளும் ஒரு இலைச் சருகென
நான் புரண்டு மிதந்து பறந்து
திரும்புதலே இல்லாது வானேகவும் செய்யலாமென.