கெத்தி பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த போது, நடுஇரவுக்கும் மேலாகிவிட்டது.இனிமேற்பட்டு கொடைக்கானலுக்கு பேருந்து இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.அதிகாலை நான்குமணிக்கு சக்தி டிரான்ஸ்போர்ட் வரும்வரை காத்திருக்க வேண்டுமென நடந்தான். அனார்கலி இப்போது கொடைக்கானலில்தான் இருக்கிறாள். முதலில் அவளும் சிலுவையும் கல்யாணம் செய்து கொண்டு ஊரைவிட்டுப்போயிருப்பார்கள் என்று கூட அவனது சிந்தனை ஓடியது. ஆனால் சிலுவைக்கு இப்போது மஞ்சள்காமலை வந்து கோம்பையில் மருந்து வாங்கிக்குடித்துக் கொண்டிருக்கிறான் என்று மாரி சொன்னான். அனாரின் வீட்டிற்குப் பக்கத்திலிருக்கும் சூர்யதாசுதான் அவள் கொடைக்கானலுக்குச் சென்றிருக்கிறாள். சாமிக்கன்னுவின் மகள் பிரசவத்திற்குத் துணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்ற தகவலைச் சொன்னது. கெத்திக்கு அதற்குப் பிறகுதான் நிம்மதியாக இருந்தது.கெத்தி இரண்டு நாட்களாக பெரிய ஆஸ்பத்திரியில் படுத்திருந்தான். பூச்சி மருந்தைக்குடித்து சாகக்கிடந்து பிழைத்து கொண்டான். ஒருவாரத்திற்குப் பிறகு நேற்றுதான் அவன் வேலைக்குச் சென்றுவந்தான். கெத்தியின் கையில் ஆயிரம் ரூபாய் இருந்தது. அவன் நேற்று மாலை ஒருவீட்டிற்கு செப்டிங்டேங் சுத்தம் செய்ய பரமனுடன் சென்றான். மூன்று உறைகள் கொண்ட செப்டிங்டேங்கை மாலை ஆறுமணிக்கு உடைத்து பிரிக்க ஆரம்பித்தார்கள். செப்டிங்டேங்கின் மேல் உறையை பிரித்தெடுக்க இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. கொத்தனார் பெரியகாமு கூடவே இருந்தார். கெத்தி உறைகளுக்குள்ளாக செல்ஃபோனிலிருந்த டார்ச்லைட்டை அடித்து ‘டஸ்ட்’ எவ்வளவு இருக்கிறது. எந்த உறையில் தண்ணீர் இருக்கிறது என்று பார்த்தான். கொத்தனார் பெரியகாமு மோட்டர்மிஷின் கொண்டு வந்து உறிஞ்சுவதற்கு சம்மதிக்கவில்லை. வாளிவாளியாக அள்ளிக்கொண்டுப் போகவேண்டுமென்று ரேட் பேசினார். அவருக்கு கமிஷன் உண்டு. பரமனைத் தனியாக அழைத்துக் கொண்டு போய் பேரம் பேசி சம்மதிக்க வைத்தார். எவ்வளவு பேசினாலும் கெத்திக்கு ஐநூறு ரூபாய் தான் பரமன் தருவான்.பரமனுடன் சென்றால் அவனுக்கு ஐநூறு ரூபாய் மட்டும் தான் கிடைக்கும்.வேண்டுமென்றால் இரண்டு புரோட்டா சாப்பிட்டுக்கொள்ளலாம். இரண்டு வேளை டீயை வீட்டுக்காரர்கள் வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். கெத்தி பரமனுடனும் மாரியுடனும் வேலைக்குப் போய் வந்தான். பரமனுக்கு மாரி பரவாயில்லை. மாரி குவாட்டர் வாங்கிக்கொடுப்பான். இரண்டு சிகரெட் வாங்கிக்கொடுப்பான். ஆனால் ஐநூறு ரூபாயை இரண்டு நாட்கள் கழித்துதான் தருவான்.

அவன் சென்ட்ரல் லாட்ஜில் வேலைக்கு இருக்கிறான். மாரியைப் போல தானும் ஏதாவது ஒரு லாட்ஜில் வேலைக்குச் சேர்ந்துவிட்டால் தனக்கு பணக்கஷ்டம் வராது என்று பலதடவை மாரியிடம் வேலைக்குக் கேட்டிருக்கிறான். மாரி பார்ப்போம் பார்ப்போம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டுவந்தான். ஆனால் அவன் வாரத்தில் ஒருதடவை ஜீவன் தியேட்டருக்குப் போய் கிளின் செய்துவிட்டுவருகிறான். அந்த வேலையையாவது தனக்கு விட்டுத்தராலாமென கேட்டுப்பார்த்தான். அதுவும் முடியாது என்று சொல்லிவிட்டான்.

அனார்கலியும் கெத்தியும் காதலித்து வருவது மாரிக்கு மட்டும்தான் தெரியும். முதலில் சிலுவைக்கு அவள் மடங்கியிருந்தாள். சிலுவை அவளுக்கு வேண்டிய தீனி போட்டு குதிரையை வளர்த்து வருவது போல வளர்த்து வருவதாக பேசிக்கொண்டார்கள். சிலுவையிடமிருந்து எப்படி அவள் விலகினாள் என்பது தெரியாத ரகசியமாக இருந்தது. ஆனால் நிச்சயமாக சிலுவை அவளைத் தொட்டிருப்பான் என்பதை மட்டும் யாரும் மறுக்கவில்லை. அனார்கலியிடம் ஒருமுறை கெத்தி இதுகுறித்து கேட்ட போது அவள் கவலைப்பட்டுக்கொள்ளவில்லை. தெருவிலிருக்கும் பயல்கள் தன்னை இப்படி பேசுவதை குறித்து எந்த கவலையுமடையவில்லை.கெத்தி இதன்பிறகுதான் அவளை காதலிக்கத் தொடங்கினான்.

பரமனுக்கு பெரியகாமு பணம் கொடுத்தனுப்பினார்.இன்னமும் மண்ணெண்ணை பினாயல் டெட்டால் சோப்பு கொச்சைக்கயிறு என்று எதுவும் வாங்காமல் பரமன் வந்திருந்தான். கெத்திக்கு பயமாக இருந்தது.இதுவரை மிஷின் போட்டு பைப் வழியாக உறிஞ்சியெடுத்திருக்கிற வேலைக்குத் தான் அவன் சென்றிருக்கிறான். ஆனால் இப்போது உறை மேலிருக்கும் சிமெண்ட் பலகைகளை அகற்றிவிட்டு டஸ்ட்டை அள்ளவேண்டும்.தொட்டிக்குள் இறங்கி வேலை செய்வது அவ்வளவு சுலபமில்லை. இரண்டு ஆள் ஆழத்தில் தொட்டி இருந்தது. முதல் உறை தண்ணீராகவும் இரண்டாவது உறை தண்ணீரும் டஸ்ட்டும் கலந்து இருந்தது.மூன்றாவது உறையைப் பார்க்கும் போது தான் அவனுக்கு பயத்தில் உடல் நடுக்கமெடுத்தது. மலம் கெட்டியாகி உரமாகியிருந்தது.கருப்பாக நிறத்தில் எருவாகி மக்கியிருந்தது.தோண்ட ஆரம்பித்தால் குடலைப்புரட்டிக்கொண்டு வாந்தி வரும்.

மாரியும் அவனுடன் வேலை செய்பவர்களும் முதலில் குவாட்டரை ‘அம்மா’ வாட்டர் பாட்டிலில் சரிபாதியாக கலந்து மடக்கு மடக்காக குடித்து புரோட்டாவை சாப்பிடுவார்கள். வேலை செய்யும் போது தண்ணீர் குடிப்பதில்லை. ‘அம்மா’ வாட்டர் பாட்டிலில் இருக்கும் சரக்கை குடித்துக் கொள்வார்கள். விக்ஸ்சும் அமிர்தாஜ்ஜனும் மூக்கில் தடவிக்கொள்வார்கள்.மாரியைப் போல கெத்தியும் விக்ஸ் டப்பா ஒன்றை ஜோப்பில் வைத்திருந்தான். வேலை தொடங்கியதும் விக்ஸை மூக்கில் தடவிக்கொள்ளவேண்டுமென நினைத்தான்.

பரமன் சைக்கிளை எடுத்துக்கொண்டு “இருடா கெத்து. சாமான்களை வாங்கிட்டு வந்துருறேன்” என்று உந்தித்தள்ளிக் கொண்டுச் சென்றான்.

அவனிடம், “புரோட்டாவை வாங்கிட்டுவாடாடோய். இன்னும் சாப்பிடலை” என்றுகெத்தி சத்தம் கொடுத்தான். பரமன் கேட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. திறந்து கிடந்த செப்டிங்டேங்கின் மேலாக டீயூப் லைட்டைக் கட்டிவிட்டிருந்தனர். கரப்பான் பூச்சிகளும் பல்லிகளும் மேலேறி ஊர்ந்து கொண்டிருந்தன. பெரியகாமு கொத்தனார் நன்றாகக் குடித்துவிட்டு வீட்டுக்காரருடன் பேசிக்கொண்டிருந்ததை கெத்தி கேட்டுக் கொண்டிருந்தான்.

பரமன் வருவதற்கு பத்துமணிக்கும் மேலாகிவிட்டது. அவனுடன் சூர்யாதாசு, மருதநாயகம்பழனி, பாபாமுத்து, ஜில்லாமைக்கு என்று நான்கு பேர் வந்திருந்தனர். அவர்கள் தள்ளுவண்டியையும் கூடவே இரண்டு டிரம்களையும் கொண்டு வந்திருந்தனர். பரமன் யார் யாருக்கு என்னென்ன வேலை என்பதை பிரித்துக் கொடுத்தான்.

கெத்தி பரமனுடன் வேலைக்கு வரக்காரணம் கொடைக்கானலுக்குப் போவதற்கு பணம் வேண்டுமென்பதற்காகத்தான். ஐநூறு ரூபாய் கிடைத்துவிட்டால் போதும் ஊருக்குப் புறப்பட்டுவிடலாமென முடிவு செய்திருந்தான். அவனுக்கு இந்த வேலை எதுவும் பிடிக்கவில்லை. கொடைக்கானலுக்குப் போய் அனார்கலியைப் பார்த்து, எப்படியாவது தனது பணத்தை வாங்கிக்கொண்டு வந்துவிட்டால் போதும் என்று நினைத்தான். கெத்தி அவளுக்கு கந்து வட்டி செல்வராஜிடம் பத்தாயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கிக்கொடுத்திருந்தான். ஏதோ அவசரம் என்று மூன்று மாதத்திற்கு முன்பாக அவள் அவனிடம் கண்ணீருடன் கேட்டாள். செல்வராஜிடம் ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப் போட்டு வாங்கிக்கொடுத்தான். அவளிடம் வாங்குவதைத் தவிர வேறுவழியில்லை. தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறப் பெண்ணிடம் கொடுத்த பணத்தைத் திரும்பவும் வாங்கலாமா என்று முதலில் யோசித்தான். ஆனால் அவளே தான் திரும்பவும் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிய பிறகு அவன் வருத்தமடையவில்லை.

அனார்கலியை திருமணம் செய்து கொள்ளவேண்டுமென கெத்தி ஆசைப்பட்டான்.அவளும் ஒருமுறை அவனிடம் அப்படியாகத்தான் சொன்னாள். அவளைத் திருமணம் செய்து கொண்டால் தன்னை பரமனும் மாரியும் கிண்டல் செய்வார்களா?சிலுவையுடன் அனார்கலி சுற்றியதைப் பற்றி திரும்பத்திரும்பப் பேசி தன்னை வெறுப்பேற்றுவார்களா என்றொல்லாம் அவன் யோசித்தான். ஆனால் அவனுக்கு ஒருயோசனை தோன்றியது. தனது திருமணத்திற்கு முதல்நாள் இரவு அவர்களுக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும், எல்லாம் சரியாகிவிடுமென்று நினைத்தான்.

கெத்தி நினைத்தது போல பரமன் சாப்பிடுவதற்கு எதுவும் வாங்கிக்கொண்டு வரவில்லை. ஆனால் அவன் குடித்திருப்பதை உணரமுடிந்தது.ஜில்லாமைக்கு வாளியில் கயிற்றைக்கட்டி முதல் தொட்டியில் கீழிறக்கினான்.மெதுவாகத் தொட்டியிலிருந்தத் தண்ணீரை அள்ளி மேலேற்றினான். வாளி வாளியாகத் தண்ணீர் டஸ்ட்டோடு அள்ளப்பட்டது. முதல் உறையைக் காலி செய்ய நடுஇரவுக்கும் மேலாகிவிட்டது. மிஷின் பைப் இருந்தால் இந்நேரம் ஒரே உறிஞ்சி உறிஞ்சி டிரம்மை நிரப்பிவிடும்.வேலை முடிந்துவிட்டது என்று துட்டை வாங்கிக்கொண்டு தெரு குழாயில் குளித்துவிட்டு சாக்கை விரித்துப்படுத்து உறங்கலாம். ஆனால் இதுவேறு மாதிரி. வாளி வாளியாக அள்ள வேண்டும். தோள்பட்டை இரண்டும் கழன்று தனியாக வந்துவிடும்.கெத்தி வாளியை வாங்கித் தள்ளுவண்டியிலிருந்து டிரம்மில் ஊற்றிவிட்டு வந்தான். வீட்டுக்காரர் ‘சிந்தாமல் போ’. ‘சிந்தாமல் போ’ என்று அதட்டிக்கொண்டேயிருந்தார். ஜில்லா மைக்கு வேண்டுமென்றே தளும்பத் தளும்ப வாளியில் அள்ளி மேலேற்றினான்.

தள்ளுவண்டியிலிருந்த இரண்டு டிரம்களும் நிறைந்ததும், மூடிவிட்டுத் தள்ள ஆரம்பித்தார்கள். ஊருக்கு மேற்கே இருக்கிற ஓடையில் கொட்டிவிட்டு வரவேண்டும். தள்ளுவண்டியை ஆடாமல் அசையாமல் தள்ளவேண்டும்.ரோட்டில் சிந்திக்கொண்டுப் போனால் மறுநாள் காலையில் முனிசிபாலிட்டிக்காரனுக்குத் தெரிந்துவிடும். பிரைவேட்டாகச் சுத்தம் செய்திருக்கிறார்கள் என்று வீட்டுக்காரனைத் திட்டுவார்கள். ரோடு காலையில் அசிங்கமாக இருக்கும். மெதுவாக உருட்டினார்கள். அப்படியிருந்தும் வண்டியிலிருந்த டிரம் ஆடியது. உள்ளே இருந்த டஸ்டும் தண்ணீரும் அலம்பத்தொடங்கியது. ஓடைக்குக் கொண்டுப்போய் மெதுவாக இறக்கிக் கொட்டினார்கள். யாரும் பார்க்கவில்லை. இரண்டு மூன்று தடவையும் இங்கேயே கொட்டிவிட்டால் வேலை சீக்கிரத்தில் முடிந்துவிடுமென்று பரமன் அவசரப்படுத்தினான்.

