அனன்யாவுக்கு ஐந்து வயதுதானிருக்கும். பிடரியில் புரளும் தலைமுடி. காதில் நீல நிறத்தில் மயில் தோகை போன்று ஜிமிக்கி. கழுத்தில் முத்துமாலை. ஜட்டி மட்டுமே அணிந்திருந்தாள்.ஈரமணலைப் பிஞ்சுக் கைகளால் அள்ளி அள்ளி கோபுரம் கட்டுவதில் மும்முரமாக இருந்தாள். அவ்வப்போது ஓசையுடன் கரைவந்து தொடும் அலைகளை அச்சத்துடன் ஏறிட்டுப் பார்ப்பதும் மீண்டும் கோபுரத்தை எழுப்புவதுமாக இருந்தாள். சிவந்த நாக்கை மடித்துக்கொண்டு இப்படியும் அப்படியுமாகத் தலையசைத்து மணலை அள்ளி அள்ளி மெத்திக்கொண்டிருந்தாள்.அலை தொடாத தொலைவில் கோபுரம் கம்பீரமாக எழுந்து கொண்டிருந்தது.
உள்ளுக்குள்ளிருந்து எல்லாவற்றையும் அள்ளி வெளியே கொட்டிவிட்ட நிறைவுடன் மது அந்தச் சிறுமியின் காரியத்தை கவனித்துக் கொண்டிருந்தாள். மழைக்குப் பிறகான பொழுதின் இதமும் ஆளரவமற்ற கடற்கரையின் ஏகாந்தமும் அவளைச் சாந்தப்படுத்தியிருந்தன. சென்னைக்கு போகும் பாதையில் சற்றே உள்ளடங்கின கடற்கரைப் பகுதி. சற்றே மேடான பகுதியில் ஏறி இறங்கினால் அலைகொஞ்சும் கரை. மேட்டுச் சரிவில் தென்னைகள் அடர்ந்த தோப்பு.
கைகளைத் தட்டிக்கொண்டு அனன்யா எழுந்தாள். கட்டி முடித்த கோபுரத்தைச் சுற்றி வந்து பார்த்தாள்.அங்கங்கே சிறு திருத்தங்களை செய்தாள். அவளது கால்களிலும் வயிற்றிலும் மணல் ஒட்டிக் கொண்டிருந்தது. அங்கங்கே கண்ணில் பட்ட சங்குகளையும் சிப்பிகளையும் பொறுக்கி எடுத்து வந்து கோபுரத்தில் பதித்தாள்.
“என்னப்பா ஒண்ணுமே பேச மாட்டேங்கறே?”
முத்தரசு அவள் முகத்தைப் பார்த்தான்.முகம் தெளிவாக இருந்தது. அனன்யாவின் குதூகலம் அவளது முகத்திலும் ஒட்டிக்கொண்டிருந்தது. சிரிப்புடன் ஒளிரும் கண்களும் கன்னக்கதுப்புகளும் வசீகரிக்கும் கீழுதடுமாய் அத்தனை நெருக்கத்தில் அவளைப் பார்க்கும்போது சரவணனின் மீது பொறாமை கிளர்ந்தது.
“நீ எடுத்துருக்கறது நல்ல முடிவுதான் மது.டைவர்சுக்கு அப்பறம் என்ன பண்ண போறேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். பரவாயில்லை. லேட்டுன்னாலும் நல்ல முடிவாத்தான் தோணுது. சரவணன் நல்ல சாய்ஸ்தான்” என்றவன் அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை என்பதைக் கவனித்தான். அவள் அனன்யாவின் கோபுரத்தையே வியந்திருந்தாள்.
“மது.இப்ப உன்கிட்ட சொல்றதுல எனக்கு கூச்சமில்லை” என்று நிறுத்தினான். என்ன சொல்லப் போகிறான் என்பதுபோல முகத்தைப் பார்த்தாள்.
