அவன் வெகுதூரம் நடந்திருந்தான். அந்த சிறிய ஊரின் எல்லையைத்தாண்டி, கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மங்களூர் 130 கி.மீ. உடுப்பி 80 கி.மீ என்று பச்சை நிற போர்டில் வெள்ளை எழுத்துகளின் கீழ் நின்றிருந்தான். பாரம் ஏற்றிய லாரிகளும் பெரிய கார்களும் கன்னட,கேரள பதிவெண்களோடு கடந்து கொண்டிருந்தன.அவன் விடுதியில் இருந்து நடக்கத் தொடங்கும்போது நல்ல வெளிச்சம் இருந்தது. இப்பொழுது இருள் தூரத்தே தெரிந்தது. இதற்குமேல் இருட்டில் நடந்தால் தோள் உரசிப் போகும் வாகனங்களை எதிர் கொள்ளவேண்டுமென திரும்பி நடந்தான்.

அவன்தான் அந்த ஊரை தேர்ந்தெடுத்தான்.ஆகும்பே சிரபுஞ்சிக்கு அடுத்ததாக கூடுதலாக மழைபெய்யும் ஊர். ராஜநாகங்கள் அதிகம் வசிக்கும் மேற்குதொடர்ச்சியின் அடிவாரம். ஆர்.கே. நாராயணனின் மால்குடி டேஸ் இங்குதான் படமாக்கப்பட்டது என பல காரணம் சொன்னான். அவள் மறுப்பொன்றும் சொல்லவில்லை.

சென்னையிலிருந்து இரவு ரயிலேறி பெங்களூர். ஷிமோகவுக்கு ஒரு பகல் ரயில். பின் பேருந்தில் ஆகும்பே.

அவள் பெங்களூர் வந்ததிலிருந்து தன் நண்பன் ஒருவருவனுடன் பேசமுடியாத பதட்டத்தில் இருந்தாள். அவளுடைய மொபைல் ரோமிங் காரணமாக முடங்கி இருந்தது. இவனுடைய எண்ணிலிருந்து நண்பனைக் கூப்பிட்டாள். அவன் எடுக்கவில்லை. எரிச்சலோடு இவன் பக்கம் போனை நகர்த்தினாள்.

ஷிமோகா ரயிலில் நல்ல கூட்டம் இருந்தது. அதிகாலை பெங்களூர் குளிரிலிருந்து மெல்ல மெல்ல விலகி, நிலங்கள் கட்டுமானங்கள் வயல்கள் என வெயிலுக்குள் நுழைந்தது. ரயிலுக்குள்ளேயே எளியவர்கள் விற்றத் தடிமனான தோசை கிடைத்தது. மக்களுக்குள் ஒருவித சினேகம் இருந்தது. நிறைய எண்ணெய் வைத்து தலைவாரிய பெண்கள் குழந்தைகள் ஒரு கணம் எல்லோரும் பேச்சை நிறுத்தினால் திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் போகும் ரயிலாக ஏய்த்தது.

இருவருக்கும் ஆறுமாத பழக்கம். முகநூல் அறிமுகம்.இவன் மணவிலக்குக்கு பக்கத்தில் இருந்தான்.அவள் மென்பொருள்காரி.இருவரும் மலையேறுவதற்காகத்தான் பயணம் என்று பேசிக்கொண்டார்கள்.

ஆகும்பேயில் அவர்கள் இறங்கும்போது சூரியன் மலைப்பின்னணியில் விடைபெற்றுக் கொண்டிருந்தான்.ஊரே செம்மண்ணாய் வேறொரு காலத்தில் இருந்தது. அதில் போகும் கார்களே அதை நிகழ்காலத்திற்குக் கூட்டிவந்தது. அந்த பிரதேசமே ஓடுகளால் நிரம்பி இருந்தது. கான்கீரிட் கட்டடங்கள் அவ்வளவு மழையை தாங்காது போலும். கட்டடங்களுக்கு மேல் தகரசெட் போட்டிருந்தார்கள்.