டஸ்ட் நீரைக் கொட்டிவிட்டு வரும் போது மருதநாயகம் பழனி நடுவீட்டில் நின்று பீடியைப் பற்ற வைத்து ஊதிக்கொண்டிருந்தான். அவனுக்குப் போதைத் தலைக்கு ஏறியிருந்தது. என்ன செய்யப்போகிறான் என்று தெரியவில்லை. தொட்டியில் இறக்கிவிட்டால் அவனைத் தூக்கிவிடுவதற்கு இரண்டு ஆட்கள் வேண்டும். அவன் அலம்பிக் கொண்டு நின்றிருந்தான். பீடி புகையை வீடு முழுக்க ஊதித்தள்ளினான். பெரியகாமு கொத்தனார் இருக்கிற வரையில் பயல்கள் ஒழுங்காக இருந்தார்கள். அவர் உறங்குவதற்கு வீட்டிற்குச் சென்றதும் ஆள் ஆளுக்கு ஆடத் தொடங்கிவிட்டார்கள். இரண்டாவது தொட்டியில் தான் இறங்கவேண்டுமென்று மருதநாயகம் பழனி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான். வேட்டியை கழற்றி டவுசரோடு நின்று கொண்டான். நிச்சயமாக அவனால் தொட்டிக்குள் இறங்கமுடியாது.பரமன் அவனைத் தனியாக அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

“டேய் மாப்பிள்ளை உன்னாலே வேலை செய்யமுடியாது. சரக்கை வாடைக்கு அடிறான்னு சொன்னா போதைக்கு அடிக்கிறே. நீ முதலில் வீட்டுக்குக் கிளம்பு” என்று பரமன் அவனை விரட்டினான். பழனி கேட்டுக்கொள்ளவில்லை. வாளியைத்தூக்கி கையில் வைத்துக் கொண்டான். பரமனுக்குக் கோபம் தலைக்கு ஏறியிருந்தது. அவனை வெளியே அழைத்துக் கொண்டுப் போய் ஐநூறு ரூபாய் கொடுத்தான். ரூபாயைப் பார்த்ததும் அவனுக்கு நிதானம் வந்தது. பணத்தை தனது ஜோப்பில் வைத்துக்கொண்டுச் சைக்கிளை உருட்டியபடி நடக்க ஆரம்பித்தான். அவன் சென்ற பிறகு தான் பரமனுக்கு நிம்மதியாக இருந்தது. ஜில்லாமைக்கு இனி தன்னால் தொட்டியில் நிற்கமுடியாது என்று மேலேறிக்கொண்டான். அவன் மேலேறியதும் பாபாமுத்து தொட்டியில் இறங்கினான். அவன் வாளியில் அள்ளி அள்ளித்தந்தான். கெத்தி வாளியை வாங்கிக்கொண்டு வெளியே நின்றிருந்த டிரமில் ஊற்றினான்.விடிவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பாகத்தான் இரண்டாவது தொட்டியிலிருந்து நீரும் டஸ்ட்டும் வெளியேற்றப்பட்டு ஓடைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

அவர்கள் நால்வரும் ஓடைக்குப் பக்கத்தில் செல்லும்வரை இருட்டாகத் தான் தெரிந்தது.பன்றிகளின் உறுமல் கூட கேட்கவில்லை.நாய் ஒன்றிரண்டு தலை நீட்டிப் பார்த்துவிட்டு படுத்துக்கொண்டன. ஆட்கள் யாரோ இருக்கிறார்கள் என்று பரமனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் வண்டியை நிறுத்தச்சொல்லி ஜாடைக் காட்டினான். அவனது ஜாடையை அவர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஜில்லாமைக்கும் சூர்யதாசும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு வண்டியைத் தள்ளினார்கள்.கெத்தி டிரம் ஆடாமல் இருக்கவேண்டுமென்பதற்காகத் தள்ளுவண்டியின் மேலேறி நின்றிருந்தான்.பரமன் வழக்கம் போல வண்டியின் முன்பாக சென்றுக் கொண்டிருந்தான்.வண்டி ஓடையை நெருங்கியதும் ஆட்கள் டார்ச் லைட்டுகளுடன் வெளியே வந்தார்கள். இவ்வளவு நேரம் எங்கு ஒளிந்திருந்தார்கள் என்று அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

நால்வருக்கும் நன்றாக பிடனியிலும் முதுகிலும் அடிவிழுந்தது. அவர்கள் கையில் கட்டை இருந்தது. நால்வரையும் வளைத்துப் பிடித்துக்கொண்டார்கள். பரமன் ஒருவனது நெஞ்சைப்பிடித்து தள்ளிவிட்டதும் அவன் டிரம்மின் மேல் விழுந்தான். சுதாரித்து எழுந்தவன் தனது செருப்பைக் கழற்றி பரமனின் மேல் விட்டெறிந்தான். அதோடு அசிங்கமாகவும் திட்டினான். பரமன் பொறுத்துக்கொண்டான். எதுவும் பேசவில்லை. ஜில்லாமைக்கும், சூர்யாதாசும் வண்டியை திருப்பித் தள்ளத்தொடங்கினார்கள். கெத்தி தனது செருப்பைத் தேடினான். இருட்டில் அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. கெத்தி ஓடிப்போய் வண்டியின் மேலேறிக்கொண்டான். பரமன் தனது வேட்டியைத் தூக்கிக்கட்டிக் கொண்டு வண்டிக்குப் பின்பாக நடக்க ஆரம்பித்தான்.

“அடியேய் அடுத்தவாட்டி இந்த பக்கம் பார்த்தேன் எல்லாத்துணிகளை அவித்துவிட்டு டிரம்மை உங்க மேலே கவித்துவிட்டுருவோம்” என்று ஒருவன் சத்தமாக சொன்னான். அவர்கள் அங்கேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தவர்களுக்கு மூச்சு வாங்கியது. பரமன் ஜில்லாவை ஒதுங்கிக்கொள்ளச் சொல்லி வண்டியைத் தள்ளினான். அவனுக்கு இருந்த ஆத்திரத்தை வண்டியைத் தள்ளுவதில் காட்டினான். ரோடு முழுக்க டஸ்ட் தண்ணிச் சிந்தியதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. வண்டியைப் பெரியாஸ்பத்திரி பக்கமாக ஓட்டிக் கொண்டுச் சென்றார்கள். தெரு முழுக்க விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இரண்டு போலீஸ்காரர்கள் நின்றிருந்தார்கள். ஒருவர் தனது செல்ஃபோனில் எம்.ஜி.ஆர் பாட்டுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.பாட்டு வரிகள் ரோட்டு முழுக்க எதிரொலித்தது. நால்வரும் அவர்களைக் கடந்து சென்றார்கள்.

“டேய் என்னாது டிரம்மிலே” என்று ஒரு போலீஸ்காரர் கேட்டார்.

“ஐயா செப்டிங்டேங்க் தண்ணி” என்று பரமன் சொன்னதும், போலீஸ்காரர், “போயிருங்க அந்தப்பக்கம். பெரியரேன்ஸ்ஸை தாண்டி சாலை காளியம்மன் கோவிலுக்குப் பக்கத்திலே போய் கொட்டிட்டு வரணும். இடையிலே எங்காவது கொட்டுறதைப் பார்த்தேன். பிட்டானியை கழற்றிவிருவேன். ஓடு ஓடு ஓட்டு..” என்று விரட்டினார்.

பரமனும் ஜில்லாமைக்கும் பயந்துப் போய் வேட்டியைக் கீழே இறக்கிவிட்டிருந்தனர். வண்டிக்கு மேல் நின்றிருந்த கெத்தி பயத்தில் அப்படியே உட்கார்ந்திருந்தான். வண்டி நகரத்தொடங்கியதும் எழுந்து நின்று கொண்டான். போலீஸ்காரர் ”யார்றா மேலே?” என்று சத்தம் போட்டார். “கூட வந்தவன் தான் ஐயா” என்று பரமன் சொன்னதும்
சைகையில் போ என்று ஜாடை காட்டினார். ரோட்டில் காற்று போல எம்.ஜி.ஆர் பாடலின் சத்தம் நகர்ந்து கொண்டிருந்தது.

போலீஸ்காரர்களை விட்டு சற்றுத்தொலைவுக்கு வந்ததும் சூர்யதாசு “ஊரிலே இருக்கிறவன் எவனுக்கும் ஒருமாதத்துக்கு வெளிக்கு வரக்கூடாது மாப்பிள்ளை. அப்படியொரு மருந்தை கவுர்மெண்ட் கண்டுபிடிக்கனும்” என்று சொன்னான்.

“அடியேய் உங்க சூர்யாகிட்டே சொல்லி சீனாவிலிருந்து மருந்தை கொண்டுவரச் சொல்ல வேண்டியது தானே.!எங்க கத்தி எப்படி ஒருநாள் தண்ணி வராமல் நிறுத்துனாரு” என்று ஜில்லாமைக்குச் சவடால் பேசினான். பரமன் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கோபத்துடன் அசிங்கமாகத் திட்டினான். அவர்கள் காளியம்மன் கோவிலைத்தாண்டி பெரிய சாக்கடையில் கொட்டிவிட்டு வரும் போது மூன்று மணிக்கு மேலாகிவிட்டது.

வீட்டுக்காரர் அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் வைத்திருப்பார் போல. சொல்லி வைத்தது போல எழுந்து வந்து தொட்டியின் முன் நின்றார். வீட்டுக்காரர், “இன்னுமா கிளின் செய்யலை. விடியப்போகுது. பக்கத்து வீட்டுக்காரங்க திட்டப்போறாங்க”என்று விரட்டினார். பரமனுக்குக் கோபம் வந்தது. “ஸார், நீங்க கொஞ்சம் நேரம் வெளியே இருங்க. வேலையை முடிச்சதும் உள்ளே வாங்க” என்று சொன்னான். வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றனர். சிறிது சிறிதாக விடியத்தொடங்கியிருந்தது.

“ஸார் டீ ஏதாவது வாங்கிக்கொடுங்க”

“முதலில் வேலையைப் பாருங்கப்பா” வீட்டுக்காரர் கோபத்துடன் சொன்னார்.

மூன்றாவது தொட்டியில் டஸ்ட் அடைந்திருந்தது. மலம் கெட்டிதட்டிப்போய் உரமாகியிருந்தது. கருப்பு நிறத்தில் பாறை போலிருந்தது. பரமன் இறங்கி நின்றதும் அமுங்கியது. ஆனால் நிற்கமுடிந்தது.பாபா முத்து குரல் கொடுத்தான்.“ஏய் நிற்காதே. டக்குன்னு உள்ளே இழுத்துரும்” என்று பயமுறுத்தினான். தொட்டிக்கு மேலே நால்வரும் கூடி பேசினார்கள். கெட்டியாக டஸ்ட்டை அள்ளுவதா, இல்லை தண்ணீர் விட்டு கரைத்து நீராக்கி அள்ளுவதா என்று பரமன் அவர்களிடம் ஆலோசனைக் கேட்டான்.நீராக்கினால் அள்ளுவது கஷ்டமாகிவிடுமென்று பாபாவும் சூர்யாவும் ஆலோசனை தந்தார்கள். பிறகு கெத்தை இறக்கினார்கள். அவன் பரமனின் முகத்தைப் பார்த்தான். “சும்மா இறங்குடா. இத்தனை பேர் இருக்கிறாங்க. ஏன் பயப்படுறே” என்று சொன்னதும் அவன் இறங்கினான்.

“மாரிக்கிட்டே மட்டும் சுறுசுறுப்பாக வேலை செய்வான். நம்ம கிட்டே வந்தாதான் அய்யாவுக்கு குண்டி வலிக்கும். சூத்து எரியும்” என்று பரமன் அவனைத் திட்டினான். கெத்து அவனைத் திட்டியதை கேட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. பத்து வாளிக்கு மேலாக கையில் அள்ளிப்போட்டான். கெத்திக்கு நுனிவிரலும் நகமும் வலியெடுக்க ஆரம்பித்த போது முற்றிலும் விடிந்திருந்தது.

பக்கத்து வீட்டுக்காரர்கள் எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றார்கள். பரமனைத் தேடி வீட்டுக்காரர் வந்தார். பரமனைத்திட்டினார். பரமன் தனது கோபத்தை யாரிடமாவது காட்டவேண்டுமென்று பதிலுக்குத் திட்டினான். பாபாமுத்துவைத் திட்டினால் பதிலுக்கு அவனும் பதிலுக்குத் திட்டுவான் என்று கெத்துவைத் திட்டினான். கெத்து யாரையும் திருப்பித் திட்டமாட்டான். அவனுக்கு திரும்ப திட்டுவதற்கு தெரியாது. சண்டை கூட போடமாட்டான். மனசுக்குள் ஏதாவது முனங்கிக்கொண்டு வேலை செய்வான். கெத்தியை திட்டினான். கெத்தி அள்ளி வாளியில் வைத்தான். அவன் டஸ்ட்டுகளை உருண்டை உருட்டி வாளிக்குள் வைப்பதைப் பார்த்துவிட்டு ஜில்லாவும் சூர்யாவும் சிரித்துக்கொண்டார்கள். பரமன், மூன்று உறைகளும் சுத்தமானதும் வீட்டுக்காரரை அழைத்துக் காண்பித்தான். வீட்டுக்காரருக்குத் திருப்தியாக இல்லை. தொட்டிகளில் அடித்தூரில் அப்பியிருந்ததை எடுக்கச் சொன்னார்.

“ஸார் அது, குதிரை விட்டை. அதை எடுக்கமுடியாது. தொட்டிக்கட்டிட்டு யூஸ் பண்றதுக்கு முன்னாடி போட்டது. தரையோட தரையாக ஒட்டிக்கிச்சு.சொரன்டித்தான் எடுக்கனும். அரைநாள் பொழுது போயிடும்” என்று சொன்னான்.

வீட்டுக்காரர் கொத்தனார் பெரிகாமுவுக்குப் ஃபோன் செய்து வரச்சொன்னார். “கொத்தனார் வரட்டும். அதுவரைக்கு இருங்க” என்று கோபத்துடன் சொன்னார். அவர்கள் காத்திருந்தனர். கொத்தனார் ஏழுமணிக்கு மேலாகத்தான் வீட்டை விட்டு வெளியே வருவார் என்று பரமனுக்குத் தெரியும். அதுவரை காத்திருக்கவேண்டுமென்று தாங்கள் கொண்டு வந்திருந்த தள்ளுவண்டியின் மேல் அமர்ந்து கொண்டான்.

“ஸார் டீ ஏதாவது வாங்கிக்கொடுங்க”

“கொத்தனார் வரட்டும். அவருக்கும் சேர்த்து டீ வாங்கித்தர்றேன்” என்று வீட்டுக்காரர் சொன்னார். தெருவுக்குள் பால்கார வண்டியும் அதைத்தொடர்ந்து பேப்பர் போடுகிறவனும் வந்து சென்றார்கள்.