“எனக்கும் உம்மேல ஆசை இருந்துச்சு. ஒருநாள் நீ எனக்கு கெடைப்பேன்னு கணக்குப் போட்டுட்டுத்தான் இருந்தேன். சாரி. ஆம்பளை புத்தி. இவ்வளவு ஓபனா நீ என்கிட்ட பேசினதுக்கப்பறம் நான் இதை சொல்லாம இருந்தா நல்லாயில்லே. அதான். சாரி மது” என்று அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.
அதைக் கண்டுகொள்ளாதவள்போல மது உதடுகளைச் சுழித்து உச்சுக் கொட்டினாள்.
“ம். என்னடா இவன் ரொம்ப நல்லவனாவே இருக்கான்னு எனக்கும் சந்தேகமாத்தான் இருந்துச்சு. குட். உனக்கும் அந்த சபலம் இருந்துருக்கு. சொல்லிட்டியே. இட்ஸ் ஓ.கே. ஆனா எனக்கு உம்மேல அப்பிடியொரு ஐடியா வரவேயில்லை முத்து. என்ன இருந்தாலும் நீ போலீஸ் இல்லியா?”
“உன்கிட்ட நான் எப்பவாவது போலீஸ்காரனா நடந்திருக்கேனா மது?”
“சே. சும்மா சொன்னேன். விடு” என்றவள் கைகளை விடுவித்துக்கொண்டாள்.
அவளது பார்வை கோபுரத்திலேயே இருந்தாலும் கைகள் அனிச்சையாக பக்கத்தில் கிடந்த சங்குகளை பொறுக்கிச் சேர்ப்பதில் முனைந்திருந்தது.
“எம் மேல கோவமோ வருத்தமோ இல்லையே முத்து.”
“நத்திங். சொல்லப்போனா நீதான் கோவிச்சுக்கணும்” என்றான் அழுத்தமாக.
பளீரென்று சிரித்தாள். “போலீஸ்காரன் புத்தி. போடா” என்றபடியே சங்குகளை அள்ளிக்கொண்டு அனன்யாவை அழைத்தாள். உற்சாகமாக ஓடி வந்து இரு கைகளையும் சேர்த்து நீட்டி வாங்கிக்கொண்டாள். ‘ஏய்‘ என்ற கூச்சலுடன் தடுமாறி ஓடி சங்குகளைக் கொண்டு கோபுரத்தை அலங்கரிக்கத் தொடங்கினாள்.
“உங்கிட்ட அந்த மங்கையைப் பத்தி சொல்லணும். அந்தப் பொம்பளைய நீ பாக்கணும் முத்து. நானே விழுந்துட்டேன்னா பாரேன். பாத்தா என்னவோ பக்கத்தாத்து மாமி மாதிரிதான் இருக்கா. ஆனா பார்வையும் பேச்சும் புத்தியும் அடேங்கப்பா. கண்ணைப் பாத்து பேசவே முடியலை முத்து. என்னவோ வசியம் பண்ணினா மாதிரி. அழுகை பொத்துண்டு வருது. என்னென்னவோ பண்ணுது. அம்மாடி. பத்து நாள் இருந்தான்னு நெனக்கறேன். நான் ஒரேயொரு தடவைதான் பாத்தேன். மறுபடியும் பாக்கணும்ங்கற மாதிரியும் இருந்துச்சு. ஆனா பயமா இருந்தது.”

அவள் முன்னங்கை ரோமங்கள் சிலிர்த்துப் புள்ளியிட்டதை பார்க்க முடிந்தது.
“எனக்குத் தெரிஞ்சு உன்னைய மாதிரி ஒரு அழுத்தக்காரி இருக்கவே முடியாது. உன்னையே ஒரு ஆள் அசைச்சுப் பாத்திருக்குன்னா பெரிய விஷயந்தான்” என்று சிரித்தான்.