மால்குடி டேஸ் படம்பிடிக்கப்பட்ட கஸ்தூரி அக்கா வீட்டில் தங்கலாம் எனச் சொல்லியிருந்தான். அது அழகியலான புராதான வீடு. விஸ்தாரமாய் கேரள நாலுகட்டு தரவாடாய் அது விரிந்து நின்றது.தடித்த ஒருவர் முன்னால் அமர்ந்திருந்தார். சிடுசிடுப்பாய் இருந்தது அவரது முகம். பெரும்பாலான சமயங்களில் இவர்கள்தான் அன்பானவர்களாக ஆவார்கள். அவனுக்குப் பால்யத்தின் டிடி-யின் மால்குடிடேஸ் நாட்களில் மனம் போய் நின்றது.மொத்த மத்திய அரசுக் குடியிருப்பும் அதன்முன் அமர்ந்திருக்கும்.மறுநாள் காலை அதைப்பற்றியே பேச்சுக்கள் நீளும். இவன் மாத்திரமே அவர்களில் ஆர்.கே. நாராயணனை வாசித்தவன். நிம்மி இவனைப் பார்த்து பிரத்யேகமாய் சிரிப்பாள். இந்த நேரத்தில் நிம்மி ஞாபகம் ஏன் வருகிறது என்று அவனுக்குத் தோன்றியது. இருவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

மேலே தங்குமிடம் என்றார்கள்.விசாலமான மர மாடிப்படிக்கட்டுகளில் ஏறிப் போனார்கள். பெரிய அறைகள். கொஞ்சம் தூசியாய் இருந்தது. பொது குளியலறை கழிப்பறை என்றார்கள். குளியலறைக் கல்பாவி நீண்டிருந்தது. வெளியே விறகுவைத்து உள்ளே அண்டா சூடாகும் ஏற்பாடு. அவள் இங்கு தங்கவேண்டாம் என்றாள். ‘எனக்கு தனியா பாத்ரூம் டாய்லெட் வேண்டும்’ என்றாள். இவனுக்குக் கீழே போய் என்ன சொல்வதென்று தெரியவில்லை. மறுபடியும் கேட்டுப் பார்த்தான். கடுமையான பதில் வந்தது. இவர்கள் பையைத் தூக்கிக்கொண்டு கீழே வர அவர்கள் எதுவும் கேட்கவில்லை.சத்தம் கீழே கேட்டிருக்க்க்கூடும். எதிரே ஒரு ஹோம்ஸ்டே உள்ளது; தங்கள் உறவினர்களுடையதுதான் என்றார்கள். சாதாரணக் கான்கிரீட் வீடு.

குளித்து உடை மாற்றி சாப்பிடப் போனார்கள். எட்டு மணிக்கெல்லாம் உறங்கிவிடும் ஊர்போல. ஒரு சிறிய உணவகத்தில் பாதிக் கதவை அடைத்திருந்தார்கள். கடைக்காரர் கல்லாப்பெட்டியில் அமர்ந்து பணத்தை
எண்ணிக்கொண்டிருந்தார். இவன் சாப்பிட ஏதாவது இருக்குமா என்றான். இருவரையும் ஒருகணம் நிமிர்ந்து பார்த்தார். ஒரு நிமிடம் என்பதுபோல் சைகை செய்தார். ஒரு மராத்திய ஆங்கிலத்தில் ‘கூட்டு காய்கறிகள் குறைவாயிருக்கிறது.பரவாயில்லையா?’ என்றார். இவன் புன்னகையுடன் ‘ஒரு பிரச்சனையும் இல்லை’ என்றான். பக்கத்திலேயே நின்று உபசரித்தார். இரண்டு முறை நெய் விட்டார். ‘நாளை வாருங்கள். நல்லா சாப்பிடலாம்’ என்றார்.

அவளிடம் ஒருவித எரிச்சல் இருந்தது. விடாது அவள் நண்பனின் எண்ணை தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டே இருந்தாள். கிடைத்தால் அவனையும் நாளைக்கு மலையேற வரச்சொல்லலாம் என்றாள்.இவன் பதிலேதும் சொல்லவில்லை.

இருள் ஊரின்மீது ஒரு கனத்த கம்பளியை இழுத்துவிட்டிருந்தது. மே மாதத்திலும் குளிர்ந்தது. கொஞ்ச தூரம் நடக்கலாம் என்றான். மின்மினிகள் பறந்தன. வெகுதூரத்தில் வெளிச்சம் தெரிந்தது.கொஞ்ச தூரம் நடந்தார்கள். அவள் திரும்பிப் போகலாம் என்றாள்.

மலை எருமைத் திமிலாய் கூடவே வந்தது. அவள் கையைப் பிடித்தான். அவள் பதிலுக்குப் பிடிக்கவில்லை. இவன் மாத்திரமே பிடித்திருந்தான். சற்று நேரத்தில் கனக்கத் தொடங்கியது. அவள் கையை விடுவித்தான்.