தெருவில் சிறிது சிறிதாக விஷம் தெரிய வந்திருந்தது. செப்டிங்டேங்க் சுத்தம் செய்வதற்கு ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று வாசல் தெளிப்புக்கு வந்த பெண்கள் பேசிக்கொண்டார்கள். தெரு முக்கில் இருந்த வீட்டுக்காரர் “டேங்கை சுத்தம் செய்யுறதுக்கு எவ்வளவு தம்பி” என்று கேட்டார். பரமன் அவரிடம் சொன்னான். “அவ்வளவு ரூபாய் ஆகுமா?” என்று அவர் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார். அவர் சொல்லியதைக் கேட்டு சூர்யாதாசும், பாபாமுத்துவும் ஏதோ கிண்டலாக பேசி சிரித்துக் கொண்டார்கள்.

கொத்தனார் வந்த போது ஏழுமணியாகியிருந்தது.அவரது கண்கள் சிவந்திருந்தன.வந்ததும் நேராகத் தொட்டியைத் தான் பார்த்தார். அவருக்குத் திருப்தியாக இருந்தது.பரமனைப் பார்த்து, “சிமிண்ட் செலாப்புக்கு எல்லாம் தண்ணீயை விட்டு அலசு” என்று சொன்னார். பரமனுக்கு அந்தளவில் நிம்மதி.திரும்பவும் தொட்டிக்குள் இறங்கச்
சொல்லிவிடுவார் என்று பயந்துக் கொண்டிருந்தான். வாளி வாளியாக தண்ணீரைப் பிடித்து சிமெண்ட் பலகை மீது ஊற்றினான். மூன்று சிமெண்ட் பலகையும் சுத்தமானது.

“நல்ல வேலை செய்துருக்காங்க அண்ணே.ரூபாயை கொடுத்து விடுங்க. டீ ஏதாச்சு வாங்கிக் கொடுத்தீங்களா?” என்று கொத்தனார் வீட்டுக்காரரைப் பார்த்துக் கேட்டார்.வீட்டுக்காரர் பணத்தை கொடுத்துவிட்டு “கடையிலே டீ சாப்பிட்டுங்க” என்று சொன்னார். பரமன் பணத்தை வாங்கிக்கொண்டு பாபாவும் சூர்யாதாசுக்கு சம்பளத்தைத் தந்து அனுப்பி வைத்தான். அவர்கள் தாங்கள் வந்த சைக்கிளில் ஏறிச் சென்றார்கள். பரமனும் கெத்துவும் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டுச் சென்றார்கள். அவர்களுக்கு டீ குடிக்கவேண்டுமெனத் தோன்றியது. அதற்கு முன்பாக கை கால் முகத்தைக் கழுவிச் சுத்தம் செய்யவேண்டும். வண்டியை வாடகைக்கு எடுத்த கடையில் விட வேண்டும்.டிரம்மை எடுத்தவனிடம் கழுவிக் கொடுக்கவேண்டும்.இல்லையென்றால் யாரும் டீ கொடுக்கமாட்டார்கள் என்று பரமனுக்குத் தெரியும்.

[2]

பஸ்ஸ்டாண்டில் ஒரு டீக்கடைத் திறந்திருந்தது. கெத்தி தனது தோள்பையைத் தூக்கிக் கொண்டுக் கடைக்குச் சென்றான். டீ வாங்கிக் குடித்தான். டீ தம்ளரில் கையில் பிடிப்பதற்கு அவனுக்கு வெட்கமாக இருந்தது. பயந்துக் கொண்டுதான் பிடித்திருந்தான். வெளியூர்களில் மட்டுந்தான் தம்ளர்களில் அவன் டீ குடித்திருக்கிறான். உள்ளுரில் தெரிந்த கடையில் கப்பில் டீ தருகிறார்கள். இதற்காகவே தூக்குவாளியை எடுத்துக்கொண்டு பார்சல் டீ வாங்கிக்கொண்டு வந்து குடித்திருக்கிறான். வீட்டில் அவனது அம்மா சரோஜாவும் இவனைப் போல மணிக்கொருத் தடவை டீ குடிக்கப் பழகியவள்தான். அவள் முனிசிபாலிட்டியில் வேலை செய்கிறாள். அவளை இப்போது தெரு கூட்டுவதற்கு மேஸ்திரி அழைப்பதில்லை. பதிலாக ஊருக்கு வெளியே இருக்கும் குப்பை மேட்டிற்கு அழைத்துக்கொண்டு போய் குப்பையை தீ வைத்து கொளுத்திப் போட சொல்கிறார். குப்பையிலிருக்கும் பிளாஸ்டிக் பொருட்களைப் பொறுக்கிக் கொண்டாலும் மேஸ்திரி வந்து வாங்கிக்கொள்கிறார்.

கெத்து டீ குடித்து விட்டு அங்கே நின்றிருந்தான். டீக்கடைக்காரர் “எங்கே போகனும்?” என்று கேட்டார். அவன் கொடைக்கானலுக்குப் போகணும் என்று சொன்னான். அவர் வண்டி வர்ற நேரந்தான் என்று சொன்னார்.

கொடைக்கானலிலிருக்கும் சாமிக்கன்னுவின் மகளின் விலாசத்தை சூர்யதாசு சொல்லியிருந்தான். அவனது வீட்டுப்பக்கத்தில் தான் அனார்கலி இருக்கிறாள்.மாரியிடமும் சிலுவையிடமும் சொல்ல வேண்டுமென்று அவன் கேட்டுக்கொண்டான்.கொடைக்கானலுக்குப் போய் அனார்கலியைப் பார்த்து பேசிவிட்டு வரப்போவதாக அவனிடம் சொன்னான். சூர்யதாசுக் குளிராக இருக்கும் ஒரு போர்வை எடுத்துக்கொண்டு போ என்று சொன்னான். கெத்து ஒரு போர்வையும் இரண்டு சட்டையும் ஒரு பேண்ட்டும் எடுத்துக்கொண்டுக் கிளம்பினான். சூர்யதாசு நல்லவன்தான். அவன் தான் சிலுவைக்கும் கெத்துவுக்கும் நடந்த சண்டையை விலக்கிவிட்டது.

சிலுவை இப்போது பாளையத்திற்கு வேலைக்குப் போகிறான். அவனுக்கு யார் வேலை வாங்கிக்கொடுத்தது என்று தெரியவில்லை. பஸ் ஸ்டாண்டிற்குள் இருக்கும் கக்கூஸில் அவனுக்கு வேலை கிடைத்ததும் அவனது நண்பர்களுக்குச் சரக்கு வாங்கிக்கொடுத்தான். மாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்திலிருக்கும் பொட்டலில் சரக்கு வாங்கிக்கொண்டு வந்து உட்கார்ந்துக் கொண்டார்கள். செல்ஃபோனிலிருக்கும் டார்ச்லைட்டை போட்டுச் சரக்கடித்தார்கள். பிளாஸ்டிக் கப்பில் சிலுவைதான் அளந்து அளந்து ஊற்றிக்கொடுத்தான். ஒரு கேண் நிறைய தண்ணீர்ப் பிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள். கப்பக்கிழங்கும் சுண்டலும் வாங்கியிருந்தார்கள்.

கெத்திற்கு சரக்கை ஊற்றிக் கொடுக்கும் போது “டேய் கெத்து உனக்கு எச்சா ஊத்தியிருக்கேன். சாப்புடு” என்று சொல்லி சிரித்தான் சிலுவை.

“அவனுக்கு எதுக்குடா எச்சா ஊத்திக்கொடுக்கிற” என்று பரமன் கேட்டான்.

“கெத்துவை அனார்கலி காதலிக்கிறா. அதுக்குத்தான்” என்று சிலுவை எகத்தாளமாக பதில் சொன்னான்.

“சிலுவை..!உன்னையை அவள் கழட்டிவிட்டுட்டாளா” என்று பரமன் கேட்டான்.

“அவள் ஒன்னும் கழட்டிவிடலை. நாந்தான் போதும் போதுங்கிற அளவுக்கு முக்கி மூச்சுதெனறிட்டேன். போதுமின்னு நாந்தான் கழற்றிவிட்டேன்” என்று சிலுவை வீரமாக பேசினான். பேசிவிட்டு மடக்கு மடக்கு என்று முழு டம்ளர் சரக்கையும் ஒரு மூச்சாக குடித்து முடித்தான்.

கெத்திற்கு இதைக் கேட்டது அவமானமாக இருந்தது.தலைக் கவிழ்ந்து கொண்டான்.அனார்கலியைத் தான் காதலிக்கிறோம் என்பதை மாரியிடம் ஏன் சொன்னோம் என்று இப்போது வருத்தப்பட்டுக் கொண்டான். அந்த வருத்தத்தில் அவன் சரக்கை ஒருமடக்கில் குடித்து முடித்தான். நொசநொசத்துப்போயிருந்த கப்பையை எடுத்து வாயில் அதக்கிக் கொண்டான். கை நிறைய சுண்டலை அள்ளி வைத்துக்கொண்டான். அவனுக்கு இப்போது தலை கனக்கத் தொடங்கியது.ஒரு டம்ளர் சரக்கின் போதை உடலில் ஊறத் தொடங்கியது.

“அனார்கலி கொடைக்கானலுக்குப் போகப்போறா மாப்பிள்ளே. சாமிக்கன்னு மகளுக்கு இரண்டாவது பிரசவத்திற்கு தொனைக்கு அவளை கூப்பிடுறாங்களாம்” என்று மாரி தகவலைச் சொன்னான்.

“உனக்கு யாருடா சொன்னா”

“சாமிக்கன்னு வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற சூர்யதாசுதான். அவனுக்குத்தான் தகவல் உடனே கிடைச்சுடும்”

“தெருவுக்குள்ளே இருக்கிற பொம்பளைக்கு என்னென்ன பிரச்சனை. எவளுக்கு எப்போ வருது. நிக்குது. எவன் கூட போறா வர்றான்னு பார்க்கிறேதே அவனோட பிழைப்பாப்போச்சுடா மாரி”

அவர்கள் தங்களது தெருப் பெண்களைப் பற்றிப் பேசிக்கொண்டு சரக்கைக் குடித்தார்கள்.வாங்கிக்கொண்டு வந்திருந்தப் பண்டங்களும் சரக்குகளும் தீர்ந்து போயின. “டேய் மாப்பிள்ளை எனக்கு வேலை கிடைச்சுருச்சு. யாரும் எதுக்கும் கவலைப்படாதீங்க. எவ்வளவு வேணாமின்னாலும் கந்து வட்டிக்கு வாங்குங்க…நான் கடனை கட்டுறேன்.டெய்லி புரோட்டாவா தின்னுங்க.நான் பணம் தர்றேன்.நம்ம சாப்பிட்டது போகத்தான் குத்தகைக்காரனுக்கு கக்கூஸத்துட்டு” என்று சிலுவை சொன்னான்.அவனுக்கு உண்மையிலே போதை ஏறியிருக்கவில்லை. வேண்டுமென்றேதான் அலம்பினான்.

“கக்கூஸ்த்துட்டு, கக்கூஸ்த்துட்டு” என்று அவர்கள் சொல்லி சிரித்தார்கள்.

கெத்திற்குச் சிரிப்பு வரவில்லை. ஆனால் ஆங்காரமிருந்தது. எப்படியாவது அனார்கலியை கல்யாணம் செய்துக் கொண்டு இவர்களுக்கு முன்பாக வாழ்ந்துக் காட்டவேண்டுமென்று நினைத்தான். எழுந்துப் போய்ச் சிறுநீர் கழித்து விட்டு வந்தான். வரும்போது வேண்டுமென்றே அசிங்கம் அசிங்கமாகக் கெட்டவார்த்தைகளில் யாரையோத் திட்டிக் கொண்டு வருவது போல வந்தான். சிலுவைக்குத் தெரிந்துவிட்டது. கெத்து தன்னைத் தான் திட்டுகிறான் என்று நினைத்தான். கெத்துவிற்கு வேண்டுமென்றே அடுத்த ரவுண்டில் சிறிது குறைவாகச் சரக்கை ஊற்றித் தந்தான்.கெத்து அதைத் தெரிந்து அவனுடன் சண்டை போட்டான். “கொடுத்தா எல்லாருக்கும் ஒரேமாதிரி கொடு. அதென்ன கூட குறை” என்று வம்புக்கு இழுத்தான்.மாரிக்கும் பரமனுக்கும் தெரிந்துவிட்டது.கெத்து சண்டை போடுகிற ஆள் இல்லை. கண்டும் காணாமல் விட்டுவிடுபவன்.சிலுவைக் கூட சண்டை போடப்போகிறான் என்று அவர்கள் நினைத்தார்கள்.அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் போதே சிலுவையை டமார் என்று முகத்தில் அடித்தான் கெத்து.அதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. அதைத் தொடர்ந்து அவர்களுக்குள் சண்டை நடந்தது. சூர்யதாசு இடையே புகுந்து விலக்கிவிட்டான்.

“சரக்குக்குப் போய் சண்டை போடக்கூடாதுடா மாப்பிள்ளை. குடிச்சா ஒன்னுக்கிலே தண்ணியா வரப்போகுது. அதுக்காடா சண்டை” என்று சிலுவையை அழைத்துக்கொண்டு நடந்தான். அதிலிருந்து சிலுவையும், கெத்துவும் பேசிக்கொள்வதில்லை.

கெத்து அமைதியாக அமர்ந்திருந்தான். சூர்யதாசு சொல்லியது இப்போது அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. டீக்கடைக்காரர் சூடான பாலை ஆற்றிவிடுவதும் அடுப்பைத் தூண்டிவிடுவதுமாக இருந்தார். ஒரு சிகரெட் குடிக்கலாமா என்று யோசித்தான். ஜோப்பில் ஒரு பீடி கட்டு மட்டும்தான் இருந்தது.கொடைக்கானலில் பீடிக் கிடைத்தாலும் கிடைக்கும் என்று சூர்யதாசு சொல்லியிருந்தான். தினமும் காலையில் கக்கூஸ் போகும் போது ஒரு பீடியை அவன் புகைக்க வேண்டும். கொடைக்கானலில் பத்து நாட்கள் தங்கியிருந்து விட்டு வரவேண்டுமென்றுக் கெத்து நினைத்தான். ஒவ்வொரு நாளும் அனார்கலியுடன் ஒவ்வொரு இடத்திற்குப் போய் சுற்றிப் பார்க்கவேண்டுமென்றுத் திட்டமிட்டிருந்தான்.