அவள் முறைத்தாள். அதே சமயத்தில் அனன்யா ‘அப்பா இங்க பாருப்பா..” என்று கூச்சலிடுவது கேட்டது. கோபுரம் சங்குகளோடும் சிப்பிகளோடும் கம்பீரமாக நின்றிருக்க அவள் சற்றுத் தொலைவில் விலகி நின்றிருந்தாள். அலைகள் இப்போது விரிந்து விரிந்து கோபுரத்தினருகே வரத் தொடங்கியிருந்தன. கண்கள் விரிய அலைகள் கோபுரத்தைத் தொடும் அத்தருணத்திற்காக அவள் காத்திருந்தாள்.
“மது போலாமா?” என்று எழுந்தவனை கையைப் பற்றி உட்காரச் செய்தாள்.
“இருப்பா. இங்க பாரு. உம் பொண்ணு அழுத்தமா? கடலலை அழுத்தமான்னு ஒரு போட்டி நடந்திட்டு இருக்கு. பாத்துட்டு போலாம்.” முழங்கால்களைக் கட்டி தலையை சாய்த்துக்கொண்டாள்.
கோபுரத்தைத் தொட்டுவிடுவது போல அலைகள் வருவதும், அருகில் வருவதற்குள்ளாக வடிந்து தணிவதுமாக போக்குக் காட்டிக்கொண்டிருந்தன. அனன்யா ஒவ்வொரு முறையும் கைகளைத் தட்டி ஏய் ஏய் என்று குரலெழுப்பிக் கொண்டிருந்தாள். இப்போது ஒரு பெரிய அலை. இதன் வீச்சையும் வேகத்தையும் பார்க்கும்போது கட்டாயம் அது கோபுரத்தை எட்டிவிடும் போலிருந்தது. மதுவும்கூட தலையை நிமிர்த்திக்கொண்டாள். அனன்யா இப்போது எழுந்து நின்றாள். ஓடத் தயாரானவள் போலக் கால்களை ஊன்றிக்கொண்டு நின்றாள். புரண்டு புரண்டு அலை வந்தது. ஓசையுடன் சீறிக்கொண்டு மேலேறியது. நிச்சயம் அது மணல் கோபுரத்தை எட்டிக் கரைத்துவிடக் கூடும். அவள் ஓடினாள். கோபுரத்தை நோக்கி, கோபுரம் நோக்கி சீறி வந்த அலைகளை நோக்கி. என்ன செய்யப் போகிறாள்? அலைகளைத் தன் சின்னக் கைகளைக்கொண்டு தடுத்து நிறுத்தப் போகிறாளா? அல்லது சீறி வரும் அலைகளிலிருந்து தன் சின்ன கோபுரத்தை தற்காத்துக் கொள்ளப் போகிறாளா? தாவி ஓடும் அவளது பாதங்களை மணல் வெளி முத்திரையாக்கிக் கொண்டது. அலைகள் மேலேறிப் பாய்கின்றன. அவளும் தாவி ஓடுகிறாள். கோபுரத்திற்கும் அலைகளுக்குமான இடைவெளி கொஞ்சம்தான். நொடியில் அது கோபுரத்தைக் கலைத்துவிடக் கூடும். சிறுமி காற்றில் எம்பித் தாவினாள். ஓவென்று கத்தியபடி ஜங்கென்று கால்களை நீட்டிக்கொண்டு குதித்தாள். சரியாக கோபுரத்தைக் கலைத்துக்கொண்டு பாதங்கள் மணலில் சரிந்தன. அலைகளும் அவள் பாதங்களைக் கழுவியபடி மோதின. அந்த ஒரு கணத்தில் அனைத்துமே உறைந்ததுபோல இருந்தது. மதுமதிக்குள் ஆயாசமும் பெருந்துக்கமும் கவிந்தன. முகம் வாடியது.
