புத்துலக வரைபடத்தில் இடம்பெற்றிருந்த
உனது நினைவுச் சின்னத்தைக் காண்பிக்க வந்தபோதும்
நீ மதுச்சாலையில்தான் இருந்தாய்
எனக்கு மது வாங்கினாய்
மொத்த இரைச்சலையும் தாங்கிய பின்னும்
உனது மௌனம் வீரியத்துடனிருந்தது
திடீரென நுழைந்த காவலர்கள் வரைபடத்தைக் கைப்பற்றி
நம்மைக் கைது செய்தனர்
(அரசின் தந்திரம் நாம் அருந்திய மதுவைவிட
பழங்காடி என்பதை நாம் பேசிக்கொள்ளத் தேவையிருக்கவில்லை)

வரலாறு நெடுக உரமூட்டப்பட்ட
மக்கள் சக்தியின் அரசியல் பிரக்ஞாபூர்வக் கேள்வி
‘மீந்த மதுவை வழக்கு மன்றத்தில் அருந்துவார்களா?’
மறுநாள் செய்தித்தாள்களில் வெளியாகி யிருந்தது

நினைவுச் சின்னத்தை தோண்டி எடுக்கும்போது
உனது பிணத்தைப் பார்த்த அச்சத்தை
நீதிபதி வெளிக்காட்டிக் கொள்ளவில்லை
எனினும் அவர் பிடித்திருந்த குடையின் கூரை மேலாக்கத் தூக்கிக் கொண்டது

சூறாவளிக் காற்றுடன் பலத்த மழைக்கிடையில்
எதிர்காலத்துக்கு மிகச் சமீபத்தில்
மெய்யாகவே மதுவருந்திக் கொண்டிருக்கும்
நீ
யாவரையும் வீழ்த்திக் கொண்டிருக்கிறாய்.

( வே.பாபுவுக்கு…)