பஸ்ஸ்டாண்டிற்கு அருகில் ஏதாவதுப் பெட்டிக்கடை இருக்கிறதா என்று தேடிப் பார்த்தான். எந்த கடையும் திறக்கவில்லை.திரும்பவும் டீக்கடைக்கு முன்பாக வந்து நின்றுக் கொண்டான். நான்கு மணிக்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தது. சிறுநீர் கழிப்பதற்கென இருட்டான இடத்திற்குச் சென்றான். நாய்கள் இரண்டு அவனைக் கடந்து சென்றன. பேருந்து நிலையத்திற்குள் இரண்டு போலீஸ்காரர்கள் மோட்டார் வாகனத்தில் நுழைந்து சுற்றுவது தெரிந்தது. வாகனத்தின் சப்தம் பலமாகக் கேட்டது.கெத்தி சிறுநீர் கழித்துவிட்டு டீக்கடைப் பக்கமாக வந்தான்.

பேருந்து நிலையத்தின் வாசலில் வெளிச்சம் தெரிந்தது. சக்தி டிரான்ஸ்போர்ட் பேருந்து வருவது தெரிந்தது. பேருந்து வந்து நின்றதும், எங்கிருந்து ஜனங்கள் வந்துச் சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. கெத்தியினால் பேருந்திற்குள் நுழைய முடியவில்லை. கூட்டம் அவனைப் பின்னுக்குத் தள்ளியது. முண்டித்தள்ளி ஏறிக் கொண்டான்.பேருந்தில் அமர்ந்துக் கொள்வதற்கு அவனுக்கு ஜன்னலோரத்தில் இடம் கிடைத்தது.கதவைத் திறந்துவிட்டான். குளிர்ந்தக் காற்று வீசியது. டிக்கெட் எடுத்துக் கொண்டான்.

பேருந்தில் பக்திப்பாடல் போட்டார்கள். கெத்தி இதற்கு முன்பாக ஒருதடவை கூட கொடைக்கானலுக்குச் சென்றதில்லை. ஆனால் அனார்கலியைத் திருமணம் செய்து கொண்டதும் கொடைக்கானலுக்குச் சென்றுவரவேண்டுமென்று அவன் திட்டமிட்டிருந்தான். இதை அவளிடம் சொல்லியும் இருந்தான். அவள் சிரித்துக் கொண்டாள். அனார்கலியை முதன்முதலாகச் சந்தித்த நாளை அவன் இப்போது நினைக்கத் தொடங்கினான்.

அனார்கலியைச் சர்ச்சில் வைத்துத்தான் பார்த்தான். கிறிஸ்துமஸ் தினத்தன்றுப் பிரியாணித் தருகிறார்கள் என்று அவனும் அவனது நண்பர்களும் சர்ச் பக்கமாகச் சென்றார்கள். அங்கு அவள் முக்காடுப் போட்டுச் சாமிக் கும்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அவளை சிலுவைத் தீவிரமாகக் காதலித்துக் கொண்டிருந்த சமயம். இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்வார்கள் என்று பலரும் பேசிக்கொண்டார்கள். சிலுவை ஒரு பக்கமும், அனார்கலி ஒரு பக்கமும் சாமிக் கும்பிட்டுக்கொண்டிருப்பதை மாரிதான் காட்டினான். பிரியாணி வாங்குவதற்கு நிறையப் பேர் வரிசையில் நின்றிருந்தனர். மூங்கில் தடுப்புப் போட்டிருந்தார்கள். ஒரு பெண் போலீஸ்கான்ஸ்டபிள் நின்றிருந்ததைப் பார்த்துவிட்டு வந்த பரமன் அவர்களை அழைத்துக் கொண்டுப் போனான்.

பெண்ப் போலீஸின் இறுக்கமான உடுப்பினை அவர்கள் பார்த்துக் கொண்டுப் பிரியாணி வாங்குவதற்கு வரிசையில் நின்றனர். பெண் போலீஸ்கான்ஸ்டபிள் தன்னை அவர்கள் பார்க்கிறார்கள் என்பதை கண்டுக்கொள்ளவில்லை.கையிலிருந்த லத்திக் கம்பை மூங்கில் தடுப்பில் தட்டியபடி நடந்துக் கொண்டிருந்தாள். பிரியாணி விநியோகிக்கப்பட்டதும் கூட்டம் கூடியது. யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சற்று நேரத்தில் பெண் போலீஸ்கான்ஸ்டபிள் அவ்விடத்தை விட்டு நகர்ந்துச் சர்ச்சிற்குள் சென்று விட்டார்.

அனார்கலி சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தாள். சிலுவை தனக்குத் தெரிந்தவர்களிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருப்பான் போல. அவள் வெளியே வந்து நின்றதும் அவளுக்குப் பிரியாணி பொட்டலத்தைக் கையில் கொடுத்து வீட்டிற்குப் போகச்சொன்னான். அவளும் பிளாஸ்டிக் பையை வாங்கிக் கொண்டு நடந்தாள். அவளுக்கு வரிசையில் நிற்காமல் பிரியாணிக் கிடைத்தது சந்தோஷமாக இருந்தது போல. சிரித்துக்கொண்டு நடந்ததைக் கெத்துப் பார்த்தான்.

பரமனும் மாரியும் சிலுவையை விசிலடித்து அழைத்தார்கள். சிலுவை அவர்களிடம் சென்றான். மாரி “எங்களுக்கு பிரியாணி பொட்டலம் வாங்கிக்கொடு சிலுவை” என்று கேட்டான். சிலுவை நேராக சர்ச்சிற்குள் சென்றான். திரும்பி வரும் போது அவனதுக் கையில் நான்குப் பிரியாணி பொட்டலம் இருந்தது. அவர்கள் வரிசையை விட்டு வெளியே வந்து நின்றுக் கொண்டார்கள். பிரியாணிப் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு மாரியம்மன் கோவில் பொட்டலுக்குச் சென்றார்கள்.

“கையிலே காசில்லை. இருந்தா சரக்கு வாங்கி குடிக்கலாம்” என்று சூர்யதாசுப் புலம்பினான். அவர்கள் பொட்டலத்தைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினார்கள்.பரமன் “அனார்கலி கடைசியிலே சிலுவைக்குக் கிடைக்கனுமின்னு எழுதியிருக்கு” என்று ஏக்கத்துடன் சொன்னான்.

“ஏன்டா அவள் உங்க பக்கத்து வீடுதானே. பேசாமல் வீட்டிலே சொல்லி கல்யாணம் செய்துக்க வேண்டியது தானே” மாரி அவனைத் திட்டினான்.

கெத்துத் தலைகவிழ்ந்துப் பிரியாணியைத் தின்றபடி இருந்தான். அவனுக்கு அவளைப் பார்க்கவேப் பிடிக்கவில்லை. பிதுங்கிய உதடும் முன் எத்திக்கொண்டிருந்த நெற்றியும் ஒன்றுமில்லாத மாரும் அவனுக்கு அவள் மீது ஈர்ப்பை உருவாக்கவில்லை. பிரியாணியை விட அவள் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போலச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“எனக்கு அக்கா தங்கச்சி முறை வருதுடா. இல்லைன்னா இன்னுமா விட்டுவைச்சிருப்பேன்” என்று சூர்யதாசு சொன்னான். அவனுக்கும் ஆசையாகத்தான் இருந்தது.

தெருவிலிருந்த இளைஞர்கள் அனைவருக்கும் அனார்கலி ஏதோ ஒருவகையில் ஆசையானவளாகத்தான் இருந்தாள். அவள் அவர்களுக்குள் ஆசையை மேலும் மேலும் தூண்டிவிட்டபடி இருந்தாள். கெத்து இரண்டு தெரு தள்ளியிருந்தான். அதனால் தான் என்னவோ அவள் மேல் எந்த நாட்டமும் இல்லாமல் இருந்தான். ஆனால் உண்மையிலேயேப் பிதுங்கித் தெரிந்த உதடு அவனுக்கு அவள் மேல் எரிச்சலை உண்டாக்கியது.

பரமன் பிரியாணியைச் சாப்பிட்டு முடித்திருந்தான். அங்கிருந்த தெருக்குழாயில் கை கழுவிவிட்டு வந்தான். மாரியும் கெத்துவும் சாப்பிட முடியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கோழிக்கறிப் பாதி வெந்தும் வேகாமல் இருப்பதாகப் பரமன் புகார் சொன்னான். அவர்கள் ஆமாம் என்று கறியைத் தூர எறிந்தார்கள். அப்போதுக் குப்பை மேட்டிற்கு அருகில் நின்று அனார்கலி பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்து நாயிக்குப் போட்டதை அவர்கள் மூவரும் பார்த்தார்கள். அவள் வேறு உடையில் இருந்தாள். தூரத்தில் பார்ப்பதற்கு அவள் அழகாக இருந்தாள். அவர்கள் நால்வரும் அவளருகே சென்றார்கள்.

பரமன்“உனக்கு பிரியாணி பிடிக்கலையா அனார்கலி?” என்று அவளிடம் கேட்டாள். அவள் பதிலுக்கு “பிரியாணிக்குப் பதிலா காசைக் கொடுத்திருந்தா ஏதாவது சினிமாவுக்குப் போயிருக்கலாம்” என்று சொன்னாள். அவர்களுக்குச் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டார்கள்.

“சிலுவை இவளுக்கு காசு கொடுத்தே அசந்து போவான்டா” என்று மாரியிடம் பரமன் சொன்னான். கெத்தி அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு வந்தான். அவள் பிரியாணியைப் பொட்டலத்துடன் தரையில் போட்டுவிட்டு அவனைப் பார்த்தாள். அவளும் அன்றுதான் கெத்தியை முதன்முதலாகப் பார்க்கிறாள். கெத்திக் குட்டையானவன். ஒருகாலை நீட்டிப்போட்டு நடப்பான். அதனால் தான் அவனுக்கு கெத்தி என்று பெயர் வந்தது.

அனார்கலிக்கு அவனது பெயர் என்ன என்று தெரியும். அவனைப் பார்த்து, “நீ சரோஜா அக்கா மகன்தானே” என்று கேட்டாள். அவனும் ஆமாம் என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தான். “இங்கே ஒருநிமிஷம் வந்துட்டுப் போறீயா” என்று அவள் கெத்தியை அழைத்தாள். கெத்தி எதற்காகத் தன்னை அழைக்கிறாள். சென்றுவரலாமா என்று நின்று யோசித்தான். அதற்குள்ளாக அவள் இரண்டு மூன்று அடி நடந்து முன் வந்தாள்.

“உங்கம்மா கிட்டே நான் கேட்டேன்னு ஐம்பது ரூபாய் வாங்கிட்டு வர்றியா. சீட்டுக்குக்கட்டனும். எங்கப்பாக்கிட்டே வாங்கி அடுத்த வாரம் தர்றேன்னு சொல்லு” என்றுக் கேட்டாள்.

கெத்தி அவளது முகத்தை மிக அருகில் பார்த்தான். அவள் ஐம்பது ரூபாய் கேட்கும் போது தனது சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டதையும், தாவணியை சரி செய்வது போல அடிவயிற்றுத் துணியை விலக்குவதையும் அவன் கவனித்தான். அவனுக்கு ஜிவ்வென்றிருந்தது. உடம்பு முழுக்க அதிர்ந்து அடங்கியது. பிறகு அனார்கலியை அவன் காதலிக்கத் தொடங்கினான்.

கெத்தி அவனது அம்மாவிடம் சென்று அனார்கலி ஐம்பது ரூபாய் கடனாகக் கேட்கிறாள் என்று சொன்னதும், அவள் கோபத்தில் “அவளுடன் ஏன் பேசுறே. வெட்கம் கெட்டமுண்டை. ஏற்கனவே வாங்கின ஐம்பது ரூபாயை இன்னமும் தர்றலை. இனிமேற்பட்டு அவளைப் பார்த்து பேசினே இழுத்து வைச்சு அறுத்துருவேன்” என்று நாக்கைத் துருத்திக் கொண்டுப் பேசினாள். அவனுக்குப் பயமாகப் போனது. ஆனால் அனார்கலி தெருக் குழாய்க்கு வந்த போது அவனிடம் திரும்பவும் பணம் கேட்டாள். கெத்தித் தனது அம்மா திட்டியதை அவன் சொல்லாமல் சாயங்காலத்திற்குள்ளாக நானே பணத்தைப் புரட்டித்தருகிறேன் என்று சொன்னான்.

“இந்நேரம் சிலுவையா இருந்தா கேட்டதும் உடனே தந்துருவான். நீ என்னாடான்னா புரட்டுறேன் புடுங்குறேன்னு டாவடிக்கிறே” என்று குத்தலாகப் பேசினாள். அவள் அப்படி பேசியதைக் கேட்டதும் கெத்திக்கு கோபம் வந்தது. உடனே செல்வத்திடம் சென்று நூறுரூபாய் கந்து வட்டிக்கு வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் தந்தான்.

“நீ ஐம்பது ரூபாய் தானே கேட்டே. நான் நூறு ரூபாய் தர்றேன். திருப்பித் தரவே வேண்டாம். வைச்சிக்கோ” என்று கோபத்தில் பணத்தைத் தந்தான். வீட்டு வாசலில் அவனிடம் வாங்கியப் பணத்தை அவள் யாருக்கும் தெரியாமல் முத்தமிட்டு வாங்கிக்கொண்டாள். அவள் முத்தமிட்டுக் கொண்ட சத்தம் அவனுக்குக் கேட்டது. அவனது கன்னத்தில் முத்தமிட்டதைப் போல உணர்ந்தான். கெத்தி அவள் தாவணியைச் சரி செய்யமாட்டாளா இல்லை மேல்சட்டை இழுத்துவிடமாட்டாளா என்று ஏங்கியவனாக இருந்தான். அதை அவள் புரிந்து கொண்டவளைப் போல தன்னைத் திருப்பிக் கொண்டாள். நடந்து சென்றவள் வேண்டுமென்றே இடுப்பை வெட்டி வெட்டி நடந்து சென்றாள். அன்றிரவு அவளது இடுப்பு கெத்திக்கு கனவில் வந்தது.

பிறகு மூன்று நாட்கள் கழித்து அனார்கலியை அவன் தெரு குழாயடியில் வைத்துப் பார்த்தான். அப்போது பிற்பகல் வேளை. வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் கிளாசிக்மேட்டினி பார்த்துக் கொண்டிருந்தார்கள். சத்தம் தெருவை நிறைத்திருந்தது. அவள் மட்டும் பச்சைக் குடத்துடன் நின்றிருந்தாள். பீடியைத் தூக்கி எறிந்து விட்டு அவளிடம் வந்தான். அவனுக்காகக் காத்திருந்தவள் போல தனது சட்டைக்குள்ளிருந்த ஐம்பது ரூபாயைத் திருப்பிக்கொடுத்தாள்.

“ஏன் பணத்தைத் திருப்பித் தர்றே”

“நீ எவ்வளவு கஷ்டத்திலே இந்த பணத்தை புரட்டினியோ. எனக்கு ஐம்பது ரூபாய் மட்டும் போதும்”.