ஹோம்ஸ்டேக்கு திரும்பினார்கள்.ஊர் முதல் சாமத்திலிருந்தது. உரிமையாளர் ’இப்படி இருட்டில் போகாதீர்கள்; நிறைய பாம்புகள் நடமாடும் நேரம்’ என்றார். கஸ்தூரி அக்கா வீட்டில் இன்னும் விளக்கெரிந்தது. வெகுதூரம் செல்லும் அலுப்போடு கார்கள் சத்தத்தோடு விரைந்தன.போலீஸ் செக் போஸ்டில் மாத்திரம் அனக்கம் தெரிந்தது.

இவன் அவள் சொல்லி வாங்கிவரச் சொன்ன பிரத்யேக ஒயினை எடுத்துவைத்தான். அவள் இன்றைக்கு வேண்டாமென்றாள். மறுநாளுக்கு மறுநாள் பெங்களூரிலிருந்து ரயிலேறுவதாய் திட்டம்.

‘நீ தூங்குறதுன்னா தூங்கு. நான் கொஞ்ச நேரம் படிக்கிறேன்’ என்றாள். இவன் இரவு உடைக்கு மாறிப் படுத்தான். எப்பொழுது தூங்கினான் என்று தெரியவில்லை.

விழிப்புத் தட்டியபோது அவன் மேல் அவள் இருந்தாள். இவன் பெரிதாய் இயங்குவதற்கான சாத்தியம் இல்லை. தலை தூக்கி அவள் மார்பை கவ்வ முயற்சித்தால் கழுத்து மிகவும் வலித்தது. அவளை கீழே இறங்கச் சொல்லலாம் என்றால் கனமாய் அழுத்தமாய் மேலே அமர்ந்திருந்தாள். லேசாய் அணங்கினான். அவள் ‘ம்ஹூம்’ என மறுத்தாள். தலைவிரிகோலமாய் அவள் ஆவேசமாய் அவன் இடுப்பின் மீது இயங்கினாள். இவன் கைகள் அவன் உடம்பில் துழாவின. ஒருவழி போக்குவரத்து என்றொரு வார்த்தை மின்னி மறைந்தது.இவன் அக்கணத்தில் தன்னை ஒரு பார்வையற்றவனாக முடவனாக கருதிக்கொண்டான்.அவள் இயங்கி இயங்கி சோர்வுற்றாள். இவன் நீர்த்திருந்தான். இறங்கிப் படுத்தாள்.நிலவு அவள் மேல் பட்டது. ஒரு கோட்டுச் சித்திரமாய் அவள் தெரிந்தாள்.

காலை இருவரும் அதுபற்றி பேசிக்கொள்ளவில்லை. ’இந்த ஊர் மலையில் நிறைய அட்டையாமே?’ என்றாள். இவன் ஆமென தலையாட்டினான். ‘அப்போ மலையேறவேண்டாம். வேறெங்காவது போகலாம்’ என்றாள்.

ஆட்டோ வைத்துக்கொண்டு ஒரு கைவிடப்பட்ட கோட்டைக்குப் போனார்கள். ஆட்டோக்காரரே கைடும் கூட.வரலாறு, புனைவு இரண்டையும் கலந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

”அந்த ராணி யாருக்கும் அடங்கமாட்டாளாம்.அவளை ஒரு நாள் பக்கத்து நாட்டு ராஜா முற்றுகையிட்டுத் தன்னோட நாட்டுக்கு இழுத்துட்டுப்போயிட்டான். அங்க அந்தப்புரத்துல போகத்தின் உச்சத்துல அவன் குறியை அறுத்துட்டு அதோட இங்கே வந்து குதிச்சிட்டா”

அவள் ஆர்வமாய் கதை கேட்டுக்கொண்டிருந்தாள். இவன் அந்தக் குறி வீசப்பட்ட பூமியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.கோட்டையிலிருந்து தரையிறங்கும்பொழுது ஆட்டோக்காரர் சரக்கென வண்டியை நிறுத்தினாள்.மஞ்சள் பூசிய நரைத்த பெண்மணி காலை வெயிலில் அமர்ந்திருப்பது போல மின்னிக்கொண்டு பாம்பொன்று ஊர்ந்துபோனது.“உங்களுக்கு பாக்கியம் சார். ராஜ நாகத்தையே பார்த்துட்டீங்க. பல பேர் அதுக்குன்னே வருவாங்க. பார்க்கவே முடியாது”

மதியத்திற்கு மேல் தான் அறைக்குத் திரும்பினார்கள்.தனக்கு சாப்பாடு வேண்டாம் பழம் மாத்திரம் போதும் என்றாள். உணவகத்தில் உரிமையாளர் ‘வீட்ல வரலையா?” என்றார். இவன் வெறுமனே தலையாட்டினான்.