“நீயே ஐம்பது ரூபாயை வைச்சிக்கோ. ஜீவன் தியேட்டருக்குப் போவோமா. காலையிலே கூட்டமே இருக்காது. பால்கனியிலே உட்கார்ந்து படம் பார்ப்போம்” என்று அவளை அழைத்தான். அவள் உடனே சம்மதித்துவிட்டாள். அவர்கள் மறுநாள் காலையில் யாருக்கும் தெரியாமல் சினிமா பார்க்கச் சென்றார்கள். பக்கத்தில் பக்கத்தில் அமாந்துகொண்டார்கள். படம் ஓடத்தொடங்கியதும், அனார்கலியின் தோளைத் தனது தோள்பட்டையினால் உரசினான். அவள் அதை அனுமதித்தாள். பிறகு மெதுவாகthத் தலையில் கைவைத்து அவளது காதைத் தடவ ஆரம்பித்தான். அவள் அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். கெத்தி இப்போது அவளது கன்னத்தைத் தடவத் தொடங்கியிருந்தான். அப்போதுதான் அவள் அழுது கொண்டிருப்பது தெரிந்தது.

“ஏன் அழுகுறே அனாரு. ஏன் அழுகிறே” என்று கேட்டான்.

“எனக்கு எவ்வளவு கடன் இருக்கு தெரியுமா. கந்து வட்டிக்காரனுக்கு தரனும். சேலை எடுத்தவனுக்கு வாரம் வாரம் கட்டனும். அரிசி வாங்கினவனுக்கு பணம் தரனும்” என்று சொன்னாள்.

“ஏன் உங்கப்பா பணம் தரமாட்டாரா”

“அவரு எஸ்டேட் வேலைக்குப் போயிருக்கிறாரு. அவர் வாரம் வாரம் கொடுத்து விடுற பணத்திலே நானும் எங்கம்மாவும் என்னா செய்யமுடியும். நீயே சொல்லு. கேபிள்காரனுக்கு நாலுமாசம் பாக்கி. நாளைக்கு தர்றலைன்னா கேபிளை பிடுங்கிவிட்டுடுவேன்னு சொல்லிட்டுப்போயிட்டான். எனக்கு அசிங்கமா இருக்கு கெத்து” என்று அழுதாள். அவனால் சினிமா பார்க்கவே முடியவில்லை. அப்போதைக்கு அவள் அழாமல் இருக்கவேண்டும். சினிமா பார்க்கவேண்டும் என்பதற்காக “நான் ஏதாவது பணம் புரட்டித்தர்றேன். நீ கவலைப்படாமல் படத்தைப் பாரு” என்று சொன்னான்.“உன்கிட்டே மட்டுந்தான் கெத்து இப்படியெல்லாம் பேசமுடியுது. சிலுவை முன்னே மாதிரி இல்லை. ஒருதடவை அடிவயிற்றைத் தொட்டுட்டான். பிரியாணி வாங்கிக் கொடுத்துட்டு சர்ச்சுக்குப் பின்னாடி வைச்சு நாலு தடவை உதட்டிலே முத்தம் கொடுத்தான். எனக்கு வாந்தி வர்றது மாதிரி இருந்துச்சு.நான் அவனை தள்ளிவிட்டுட்டு வந்துட்டேன். ஆனால் அவன் பின்னாடியே வந்து மாரைப்பிடுச்சி அமுக்கிட்டான். நாசமாப்போறவன். ஒருநாள் முழுக்க வலிப் பொறுக்கமுடியலை தெரியுமா” என்று அவள் அழுதாள்.

அனார்கலி சொல்லியதைக் கேட்டதும் கெத்தி தனது கையை அவளது கன்னத்திலிருந்து எடுத்துக்கொண்டான். அவளது முகத்தைப் பார்க்க அவனுக்கு தைரியமில்லை. ஆனால் அவள் திடீரென அவனுக்கு முத்தம் கொடுத்தாள். கொடுத்துவிட்டு, “நீ அவனை மாதிரி இல்லைன்னு எனக்கு தெரியும் கெத்து” என்று சொன்னாள். அவள் அப்படி சொன்னதும் அவனுக்கு உடம்பு புல்லரித்து ஜிலுஜிலுவென காற்றில் நின்று கொண்டிருப்பது போலிருந்தது.

[3]

கெத்தி கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டான். காலை ஏழு மணி வெயிலும் குளிர்காற்றும் பனிமூட்டமுமாக கூடி ஊர் தெரிந்தது. குளிரில் அவனது உடம்பு நடுங்கியது. அவன் பஸ்ஸை விட்டு இறங்கியதும் டீக்கடைக்குப் போய் டீ குடித்தான். சூடாக டீக்குடித்த பிறகு உடம்பிலிருந்த குளிர் குறைந்தது போலிருந்தது. சூர்யதாசு சொன்ன விலாசத்தைக் காட்டி ஆட்டோக்காரரிடம் விசாரித்தான். ஆட்டோக்காரர் வழி சொன்னார். அவர் சொன்னப் பாதை ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. பாதை நெடுக காங்கிரீட் போட்ட வீடுகள் ஒரேமாதிரியாகவும் ஒரே நிறத்திலும் இருந்தது. வீடுகளுக்கு முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் இருவாசல்கள் இருந்தது. வீட்டு வாசலில் வெயிலில் உடம்பைக் காட்டிக்கொண்டு குழந்தைகள் அமர்ந்திருந்தனர். வயதானவர்கள் கம்பளி போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தனர். சற்று முன்பாக அணைந்திருந்த அடுப்பிலிருந்து புகை கசிந்து கொண்டிருந்தது.

சாமிக்கன்னுவின் மருமகன் தேவராஜ் கொடைக்கானல் டாஸ்மார்க்கில் வேலை செய்கிறான். சாமிக்கு அவன் தூரத்து உறவு. அவர்கள் வீட்டில் பெண்கள் என்று யாருமில்லை. தேவராஜின் அம்மா அவனது திருமணத்திற்கு முன்பே இறந்து போனாள். அவனது அப்பா பெரியகுளத்தில் டீக்கடையில் வடைமாஸ்டராக இருக்கிறார். முதலில் தேவராஜிம் டீக்கடையில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கொடைக்கானலிலிருந்து வரும் சிவில்சப்ளைக் கிளார்க் ஒருவரின் மூலமாக அவனுக்குக் கொடைக்கானல் டவுன் வீதியிலிருந்த டாஸ்மார்க் பாரில் வேலை கிடைத்தது. தினமும் நூறு முட்டைகள் அவித்து வைக்கவேண்டும். பிளாஸ்டிக் தம்ளரை பொறுக்கி வைத்து சாக்குமூடையில் கட்டி வைக்க வேண்டும். பாட்டில்களை எடுத்து பெட்டியில் போட்டு வைக்கவேண்டும். இதுபோக கலர் பாட்டில்களுக்கும் சோடா பாட்டில்களுக்கும் பட்டுவாடா செய்து கணக்கு முடிக்கவேண்டும்.

டாஸ்மார்க்கில் அவனுக்கு வேலை கிடைத்தப் பிறகு தான் சாமிக்கன்னுவின் மகள் பாக்கியத்தைத் திருமணம் செய்து கொண்டான். அவள் வீட்டிற்கு வந்த பிறகு கடைக்குப் பயிறு அவித்துக் கொண்டுபோய் விற்றான். பிறகு பெரியகுளத்திலிருந்து மாங்காய் வாங்கிக்கொண்டு வந்து ஊறுகாய் போட்டு விற்றான். பாக்கியம் செய்து தரும் சுண்டல் மாங்காயைச் சாப்பிடுவதற்கென்று கொடைக்கானல் டவுன் வீதிக் கடைக்குக் கூட்டம் கூடியது. சிவில்சப்ளைக் கிளார்க் அந்த மாங்காய் சுண்டலைத் தினமும் மதியச் சாப்பாட்டிற்கு வாங்கிக் கொண்டுப் போவார்.

பாக்கியத்திற்கு இது இரண்டாவது பிரசவம். முதல் பிரசவத்தை ஊரில் வைத்துத் தான் சாமிக்கன்னு பார்த்தார். ஊரில் அவளது அம்மா அக்கா பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று பலரும் அவளுக்கு துணையாக இருந்தது. தைரியமாக இருந்தாள். இரண்டாவது பிரசவத்திற்கு தேவராஜ் ஊருக்கு அனுப்பவில்லை. கையில் பணமிருக்கிறது. கொடைக்கானல் ஆஸ்பத்திரியில் பார்த்துக் கொள்ளலாமென சொல்லிவிட்டான். துணைக்கு மட்டும் ஊரிலிருந்து யாராவது வந்தால் போதுமென்று சாமிக்கன்னுவிடம் சொன்னான்.

சாமிக்கன்னு தனது மகளின் பிரசவம் முடிகிற வரையில் அனார்கலியை துணைக்குக் கொண்டுப் போய் விட்டுவிட்டு வந்தார். அனார்கலி நன்றாகச் சமையல் செய்வாள். துணி துவைத்துப் போடுவாள். அவள் பாக்கியத்தின் வீட்டிற்கு வந்ததும் மதியச் சாப்பாட்டிற்குக் கத்திரிக்காய் வெண்டைக்காய் போட்டுப் புளிக்குழம்பும் முட்டைக்கோஸ் பொறியலும் செய்திருந்தாள். கடையிலிருந்து பசியோடு வந்தவன் வேகவேகமாகச் சாப்பிட்டான். சாப்பிட்டு வயிறு நிறைந்த பிறகுதான் அவனுக்குத் தெரிந்தது. சமையல் செய்தது தனது மனைவி இல்லை. வேறு ஒருவர் என்று. அனார்கலியைப் பார்த்ததும் அவனுக்குத் தெரிந்துவிட்டது. அவள் செய்திருந்த சமையலுக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லை. அவள் கொடைக்கானலுக்கு வந்ததும் சுடிதார் போட்டுக்கொண்டாள். டாப்ஸ் என்று எதுவும் போட்டுக்கொள்ளவில்லை. தலைமுடியை கேரளாக்காரப் பிள்ளைகள் போல சீவி முடித்திருந்தாள். இதெல்லாம் ஊரிலிருக்கும் போது செய்யமுடியாது. அவளது அம்மா விளக்ககுமாறை எடுத்துப் புட்டத்தில் அடித்து நொறுக்கிவிடுவாள்.

“புளிக்குழம்பு ரொம்ப நல்லாயிருக்கு. உங்க அக்காவுக்கு கொடு. சப்புன்னு இத்தனை நாள் சாப்பிட்டு சாப்பிட்டு ஒன்னுமில்லாமல் இருக்கா” என்று சொன்னான்.

அனார்கலி “அக்கா இல்லைன்னே அவங்க எனக்கு மதினி முறை வேணும். நீங்க எனக்கு அண்ணன் முறை வேணும். உரப்பும் புளிப்புமாக சாப்பிட்டு முறையை மாத்திப்போட்டீங்களே” என்று சிரித்தாள். அவள் சிரித்துக்கொண்டதைப் பார்த்து தேவராஜிற்கு சிரிப்பு வரவில்லை.

பாக்கியம், “ஆமாங்க இவள் உங்களுக்கு தங்கச்சி முறை வேணும்” என்று சொன்னாள். தேவராஜ் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடித்ததும் திரும்பவும் கடைக்குச் சென்றுவிட்டான். அனார்கலியை அவன் எதற்காகவோ திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டுச் சென்றான். இரவு வேலை முடிந்துவரும் போது அவளுக்கு புரோட்டாவும் கறிக்குழம்பும் வாங்கிக்கொண்டு வந்தான். அவள் அதை விரும்பவில்லை. வேண்டாவெறுப்பாகச் சாப்பிட்டாள். அன்றிலிருந்து அவன் தினமும் புரோட்டா வாங்கிக் கொண்டு வந்து தந்தான்.

“எத்தனை நாள் நான் புரோட்டா வாங்கிக்கொடுங்கன்னு கேட்டிருக்கேன். உங்க தங்கச்சின்னு சொன்னதும் எவ்வளவு ஆசையா தினமும் அவளுக்கு வாங்கிக்கொடுக்கிறிங்க” என்று பாக்கியம் சலித்துக் கொண்டு சாப்பிட்டாள்.

“இன்னும் இரண்டு மூனு நாளிலே இடுப்பு வலி வந்துரும். அப்புறம் ஆஸ்பத்திரியிலே சேர்த்துட்டோமுன்னா சாப்பிடுறதுக்கு ஒருமாதமாகிடும்மில்லை” என்று தேவராஜ் அவளிடம் சொன்னான்.

கெத்தி 33ம் நம்பர் வீட்டிற்கு முன்பாக நின்று “பாக்கியம் அக்கா” என்று அழைத்தான். கதவு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தைகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று விசாரித்தான். அவர்கள் பாக்கியம் குழந்தை பெறக்கப் போகிறது. நேத்து ராத்திரி ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க என்று சொன்னார்கள். எந்த ஆஸ்பத்திரி என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கெத்திக்கு யாரிடம் விசாரிப்பதென்று தெரியவில்லை. அவனுக்கு டவுன் வீதியில் தேவராஜ் அண்ணன் வேலை செய்கிறது ஞாபகத்திற்கு வந்தது. டவுன் வீதிக்கு எப்படி போவது என்று அவர்களிடம் வழி கேட்டான்.

கெத்திக்குப் பத்தாயிரம் ரூபாய் கடனைத் தவிர வேறெந்த கடனுமில்லை.செல்வராஜிடம் கையெழுத்துப் போட்டு வாங்கியிருந்தான். அவனுக்கு ஜாமீனாக மாரியும் பரமனும் கையெழுத்துப் போட்டிருந்தார்கள். அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டால் சம்பாதிக்கிற பணத்தைத் தினமும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அனார்கலிக்கும் தனக்கும் திருமணம் நடந்து முடிந்ததும் அவளை வேலைக்குப் போகவிடாமல் வீட்டில் இருக்க வைத்து விடலாம் என்று கெத்தி நினைத்துக் கொண்டான்.

கெத்தி ஒருநாள் அவளிடம் என்னைக்கு கல்யாணம் செய்துக்கலாம்? என்று கேட்டபோது அவள் எனக்குப் பத்தாயிரம் ரூபாய் கடனிருக்கு. அதை அடைச்சிட்டா உடனே கல்யாணம் தான். கல்யாணத்திற்குப் பின்னாடி எந்தக் கடன்காரனும் வீட்டு வாசல் படியிலே நிக்கக்கூடாது என்று அவனிடம் சொன்னாள்.

கெத்தி நான் வேணா பத்தாயிரம் ரூபாயை வட்டிக்கு வாங்கிக் கட்டுறேன்.நீ கடனைக் கட்டி முடி என்றுச் சொன்னான். அவள் சம்மதிக்கவில்லை. ஆனால் அவன் அன்றிரவு செல்வராஜிடம் ஈட்டுப் பத்திரத்தை வாங்கிக்கொண்டுப் போய்க் கொடுத்துப் பணத்தை வாங்கிக்கொண்டு வந்தான். அவளிடம் பணத்தைத் தந்ததும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. ரூபாய் நோட்டுக்களுக்கு வழக்கம் போல முத்தமிட்டுக்கொண்டாள்.அதன் பிறகு அவளை தெருவிலும் குழாயடியிலும் வீதியிலும் வீட்டு வாசலிலும் பார்க்க முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை. ஒரு நிமிடம் கூட அனாரைப் பிரிந்து தன்னால் இருக்க முடியாது என்று கெத்தி வருத்தப்பட்டுக் கொண்டான். அவளை தினந்தோறும் சினிமாவுக்கு அழைத்துச் சென்று அவளது தோளில் சாய்ந்துக் கொள்ள வேண்டுமென்று கனவுக் கண்டான்.

அவள் பணம் வாங்கி முழுதாக இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. செல்வராஜின் ஆட்கள் வட்டி கட்டவில்லையென்று வீடு வந்து அவனைத் திட்டி விட்டுப் போனார்கள். அப்பொழுது தான் சரோஜாவுக்கு விஷயம் தெரிந்தது. கெத்தி செருப்படி வாங்கிக் கொண்டு ரோட்டில் ஓடினான்.அவனை விடுவதாக இல்லை அவள்.பின்னால் துரத்திக் கொண்டு ஓடினாள்.கீரைச் சந்தை பக்கத்தில் அவனைப் பிடித்துக் கொடுப்பதற்கு ஆட்கள் இருந்தார்கள்.செருப்பைக் கீழேப் போட்டு அங்கிருந்த மூங்கில் கம்பை எடுத்து அவனை அடித்தாள்.

“எஙகிட்டே வாங்கின ஐம்பது ரூபாயை கொடுக்கிறது அவளுக்கு ஒருவருஷமாச்சு. பத்தாயிரம் ரூபாயை கந்து வட்டிக்கு வாங்கி முண்டைக்கு கொடுத்து வந்து நிக்கிறே……மகனே” என்று திட்டினாள். அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு வந்தாள்.

“அவளுக்கு எதுக்குடா பணம் வாங்கிக்கொடுத்தே”

“நான் அவளைத்தான் கல்யாணம் செய்துக்க போறேன்”

“பத்தாயிரம் ஓவாயைக் கொடுத்து நிச்சயம் செய்துட்டு வந்தியா. வா அவள் ஆத்தாக்கிட்டே போய் கேட்போம்”

அனார்கலியின் வீட்டிற்கு முன்பாக நின்று “அடியே அடியே வெளியே வாடீ” என்று சத்தம் போட்டாள். வீட்டில் யாருமில்லை. வேலைக்குப் போயிருப்பதாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்னார்கள்.சரோஜா பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒப்பாரி வைத்தாள்.

“என் மகனை ஏமாத்தி அம்மாவும் மகனும் ரூபாயை பிடுங்கியிருக்காளுக. வரட்டும் அவளுகளோட குடுமியை அறுக்கிறேன்” என்று திட்டிவிட்டு வந்தாள். இது நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அனார்கலியும் அவளது அம்மாவும் தெரு குழாயிக்குப் பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் சாமான் வாங்கிக் கொண்டிருந்த சரோஜாவை பிடித்துக்கொண்டார்கள்.அவர்கள் ஒருவரையொருவர் திட்டுவதும் புகார் சொல்லுவதுமாக சண்டை வலுத்தது. சரோஜா கை நீட்டி அனார்கலியின் தாவணியைப் பிடித்து இழுத்து அவளது கையை திருகினாள்.அவள் வலி பொறுக்க முடியாமல் கத்தினாள். பக்கத்திலிருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட்டார்கள்.

“நானொன்னும் யாரையும் காதலிக்கலை. அவன்கிட்டே பணமெல்லாம் வாங்கவே இல்லை. கோயிலில் சத்தியம் செய்றேன்” என்று பெட்டிக்கடை சூடம் வாங்கிக் கொண்டாள்.சரோஜாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தெரு மண்ணை வாரித் தூற்றினாள்.பத்தாயிரம் ரூபாய் வாங்கிக்கிட்டு இல்லைங்கிறேயே நீயெல்லாம் நல்லாயிருப்பியா. நாசமா போயிடுவே” என்று கண்ணீரோடு வீட்டிற்கு திரும்பினாள்.கெத்தி யார் சொன்னது என்று தெரியவில்லை.கிளாசிக் மேட்டினி ஓடிக்கொண்டிருந்த மதியவேளையில் அவன் அவளுக்காக காத்திருந்தான். வழக்கம் போல அவள் குழாயடிக்கு வந்து சேர்ந்தாள். அவளிடம் எந்த பயமும் படபடப்பும் இல்லை.எப்போதும் போல சிங்காரித்து பூ வைத்து நெற்றியில் பொட்டிட்டு வந்திருந்தாள்.

“ஏன் எங்கம்மாகிட்டே காதலிக்கலைன்னு சொன்னே” என்று கெத்தி கோபமாகக் கேட்டாள்.

“நான் பத்தாயிரம் ரூபாய் வாங்கினதை யார்கிட்டேயேயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னேன். நீ ஏன் உங்க ஆத்தாகாரிக்கிட்டே சொன்னே. இப்போ தெருவுக்கு நான் கடங்காரின்னு தெரிஞ்சுப்போச்சு. உன்னை நான் கல்யாணம் செய்துக்க முடியாது கெத்தி. உன்கிட்டே பட்ட கடனை சீக்கிரத்திலே திருப்பிக்கொடுத்துருவேன்” என்று அவனது முகத்தைப் பார்க்காமல் சொன்னாள்.

கெத்திக்கு மேலும் கோபமாக வந்தது.அவளது குடத்தை பிடுங்கிக்கொண்டான்.அவள் அன்று வேறு சோப்பும் புதிதாக பவுடரும் பூசியிருப்பதை அவனால் உணர்ந்துக் கொள்ளமுடிந்தது. அவளது முகத்தில் வெயில் பட்டுப் பவுடர் மினுமினுவென தெரிந்தது. அவளது உடை கூட புதிதாக இருப்பது போல அவனுக்குத் தோன்றியது. தன்னை ஏமாற்றிவிட்டாளோ என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது.

“கைய விடு. இல்லைன்னா செருப்பை கழற்றி அடிச்சிருவேன். என்னையைப் பத்தித் தெரியாது” அவனது முகத்திற்கு எதிராக கை நீட்டி பேசினாள். தன்னிடம் இத்தனை நாட்களும் பேசியது எல்லாம் பொய் என்று தெரிந்ததும் அவனுக்கு ஆத்திரமாக வந்தது. அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தெரு என்று பாராமல் அவளை இழுத்து அணைத்துக்கொள்ள முயன்றான்.அவள் சொன்னது போலவே செருப்பைக் கழற்றி அடித்துவிட்டாள்.

“நானென்ன உனக்கு காசுக்கு வர்றவள்ளுன்னு நினைச்சிட்டீயா….. மகனே, போடா ஓங்காத்தாக்கிட்டே போயி….” என்று அசிங்கமாகத் திட்டினாள். கெத்திக்கு அவமானமாக இருந்தது. நேராக அவன் லாட்ஜிற்குத்தான் சென்றான். மாரியும் பரமனும் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.அவர்களிடம் விஷயத்தைச் சொன்னான். அவர்கள் ராத்திரி தெருவில் வைத்துப் பஞ்சாயத்து செய்யலாம். ஆளுக்கு ஒரு பாட்டில் வாங்கிக்கொடுத்துரு என்று சரக்கு கேட்டார்கள். அவனும் சரி என்று சொன்னான்.ஆனால் அவனுக்கு மனதில்லை. நேராக டாஸ்மார்க்கு கடைக்குப் போய் குவார்ட்டர் வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டான்.

கெத்தியின் வீட்டிற்குப் பக்கத்து கடையில் ரோஜாப்பூச் செடிக்கு ஊற்றுகிற மருந்து பாக்கெட்டில் விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு பாக்கெட்டு வாங்கிச் சரக்கில் கலந்துக்

குடித்தான். குடிக்கும் போது குமட்டிக் கொண்டு வந்தது. திண்பண்டம் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. கசப்புத் தெரியாமல் இருக்கச் சர்க்கரையை வாயில் போட்டுக்கொண்டான். சாகும் போது காகிதத்தில் ஏதாவது எழுதி வைக்கலாமா என்று யோசித்தான். அவனுக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. அவனுக்கு உறக்கம் தான் வந்தது. அரை டம்ளர் சரக்கு மீதமிருந்தது. குடித்துவிட்டு படுத்துக்கொண்டான். அவனுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் வாந்தி வருவது போலிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து கக்கூஸ் பக்கமாகச் சென்றான். அவன் வாந்தி எடுக்கிற சத்தம் தெரு வரை கேட்டது. பக்கத்து வீட்டுக்காரர்களும் எதிர்த்த வீட்டுக்காரர்களும் சத்தம் கேட்டு வந்தார்கள். கெத்திக்கு இப்போதுதான் மயக்கம் வருவது போலிருந்தது. கண்களை மூடி மூடி திறந்துக் கொண்டான். நாக்கை வெளியே நீட்டினான்.

“நான் ரோஜாப்பூ செடிக்கு போடுற மருந்தை சாப்பிட்டேன். சாகப்போறேன். அனார்கலிதான் என் சாவுக்கு காரணம்” என்று கத்தினான். அவனது சத்தத்தைக் கேட்டு செடிக்கு மருந்து விற்றுக்கொண்டிருந்தவன் வீட்டிற்கு வந்தான். அவனுடன் இரண்டு பேர் வந்தார்கள்.கெத்தியைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு பெரியாஸ்பத்திரிக்குப் போனார்கள்.

கெத்திக்கு ஒருநாள் முழுக்க குளுகோஸ் பாட்டில் ஏற்றினார்கள். இரண்டு தடவைக்கு மேலாக அவனால் வாந்தி எடுக்க முடியவில்லை. வயிற்றில் ஒன்றுமில்லை.வாந்தி தண்ணியாகத்தான் வரும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.அவனது வாயிலிருந்து எச்சில் வடிவது போல நீர் ஒழுகிக் கொண்டிருந்தது.என்னென்னமோ உளறிக்கொண்டிருந்தான்.திடீரென அவனாகக் கைகளை நீட்டி செல்வராஜ் அண்ணே உங்களை ஏமாத்தமாட்டேன் அண்ணே. அந்த முண்டை என்னை ஏமாத்திறமாதிரி நான் உங்களை ஏமாத்தமாட்டேன் என்று கத்தினான்.

இரண்டு நாட்களாக அவனோடு சரோஜா ஆஸ்பத்திரியில் இருந்தாள். பரமனும் மாரியும் அவனுக்கு வட்ட பன்னும் பாலும் வாங்கிக்கொடுத்தார்கள். அவனது அம்மாவுக்கு இட்டிலி வாங்கிக்கொடுத்தார்கள். தினமும் ராத்திரியில் வந்து அவர்கள் அவனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

“அனார்கலிக்கு தெரியுமாடா”

“அவள் ஊரிலேயே இல்லை.எங்கே போறா வர்றான்னு தெரியலை. சூர்யாதாசுக்கிட்டே சொல்லியிருக்கேன். அவள் வீட்டுக்குப் பக்கத்திலேதான் அவன் இருக்கான்”

“டேய் அவகிட்டே சொல்லுங்கடா. அவளைப் பார்க்கனும் போலயிருக்கு” என்று கண்ணீரோடு சொன்னான்.

“நேத்து ராத்திரி சிலுவை என்கிட்டே கேட்டான்டா. அவனுக்கு பாபாமுத்து சொல்லியிருக்கான். வந்தாலும் வருவான்” என்று பரமன் சொன்னான்.

கெத்திக்கு சந்தோஷமாக இருந்தது. சிலுவை தன்னுடன் இந்த சந்தர்ப்பத்தில் பேசினால் தான் அதைத் தொடர்ந்து பேசுவோம் என்று நினைத்தான். அவன் நினைத்தது போலவே மறுநாள் காலையில் சிலுவை ரொட்டியும் பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு வந்தான். அப்போது அவனது அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தாள். சிலுவையைப் பார்த்ததும் அவனறியாமல் கெத்தியின் கண்கள் கலங்கின.

“வா சிலுவை உட்காரு” என்று சொன்னான்.

“ஏன்டா இப்படி செய்தே. எதுவா இருந்தாலும் நம்ம ஃபிரண்ட்ஸ் கிட்டே சொல்லிப் பஞ்சாயத்து செய்ய வேண்டியது தான்டா”

கெத்தி எதுவும் பேசவில்லை.நர்ஸ்ஸம்மா வந்து ஊசிபோட்டுவிட்டுப் போனாள்.கெத்தி தனது இடுப்பைத் தடவிக்கொண்டான். சிலுவை தான் கொண்டு வந்ததை அஙகிருந்த மேஜையில் வைத்துவிட்டு “வேறெ எதுவும் பிரச்சனையாடா” என்று அவனருகே உட்கார்ந்து கேட்டான். கெத்தி அதெல்லாம் ஒன்றுமில்லை என்று மழுப்பினான். சிலுவை விடுவதாக இல்லை.“சும்மா சொல்லு எனக்கு எல்லா விபரமும் தெரியும். நீ சொல்லலையினாலும் எப்படியாவது விஷயம் வெளியே வரத்தான் போகுது” என்று பிடித்துக் கொண்டான். அதன் பிறகுதான் கெத்தி நடந்த எல்லா விஷயத்தைப் பத்தியும் அவனிடம் சொன்னான். சிலுவை எல்லா விஷயத்தைப் பற்றியும் ஊகித்து வைத்திருந்தான். தான் நினைத்தது சரிதான் என்று அவனாக பேசிக்கொண்டான். சிலுவை அவ்வாறு சொல்லியதும் கெத்திக்கு வெட்கமாக இருந்தது. “நான் எதுக்கு அவகிட்டே இருந்து விலகியிருக்கேன். எனக்கு தெரியாதா. அவள் பிசாசு மாதிரிடா. பணத்தை உறிஞ்சிக்கிட்டே இருப்பா. கொடுத்துட்டு இருக்கிறவரைக்கு லவ் செய்றேன்னு லவ் செய்றேன்னு உரசிக்கிட்டே இருப்பா. தடவவிடுவா. மாரை காட்டுவா. இடுப்பை காட்டுவா. பணத்தைக் கொடுத்துட்டே இருக்கனும். நீயாவது பத்தாயிரம் ரூபாய். நான் அவக்கிட்டே கொடுத்ததுக்கு கணக்கு வழக்கு இல்லை கெத்தி. இதோட விலகிக்கோ. முடிஞ்ச ஆளுகளை வைச்சு பேசி பத்தாயிரத்தை வாங்கப் பாரு. மருந்தை குடிச்சிட்டு படுத்துருக்கிற விஷயம் தெருவுக்கு தெரிஞ்சுப்போச்சு. ஆள் எஸ்கேப்பாகிட்டா. இப்போ எங்கே இருக்கான்னு தெரியலை” என்று சொன்னான்.