வெயில் ஆகும்பேவிலிருந்து விலகிக்கொண்டிருந்தது.கஸ்தூரி அக்கா வீடு பரபரப்பாய் இருந்தது. நிறைய
விருந்தினர்கள். பல கோணங்களில் அந்த வீட்டை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.இருவரும் அமைதியாக கட்டிலில் உட்கார்ந்திருந்தார்கள். அவள் தலையைத் திருப்பாமலேயே “என் ஃபிரண்ட் வர்றான். நைட் இங்கே ஸ்டே பண்ணட்டும். இல்லேன்னா ஒரு ரூம் வேணும்னு இங்கே சொல்லிரு” . இவன் பதிலேதும் சொல்லவில்லை. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. எழுந்தான். அறையில் இருக்கும் மண்கூஜாவை நோக்கி ‘கொஞ்சம் தூரம் நடந்துட்டு வர்றேன்’ என்றான்.

போலீஸ் பூத்தில் யாரையே நிறுத்தி விசாரித்துக்கொண்டிருந்தார்கள். ஹோம்ஸ்டேயைத் தாண்டி நடந்துகொண்டிருப்பதை இப்பொழுதுதான் உணர்ந்தான். அறைக்குள் நுழைந்தபொழுது ஒயின் மணம் வீசியது. ஒயினை பூசிக்கொண்டால் உடம்பு பளபளப்பாகுமென தோழி சொன்னதால் பூசிக்கொண்டேன் என்றாள். கால் குப்பிக்கும் கீழே இருந்தது.‘நீ வேணா இதைக் குடிச்சிடு’ என்றாள்.

துவர்ப்பாய் இருந்தது.காலிபாட்டிலைக் கவருக்குள் பத்திரமாக வைத்தான். ஹோம்ஸ்டேகாரர்கள் குடிக்கு அனுமதி இல்லையென அழுத்திச் சொல்லி இருந்தார்கள்.அவள் நண்பன் வரவில்லை என்றாள்.நாளை பெங்களூரில் சந்திப்பதாய் சொல்லியிருக்கிறான் என்றாள்.டேபிள் முழுக்க ஆரஞ்சுப் பழத் தோல்களாக இருந்தது.

சீக்கிரமே விளக்கணைத்தார்கள்.கஸ்தூரி அக்கா வீட்டு விளக்கின் வெளிச்சம் இவர்கள் அறைக்கு நடுவே ஒரு மஞ்சள் துண்டை விரித்திருந்த்து. ஒரு நாய் இடைவிடாது குலைத்துக்கொண்டிருந்தது. மலை தன் ஆதித் தன்மைக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

இவன் மெதுவாய் அவள் மேல் கைவைத்தான். சடக்கென எழுந்தாள். ‘’எனக்கு வேண்டாம்” என்றாள். ஜன்னல் அருகே போய் நின்றாள்.வெகுநேரம் நின்றுகொண்டிருந்தாள்.மறுபடி வந்து கட்டிலின் விளிம்பில் புரண்டுபடுத்தாள். அதிகாலை சிறுநீர் முட்ட எழுந்தவன் அந்தப் பக்கம் கீழிறங்க முற்பட அவள் மீது கால்படக் கோபத்தோடு எழுந்தாள். “நான் தான் வேணாம்னு சொல்றேன்ல” என்று சத்தமாய் சொன்னாள்.அறைக்கதவை திறந்துவைத்தாள்.அங்கு மற்ற அறைக்காரர்களும் புழங்கும் பொதுப்பகுதி.நடுஇரவில் அந்தக்குழு வந்திருக்கவேண்டும்.வடக்கத்திக் குழு.அவர்கள் அறையிலும் வெளியிலுமாகப் படுத்திருந்தார்கள்.அதில் ஒருவன் உறங்காது தன் கிதாரை வருடிக்கொண்டிருந்தான். இவளைப் பார்த்து ‘ஹாய்’ என்றான்.இருவரும் பேசத் தொடங்கினர்.ஆகும்பேவின் தட்பவெட்பம் இன்னபிற இன்னபிற…இவனுக்கு அவமானமாய் இருந்தது.ஒரே ஒரு முறை அவன் கண்களும் இவன் கண்களும் சந்தித்துக்கொண்டன.இவனை துச்சமென கருதும் பாவமொன்று கண நேரத்தில் அந்தக் கண்களில் தென்பட்டது.திறக்கப்பட்டக் கதவு அடைக்கப்படவே இல்லை.