“அப்போ அவள் என்னை கல்யாணம் செய்துக்கமாட்டாளா”

“அறிவு கெட்டக்.. ..” என்று திட்டியவன் சுற்றிலும் பார்த்துக்கொண்டான். யாரும் தன்னைப் பார்க்கவில்லையென்றதும் அவனது மண்டையில் தட்டிவிட்டு “வெளியூர் பிள்ளைகளை கல்யாணம் செய்துட்டு நிம்மதியா இருடா. உள்ளுர்காரிகள் எல்லாரும்…….முண்டைகளா இருக்காளுக” என்று முனங்கினான்.

“அப்போ பத்தாயிரம் ரூபாயை வாங்கவே முடியாதா”

“சாட்சிக்கு யார் கையெழுத்துப்போட்டிருக்காங்க”

“பரமனும் மாரியும்”

“சரி நான் அவங்ககிட்டே பேசிக்கிறேன். நீ முதலிலே வீட்டுக்கு வா. வந்து வேலைக்குப்போ. தண்ணியைப்போட்டு சுத்தாமல் இருக்கனும்” என்று பெரிய மனுஷன் போல் பேசினான். அவன் சென்ற பிறகு அவனுக்கு பல சிந்தனைகள் ஓடின.சிலுவை உண்மையாகத் தான் பேசுகிறானா இல்லை தன்னை அவளைப் போல ஏமாற்ற வேண்டுமென்று நினைத்து ஏமாற்றுகிறானா என்று நினைத்தான். அவனது மனம் யார் எது சொன்னாலும் கேட்கக் கூடியதாக இருந்தது. அதை விட யார் சொல்வதையும் நம்பாமலும் இருந்தது. கண்களை மூடிக்கொண்டான்.

சிலுவைக்கும் அனார்கலிக்கு திருமணம் நடந்து கொண்டிருந்தது. சர்ச்சில் அவர்கள் நின்று கொண்டிருப்பதை அவனால் பார்க்க முடிந்தது.சூர்யாதாசும் பாபாமுத்துவும் மருதநாயகம் பழனியும் ஜில்லாமைக்கும் அவனைச் சுற்றி நின்றிருப்பதை அவன் பார்த்தான். அவன் சர்ச்சிற்கு வெளியே நின்றிருந்தான்.பரமன் அவனைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.ஆனால் வரிசையாக நின்றிருந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.பிரியாணிப் பொட்டலத்தை வாங்குவதற்கு ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

அவன் முழித்துப் பார்த்த போது அவனது அம்மா நின்றிருப்பது தெரிந்தது. அவனுக்குச் சூடாகக் கஞ்சி கரைத்துக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள். அவன் தம்ளரில் வாங்கிக் குடித்தான். அவனுக்குப் பயமாக இருந்தது. வயிறு நிறைந்ததும் எரிச்சலும் வலியும் உண்டானது. அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சரோஜா மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தாள்.அவன் வாங்கி முழுங்கிக் கொண்டான்.இன்னும் சற்றுநேரத்தில் வலி குறையும் என்பது அவனுக்குத்தெரியும். ஆனால் பயம் குறையாது.

சரோஜா திடீரென அழ ஆரம்பித்தாள். அவள் எதற்காக அழுகிறாள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. அவன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பி வைத்துக்கொண்டான்.

“செல்வராஜ் வீட்டுக்கு வந்து பணத்தை கேட்டிட்டுப் போறான்டா” என்று அழுதாள். கெத்திக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனது செல்ஃபோனிலிருந்து ஃபோன் செய்யமுடியாது. ரீசார்ஜ் கூட செய்வதற்குத் தன்னிடம் பணமில்லை என்பதை நினைத்ததும் அவனுக்கு அழுகையாக வந்தது. அனார்கலி தன்னைத் திருமணம் செய்துக் கொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை. தன்னிடம் வாங்கியப் பணத்தை மட்டுமாவது கொடுத்துவிட்டால் போதும் என்று அவன் அப்போது நினைத்தான்.

“அம்மா பரமனுக்கிட்டேயேயும் மாரிக்கிட்டேயும் பேசும்மா. அனார்கலிக்கிட்டே பணத்தை வாங்கிக்கொடுக்கச் சொல்லும்மா” என்று அழுவது போல அவன் பேசினான். அவனது அம்மா கண்களை துடைத்துக் கொண்டு மீதிக் கஞ்சியை அவனுக்குத் தம்ளரில் ஊற்றிக்கொடுத்தாள்.

அனார்கலி ஊரில் இல்லை. அவள் எங்கிருக்கிறாள் என்று கண்டுப்பிடிப்பதற்கு மூன்றுநாட்கள் ஆனது. கொடைக்கானலுக்குப் போயிருக்கிறாள் என்று தகவல் வந்ததும் செப்டிங்டேங்க் சுத்தம் செய்யும் வேலைக்குப் போய் சம்பளத்தை வாங்கிக்கொண்டுப் புறப்பட்டு வந்தான். மேடான பாதையில் அவனுக்கு கால் வலியெடுப்பது கூடத் தெரியவில்லை. வெயிலும் ஈரக்காற்றும் கலந்திருந்தது. இடையில் ஒரு டீக்கடையில் வரிக்கித்துண்டையும் டீயையும் வாங்கிக்குடித்தான். கொடைக்கானலுக்கு இதற்கு முன்பு வந்து ஊர் சுற்றியவனைப் போல நடந்தான்.

டவுன் வீதியிலிருந்த டாஸ்மார்க் கடையில் போய் விசாரித்தான். தேவராஜ் வேலை பார்க்கும் கடையில் பூங்காவிற்குப் பக்கத்திலிருந்தது. தேவராஜ் அப்போதுதான்

ஆஸ்பத்திரியிலிருந்து டூட்டிக்கு வந்திருந்தான்.தேவராஜை அவன் அடையாளம் தெரிந்து கொண்டான்.பாட்டில்கள் வாங்கிக்கொண்டு பிற்பகல் பொழுதில் ஆட்கள் சிலர் அமர்ந்திருந்தனர்.ஈயப்பாத்திரத்தில் முட்டைகளும் சுண்டல் பயறும் இருந்ததை அவன் பார்த்தான்.அவனுக்கு அங்கு நிற்பதற்குப் பிடிக்கவில்லை. வாடை குமட்டிக் கொண்டு வந்தது.

“நான் போடியிலிருந்து வர்றேன். சரோஜா மகன் சின்னுராசு” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். சரோஜாவின் பெயரைக் கேட்டதும் அவனுக்கு ஞாபகம் வந்தது போல “வாடா கெத்தி வா, வா” என்று அழைத்தான். தேவராஜ் அவனை உட்காரச் சொல்லி டீ வாங்கிக்கொடுத்தான். கூடவே இரண்டு பப்ஸ்சும் வாங்கிக் கொடுத்தான்.

“பாக்கியம் அக்காவைப் பார்க்கனும்” என்று சொன்னான்.

“பாக்கியத்தை ஆஸ்பத்திரியிலே சேர்த்துக்கிறேன்டா. காலையிலே பிரசவமாகிடுச்சு.பொம்பளைப்புள்ளே”

“எந்த ஆஸ்பத்திரியிலே அண்ணே. கூட யாருண்ணே இருக்காங்க” என்று கேட்டான்.டேபிளில் உட்கார்ந்திருந்தவர்களுக்குச் சப்ளை செய்தபடி அவன் கேட்பதற்குப் பதில் சொல்வதில் ஈடுபாடாக இருந்தான். சிகரெட் அட்டையில் கணக்கு எழுதிக்கொண்டான். ஒவ்வொரு டேபிளாகப் போய் என்ன வேண்டுமென்று கேட்டான். சரக்கு வாங்கிக்கொடுத்தான். பீர் பாட்டிலை உடைத்துக்கொடுத்தான். சிப்ஸ் பாக்கெட்டுகளையும் கடலைமிட்டாய்களையும் டேபிளுக்கு சப்ளை செய்தான். கெத்தி அவன் வேலை செய்வதைப் பார்த்தபடி இருந்தான். அவனுக்கு அந்த வேலைப் பிடித்துவிட்டது. தனக்கு இந்த வேலை கிடைத்தால் செய்து கொண்டு இந்த ஊரிலே இருக்கலாமென நினைத்தான்.

தேவராஜ், “வேலைக்கு வந்தியாடா” என்று கேட்டான்.

“இல்லை அண்ணே சும்மாதான் ஒருநாள் இருந்துட்டுப்போகலாமுன்னு வந்தேன். உங்க விலாசத்தை எங்கம்மாதான் கொடுத்துச்சு” என்று சொன்னான். தேவராஜ் அவனது பேச்சை நம்பவில்லை.

“இங்கே வேலை தேடி வந்திருக்கியா” என்று திரும்பவும் கேட்டான்.

“இல்லை இன்னைக்கு சாயங்காலம் வண்டியிலே ஊருக்குப் போயிடுவேன். சும்மாதான் வந்தேன்” என்று சொன்னான்.

“பணம் வைச்சிருக்கியா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் இருக்கு. சும்மாதான் வந்தேன்” என்று மழுப்பலாகச் சொன்னான்.

“சும்மா சொல்லு என்னா விஷயம்?” என்று தேவராஜ் திரும்பவும் கேட்டதும் அவன் தைரியமாக ஊரில் நடந்ததை எல்லாம் சொல்லி அனார்கலியைப் பார்க்கவேண்டுமெனச் சொன்னான். தேவராஜினால் நம்பமுடியவில்லை.

“இத்தூண்டு இருந்துட்டு என்னென்ன வேலை செய்திருக்கா. இங்கே தான் இருக்கா. ஆஸ்பத்திரி உங்க அக்காளுக்குத் துணைக்கு வைச்சிருக்கேன். சாயங்காலத்திற்கு கூட்டிட்டுப்போறேன். அங்கே போய் எதுவும் தகராறு செய்யாதே” என்று சொன்னான். அவனும் சரி அண்ணே என்று நாற்காலியில் அமர்ந்து கொண்டான். பாருக்குள் கூட்டம் சிறிது சிறிதாக கூடத்தொடங்கியது. இப்போது உட்கார்ந்து கொள்வதற்கு இடம் கிடைக்காமல் சிலர் நின்றிருப்பது தெரிந்தது. நேரம் பிற்பகலை கடந்து சென்று கொண்டிருந்தது.

தேவராஜ் தனது செல்ஃபோனை எடுத்துக்கொண்டு டாஸ்மார்க்கை விட்டு வெளியே வாசலுக்கு வந்து நின்று கொண்டான். அவனை இரண்டு பேர் பார்த்துச் சிரித்துக்கொண்டு பாருக்குள் சென்றார்கள். பதிலுக்கு அவனும் சிரித்துக்கொண்டான். அவனது முகத்தில் வெயிலடித்தது.

“அனார்கலி..!நாந்தான் தேவராஜ் பேசுறேன்.உங்கம்மாவுக்கு பணம் அனுப்பனுமின்னு சொன்னேயே. ஊரிலிருந்து சின்னராசு வந்திருக்கான் கொடுத்துவிடவா” என்று கேட்டான்.

பதிலுக்கு அவள், “அய்யோ வேண்டாம் மாமா. அவன் ஃபிராடு. காசை வாங்கிட்டுப் போய் தண்ணியைப் போட்டு படுத்துக்குவான். அவனை ரொம்ப பேசவிடாதீங்க” என்று வேகமாகச் சொன்னவள், யோசித்துவிட்டு “அவன் எதுக்கு இங்கே வந்தான்” என்று கேட்டாள்.

“அதை அவன்கிட்டே கேட்கனும். சாயங்காலம் குழந்தையைப் பார்க்க வருவான். கேளு” என்று சொன்னான்.தேவராஜ் கடைக்குள் சென்று தனது செல்ஃபோனை மேஜைக்கு அடியில் வைத்துக்கொண்டான். டேபிள் டேபிளாகப் போய் சப்ளைக்கு ஆர்டர் எடுத்துக் கொண்டான். புருட்சாலட் தீர்ந்து போய்விட்டது. ஆம்லெட் போட்டுத்தருகிறேன் என்று சத்தமாக யாருக்கோ பதில் சொன்னான். அவன் கடையில் வெறுமனே உட்கார்ந்திருப்பதற்குப் பிடிக்கவில்லை. ஏதாவது வேலை செய்ய வேண்டுமா? என்று தேவராஜிடம் கேட்டான். அவன் கூடையிலிருந்த கொய்யாப்பழங்களையும் ஆப்பிள்பழங்களையும் பொடிசாக நறுக்கி வைக்கும்படி சொன்னான்.சின்னராசு கத்தியை எடுத்து நறுக்கத்தொடங்கினான்.

சின்னராஜ் கூடையிலிருந்த பழங்கள் முழுவதையும் நறுக்கி முடித்த போது மாலை நான்கு மணியாகியிருந்தது. பாருக்குள் கூட்டம் கூடுவதும், குறைவதுமாக இருந்தது.ஒயின்ஷாப்புக்குள் விளக்குகள் எரியத்தொடங்கின.பேருந்துகளின் இரைச்சல் தொடர்ந்து கேட்டது. நறுக்கிய பழங்களைப் பார்த்தான். அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. முதன்முதலாக வேறு வேலை செய்திருக்கிறோம் என்று நினைத்தான். தனது விரல்களைப் பார்த்தான். பழங்களின் துணுக்குகள் ஒட்டியிருந்தது. நாவில் சுவைத்துக்கொண்டான். தட்டிலிருந்த ஒரு பழத்துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். அவனுக்கு டீ தந்தார்கள். வாங்கி குடித்தான்.

தேவராஜ், “புருட்சாலட் ரெடி” என்று குரல் கொடுத்தான். டேபிளில் அமர்ந்திருந்தவர்கள் ஆர்டர் கொடுத்தார்கள்.

“இனி ஆம்லெட் போடுற வேலை கொஞ்சம் குறையும். நீ வேணா வெங்காயத்தையும் மிளகாயையும் நறுக்கிப்போடு” என்று தேவராஜ் அவனைப் பார்த்துச் சொன்னான். சின்னராசு எந்த வேலை வேண்டுமனாலும் செய்வதற்குத் தயாராக இருந்தான். வெங்காயத்தை எடுத்துப்போட்டு நறுக்கத் தொடங்கினான். அவனது கண்கள் எரியத்தொடங்கின. முகத்தை கழுவிக்கொண்டான். மிளகாயை பொடியாக நறுக்கிப்போட்டுக்கொண்ட போது அவனது கண்களிலிருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது. கண்களைத் துடைத்துக் கொண்டான். தேவராஜ் அவனருகே வந்து ஆஸ்பத்திரிக்குக் கிளம்பலாமா என்று கேட்டான். அவனும் சரி என்று எழுந்து கொண்டான்.

[4]

சின்னராசுவும் தேவராஜ்ஜும் ஆஸ்பத்திரிக்குப் போய் சேர்ந்த போது வெயில் முழுவதுமாக சாய்ந்திருந்தது. மருத்துவமனை மலைக்கு மேல் இருப்பது போல தெரிந்தது. அருகில் நிறைய கட்டிடங்கள் இருந்தது. வெள்ளையாக இருந்த மருத்துவமனைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். தரை ஜில்லென்றிருந்தது. அவர்கள் பாக்கியம் இருந்த அறைக்குள் சென்றார்கள். ஒரு அறையின் நடுவே பச்சை நிறத்தில் போர்வையை கட்டித்தொங்கவிட்டிருந்தார்கள். இரண்டு பக்கமும் இரண்டு பெண்கள் தனித்தனியாகப் படுத்திருந்தனர். அவர்கள் இருவருக்கும் குழந்தைப் பிறந்திருக்கிறது என்பதை சின்னராசு நினைத்துக்கொண்டான்.

பாக்கியம் கட்டிலில் படுத்துக்கிடந்தாள். அவளருகே தனியாகத் தொட்டிலில் குழந்தை படுத்திருந்தது. குழந்தைக்கும் பாக்கியத்திற்கு நடுவே அனார்கலி அமர்ந்திருந்தாள். அவள் ஏதோ புத்தகத்தைக் கையில் வைத்து படித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் சின்னராசுவுக்குச் சிரிப்பாக வந்தது. ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தாள். “என்னா அனாரு ஆளே மாறிப்போயிட்டே. சுடிதாரு உனக்கு நல்லவே இல்லை” என்று அவளைப் பார்த்த சந்தோஷத்தில் அவளிடம் சொன்னான்.

அனார்கலி அவனைப் பார்த்ததும் கோபத்துடன் எழுந்து கொண்டாள். அவன் வந்து நிற்பதை பார்க்காதது போல இருந்தாள். தேவராஜ் குழந்தையைப் பார்த்துவிட்டு “டாக்டர் ஏதாவது சொன்னாங்களா” என்று கேட்டார். “டாக்டர் இனிமேல் தான் மாமா வருவாங்க” என்று அவள் பதில் சொன்னாள்.

“என்னா அனாரு நல்லாயிருக்கியா” என்று சின்னராசு திரும்பவும் அவளுடன் பேசினாள். தேவராஜ் கட்டிலின் அருகே சென்று உட்கார்ந்து கொண்டான். அனார்கலி கோபத்துடன் அறையை விட்டு வெளியேறினாள். அனார்கலி தன்னைப் பணம் வாங்க வந்திருப்பதாக நினைத்துக்கொண்டு திட்டுகிறாள் என்று சின்னராசு நினைத்தான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவளருகே சென்று நின்றான். அவள் மேல் மருந்தின் வாசமடித்தது. குளிர்ந்த நீரின் அருகில் இருப்பது போல அவளது முகமும் உடலும் தோல் வெறித்துக் காணப்பட்டது.

சின்னராசு மேலும் நெருங்கியவனாக அனாரின் கையைப்பிடித்துக்கொண்டான். அவளது கன்னத்தில் முத்தமிட வேண்டுமென விரும்பியவனாக முகத்தை நீட்டினான். அவள் புரிந்து கொண்டவளாக விலகிக் கொண்டாள்.

“செருப்பு பிஞ்சு போயிடும் தள்ளி நில்லு. நான் என்ன ரூபாயை வாங்கிட்டு வர்றவள்ளுன்னு நினைச்சிட்டு இருக்கியா. என்னமோ லட்சம் ரூபாய் கொடுத்த மாதிரி நீயும் உங்க ஆத்தாளும் ஊர் ஊராகப் போய் பஞ்சாயத்து செய்யுறிங்க. பத்தாயிரம் ரூபாயை தூக்கி மூஞ்சியிலே விட்டெறிஞ்சிட்டு உன்னையை வைச்சுக்கிறேன்” என்று
சொன்னாள்.

“நான் உன்கிட்டே காசு வாங்க வந்திருக்கேன்னு நினைச்சிட்டீயா. கொடைக்கானலில் உன்னை பார்த்துட்டு அப்படியே இரண்டு மூணு நாள் உன் கூட இருந்துட்டுப்போகலாமுன்னு வந்திருக்கேன்” என்று சொன்னான். அதைக்கேட்டதும் அவளுக்கு மேலும் கோபமாக வந்தது. மிகவும் வேகவேகமாக “அதெல்லாம் வேண்டாம். அதெல்லாம் வேண்டாம்” என்று சொன்னாள். சொல்லிவிட்டு “நீ இப்போதே ஊருக்குப் போ. நான் இங்கே இருக்கிறதை யார்கிட்டேயேயும் சொல்லக்கூடாது. அப்புறம் என்னையை வீட்டு வேலை செய்யுறதுக்கு கூப்பிடுவாங்க” என்று சொன்னாள்.“அப்புறம் என்னைக்குத்தான் இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிறது. நீதான் என்னையை கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னே” என்று அவன் அவளிடம் கேட்டான்.

“நான் உன்னையை கல்யாணம் செய்துக்கிறேன்னு என்னிக்குச் சொன்னேன். நீயா பேசிட்டா அதுக்கு நானா பொறுப்பு”

“நீ தானே ஜீவன் தியேட்டரில் தோளில் சாஞ்சிட்டு சொன்னே. இரண்டுபேரும் கல்யாணம் செய்துக்கலாமுன்னு. மறந்துட்டியா”

“அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லை. நீதான் பொய் சொல்லுறே”

“அப்போ நீ சிலுவையை கல்யாணம் செய்துக்கப்போறயா”

“நான் எந்த வெண்ணையையாவது கல்யாணம் செய்துக்கிறேன். உனக்கெதுக்கு அதெல்லாம்”

“பத்தாயிரம் ரூபாயை நீயே வைச்சுக்கோ அனாரு. நாம் இரண்டு பேரும் கல்யாணம் செய்துட்டு இங்கேயே இருப்போம். எனக்கு அந்த ஊரு பிடிக்கலை. செப்டிங்டேங்க் கழுவுற வேலைக்கு என்னாலே போகமுடியாது அனாரு. இங்கே ஒயின்ஷாப்பிலே எல்லாம் வேலையும் பழகிட்டேன். நீயும் நானும் ஒருவீடு பார்த்து இருப்போம் அனாரு” என்று கெஞசினான்.

“போடா வெண்ணைய். அதுக்கு வேறெ ஆளைப் பாரு. உன் பத்தாயிரம் ரூபாயை திருப்பித்தர்றதுக்குத்தான்டா நான் பாக்கியம் பிரசவத்திற்கு வந்தது.அவள் பீ மூத்திரத்தை அள்ளிப்போட்டது போதாதுன்னு அவள் பெத்த பிள்ளைக்கு இனிமேற்பட்டு பீ மூத்திரம் கழுவி விடனும். அவங்க பணம் கொடுக்கட்டும். நான் உன் மூஞ்சியிலே விட்டெறியிறேன்” என்று சொன்னாள்.

“எனக்கு பத்தாயிரம் ரூபாய் வேண்டாம் அனாரு. நாம் இரண்டு பேரும் கல்யாணம் செய்துட்டு இங்கேயே இருப்போம்” என்று சின்னராசு கண்கள் கலங்கியபடி பேசினான்.அவளுக்கு ஆத்திரமாக வந்தது. நாக்கைத் துருத்தியபடி தனது காலை மடக்கி முழங்காலால் அவனது அடிவயிற்றில் எத்தினாள். அவனுக்கு வலி பொறுக்கமுடியவில்லை. வயிற்றைப்பிடித்துக் கொண்டு வராண்டாவில் உட்கார்ந்து கொண்டான். அவன் இப்போது கண்ணீர் விட்டு அழத்தொடங்கியிருந்தான். மேலும் அனார்கலி அவனது முதுகில் ஓங்கி அடித்துவிட்டு, “அம்மாவும் மகனும் ஊரிலே என்னென்ன பேசினீங்க. இந்த ஜென்மத்திலே ஏங்கிட்டே இருந்து நீங்க பணத்தை வாங்கிருவீங்க. எப்படி வாங்குறிங்கன்னு நானும் பார்க்கிறேன்” என்று இன்னொரு தடவை அவனது முதுகில் அடித்தாள். அவன் அத்தனை அடிகளை வாங்கிக்கொண்டு தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்தான்.

அறையின் உள்ளேயிருந்து தேவராஜ் வெளியே வந்தபோது அனார்கலி ஒன்றும் நடக்காதது போல பாக்கியத்தின் கட்டிலை நோக்கிச் சென்றாள். அவளது கோபம் இப்போது தனிந்திருந்தது. தனது சுடிதாரை சரி செய்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். திரும்பவும் தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து படிக்கத்தொடங்கினாள்.

தேவராஜ் அவனிடம், “பணத்தை தர்றேன்னு சொல்லுறாளா இல்லைன்னு சொல்லுறாளா” என்று கேட்டான்.

சின்னராசு அழுத விழிகளோடு எழுந்து கொண்டான். அவனுக்கு இன்னமும் அடிவயிறு வலித்தது. நிற்கமுடியவில்லை. தேவராஜ் அவனைத்தூக்கிவிட்டு “நான் உங்க விஷயத்திலே தலையிட்டா அப்புறம் கோவிச்சிட்டு அவள் ஊருக்கு போயிடுவா. எனக்கும் என் பொண்டாட்டிக்கு ஒத்தாசைக்கு ஆள் இல்லாமல் போயிடும். இவளுகளை வேற மாதிரிதான் கரெக்ட் செய்யனும்” என்று தேவராஜ் சொன்னான்.அவன் பேசியது எதுவும் அவனது காதிற்குள் விழவில்லை. வலியும் அவமானமும் அவனை தலைக் குனியச்செய்திருந்தது. ஊருக்குப் போனதும் அனார்கலி தன்னைக் காதலிக்கவில்லை. தன்னைத் திருமணம் செய்து கொள்ளமாட்டாள் என்று சொன்னால் தனது நண்பர்கள் எப்படி கேலி செய்வார்கள் என்று நினைத்துக்கொண்டான்.

தேவராஜ் அவனை அழைத்துக் கொண்டு பஸ்ஸ்டாண்டிற்குச் சென்றான். அவனுக்கு இட்டிலியும் காப்பியும் வாங்கிக்கொடுத்தான். சின்னராசுவுக்கு அழுகையாக வந்தது. இனிமேல் தான் எப்படி பணத்தை புரட்டி செல்வராஜ்ஜிற்கு தருவது?. நான்கு மாதங்களுக்கு வட்டி கட்டவேண்டும். யாரிடம் கேட்பது என்று நினைத்தவன். அழத்தொடங்கினான்.

தேவராஜ் “சரி அழாதே.முதலில் நீ ஊருக்குப் போ. அப்புறம் மத்த விஷயத்தைப் பேசிக்கிடலாம்” என்று அவனை சமாதானப்படுத்தினான். பிறகு ஊருக்கு பஸ்ஸேற்றி அனுப்பி வைத்தான். பஸ் நகர்ந்து பேருந்து நிலையத்தை விட்டுச் செல்வது வரை அவன் காத்திருந்தான். பிறகு தனது செல்ஃபோனை எடுத்து அனார்கலிக்கு ஃபோன் செய்து பேசினான்.

“ராத்திரிக்கு என்ன டிபன் வாங்கிட்டு வரட்டும்” என்று தேவராஜ் அவளிடம் கேட்டான். அவள் சொன்னாள்.பிறகு அவளாகவே “என்ன மாமா ஒருமாதிரி பேசுறீங்க. அவன் சொன்னதை நம்பிட்டீங்களா” என்று கேட்டாள். தேவராஜ் ஒன்றும் பேசவில்லை. தான் இந்த விஷயத்தில் தலையிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

அனார்கலி “உங்ககிட்டே நான் பொய் சொல்லமின்னு எனக்கு அவசியமில்லை. நான் அவனை காதலிக்கவுமில்லை. கை நீட்டி பணம் வாங்கவும் இல்லை. எதுக்குத்தான் என்னையை இப்படி சித்ரவதை செய்யுறாங்கன்னு தெரியலை. சிலுவையின்னு ஒருத்தன், ஒருதடவை என்கூட படுன்னு கையைப்பிடிச்சு இழுத்தான். செருப்பாலே அடிச்சேன். இருபதாயிரம் ரூபாயை அவன்கிட்டேயிருந்து கடன் வாங்கினேன்னு ஊரெல்லாம் புரளியை கிளப்பிவிட்டான். கெத்துவும் அப்படித்தான். ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கலாம் வான்னு கூப்பிடுறான். இரண்டும் ஒன்னுதானே” என்று அழுது கொண்டு சொன்னாள். சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தாள். தேவராஜ் எதுவும் பேசவில்லை.

டிபன் வாங்கிக்கொள்ள கடைப்பக்கமாகச் சென்றான். பாக்கியத்திற்கு இட்லியும் அனார்கலிக்கு தோசையும் வாங்கிக்கொண்டுச் சென்றான். தேவராஜ் ஆஸ்பத்திரிக்குச் சென்ற போது டாக்டரம்மா பாக்கியத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தார். டாக்டரம்மா, “நாளைக்கு மூனாவது நாள். வீடு பக்கந்தானே. டிஸ்ஜார்ஜ் செய்யச் சொல்லிறட்டா” என்று கேட்டார். தேவராஜ் சரி என்று சொன்னான்.

இரவு அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது பனினொரு மணிக்கு மேலாகியிருந்தது. டிஸ்ஜார்ஜ் செய்யவேண்டுமென்றால் மீதி பணத்தைக்கட்ட வேண்டும். பணத்திற்கு அவனுடன் வேலை செய்யும் நபர்களிடம் கேட்டிருந்தான். அவர்களிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தான். கட்டிலில் படுத்து உறங்கியவன் விடிகாலை மூன்று மணிக்குத்தான் எழுந்தான். அதுவும் யாரோ கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான். விளக்கைப் போட்டுப் பார்த்தான். வாசற்கதவைத் திறந்துவைத்து எட்டிப்பார்த்தான்.

“அண்ணே என் பெயர் சிலுவை. போடியிலிருந்து வர்றேன். பாக்கியம் அக்கா வீடு இதுதானே”

“ஆமாம் என்னா விசயம்?”

“அண்ணே நான் அனார்கலியைப் பார்க்கணும். என்கிட்டே இருபதாயிரம் ரூபாயை வாங்கிட்டு எஸ்கேப்பாகி ஊரை விட்டு வந்துட்டா. நேத்து சின்னராசுவுக்கு ரூபாய் கொடுத்து செட்டில் பன்னிட்டதா ஃபோனில் சொன்னான். அதான் காரைப்பிடிச்சு கிளம்பிவந்துட்டேன். கூடவே ஆளுகளும் வந்திருக்காங்க” என்று தான் வந்த காரை காட்டினான். காரில் பாபாமுத்துவும் மருதநாயகம் பழனியும் பரமனும் மாரியும் அமர்ந்திருந்தார்கள். தேவராஜ்ஜிற்கு அந்த குளிரிலும் உடம்பு வியர்க்கத்தொடங்கியது.

ஓவியங்கள் : அனந்த பத்மநாபன்