வெயில் ஆகும்பேயின்மீது மெதுமெதுவாய் படர இவர்கள் பேருந்து புறப்பட்டது. இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. சாப்பிட்டார்கள்.கழிவறை போனார்கள்.மறுபடி பேருந்து.பெங்களூர் வந்து சேர மாலையாகிவிட்டது.நண்பன் டாக்ஸி ஸ்டாண்ட் அருகே நிற்கிறான் என ரயில் நிலைய வாசலில் வைத்து விடைபெற்றாள்.

பதினோரு மணிக்குத்தான் ரயில்.இருவருக்கும்தான் முன்பதிவு செய்திருந்தான். சப்வே வழி நடந்தான்.நிறைய அழகான திருநங்கையர்கள் எதிர்பட்டார்கள். யாரோ “ஞாயிற்றுக்கிழமையல்லவா? அதான் நிறைய பேர்” என சொல்லிக்கொண்டு போனார்கள். கைதட்டிக் கூப்பிட்டார்கள். இவன் மெதுவாய் நடந்து தண்டவாளங்களைக் கடந்து எட்டாம் பிளாட்ஃபாரம் போய்ச் சேர்ந்தான். ரயில்கள் வந்தவண்ணம் போனவண்ணமாய் இருந்தன. பெயர் தெரியாத ஊர்கள். வரைபடத்தில் மாத்திரமே பார்த்த ஊர்கள். சேலம் வழி போகும் ரயில் நோக்கி பெரும் தமிழ்க்கூட்டம் ஓடியது.எல்லோர் தலையிலோ கையிலோ சாக்குமூட்டைகள். மென்பொருளாளர்கள் தண்ணீர் பாட்டிலோடு நிதானமாய் நடந்துபோனார்கள்.ரயில் நிலையம் அலுப்பில்லாமல் காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருந்தது.அவனுக்கு ஆசுவாசமாகவும் லேசாக சந்தோஷமாகவும் இருந்தது.பதட்டமில்லாமல் உணர்ந்தான். சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் முதன்முறையாக அப்படி உணர்ந்தான்.இந்த ரயில் நிலையத்தில் இப்படி விச்ராந்தியாய் உட்காரத்தான் இந்தப் பயணமோ என்னவோ எனத் தோன்றியது.மணி பார்த்தான். பத்து நாற்பது. தண்ணீர் பாட்டில் வாங்கலாம் என கடையைத் தேடினான். செல்போன் விளித்தது. அவள்தான்.

“எத்தனை மணிக்கு வண்டி?”

“பதினோரு மணிக்கு”.

“நானும் வர்றேன் உன்கூட.இவனுக்கு இங்கே ஏதோ அவசர வேலையாம். நைட்டே ஹூப்ளி கிளம்புறானாம்.”

”சரி” என போனை வைத்தான்.

இரு காதுகளிலும் தோடு அணிந்த நண்பனோடு வந்தாள்.இவன் எதிர்ப்பார்த்ததுபோல் அல்லாமல் மிக இயல்பாக இவனுடன் பேசினான். “வீடு ரொம்ப தூரம். இல்லேன்னா உங்களையும் ட்ரிபிள்ஸ் கூட்டிட்டுப் போயிருப்பேன்” என்றான்.

அவனுடைய கார்டை கொடுத்தான்.“அடுத்த முறை பெங்களூர் வரும்போது கண்டிப்பா கூப்பிடுங்க” என்றான்.

வண்டி பிளாட்பாரத்தை பின்னுக்குத் தள்ளி புறப்பட்டது. நாமம் போட்ட டிடி-இ இருவரையும் உற்றுப் பார்த்தார்.ஐடி கேட்டார்.அவள் இவன் பக்கம் திரும்பி நமக்கு என்ன பெர்த் என்றாள்.ஒரு அப்பர், ஒரு மிடில் என்றான். ”அப்ப நான் அப்பர் எடுத்துக்குறேன்” என்றவாறு தன் பையை திறக்க ஆரம்பித்தாள்.