“நான் ஜெயிச்சுட்டேன். நான் ஜெயிச்சுட்டேன்” என்று அனன்யா கூவியபடியே அலைகளைத் துரத்திக்கொண்டு ஈரமணல் வெளியில் துள்ளிக்கொண்டு ஓடவும், மது பளிச்சென்று சிரித்தாள். எழுந்து நின்றிருந்த முத்தரசுவின் கையைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். புடவையிலிருந்த மணலைத் தட்டிவிட்டபடியே நடக்கலானாள்.
“நான் ஜெயிச்சுட்டேன் நான் ஜெயிச்சுட்டேன்” என்றபடியே அனன்யா ஓடிவந்து மணல் ஒட்டிய கைகளால் முத்தரசுவின் கையைப் பற்றிக்கொண்டாள். மது அனன்யாவின் குரலைத் தனக்குள் பத்திரப்படுத்திக்கொண்டாள்.
o
தீர்க்கப்படாத வழக்குகளால் நிறைந்ததோ இந்த உலகம் என்பதுபோல பத்துமணி வாக்கிலேயே நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் இருந்தது. வடக்கு மூலையில் புதிதாக “நீதி விநாயகர்“ அருட்பாலித்துக் கொண்டிருந்தார். வண்டிக்கடையில் இட்லியும் ஆப்பமும் சுறுசுறுப்பாக காலியாகிக் கொண்டிருந்தன. மகாதேவன் இலையில் மிஞ்சிய சாம்பாரை சட்னியுடன் கலந்து விரல்களால் வழித்து நக்கிக் கொண்டிருந்தான். ருசியின் தீவிரம் அவனது நெற்றியில் வேர்வையாய் வழிந்திருந்தது. சோமசுந்தர வாத்தியார் போர்த்தியிருந்த நூல்வேட்டியைச் சரிசெய்தபடியே மகாதேவனையே உற்றுப் பார்த்தார். ஒருகணம் அவன் மீதான கோபமும் எரிச்சலும் அடங்கி பரிதாபம் மேலிட்டது. இவனைச் சமாளிப்பதுதான் எத்தனை சுலபம். வேளாவேளைக்கு நாக்குக்கு ருசியாய் தட்டில் போட்டுக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் போதும். வேறெந்த நோக்கும் போக்கும் அவனுக்கு இல்லை. சரணடைந்து கிடப்பான். இந்த மட்டிலுமாவது மது அவனைப் புரிந்துகொண்டிருந்தால் இருவருமே அனுசரித்து இருந்திருக்கலாம். இங்கே வந்து நின்றிருக்க வேண்டாம்.
“வக்கீல் எங்க இருப்பார் வாத்யார்” வாயைத் துடைத்தபடியே வந்த மகாதேவன் ஆர்வத்துடன் கேட்டான். பதில் சொல்லாமல் நடந்தவரைப் பின்தொடர்ந்தான். அவன் கண்கள் பரபரவென்று யாரையோ தேடியபடியே இருந்தன.
குடும்ப நீதிமன்றம் இருந்த கட்டிடத்தின் பக்கவாட்டு வராந்தாவில் யாரும் இருக்கவில்லை. ஓரத்திலிருந்த பெஞ்சில் உட்கார்ந்ததுமே அவனிடம் கேட்டார்.
“உன்னோட எண்ணத்திலே எந்த மாத்தமும் இல்லையே. தீர்மானமா இருக்கியோல்லியோ?”
மகாதேவன் யோசிப்பது போல வாதநாராயண மரத்தின் கிளைகளைப் பார்த்தான். கனத்த காலடிச் சத்தத்துடன் நடந்துபோன வக்கீல் குமாஸ்தாவின் கையிடுக்கிலிருந்த கேஸ் கட்டுக்களை நோட்டமிட்டான்.
“இல்ல வாத்யார். யோசிக்கறதுக்கோ மாத்திக்கறதுக்கோ ஒண்ணுமே இல்லை.”
“நல்லது மாதேவா. ஏன்னா நாம போடற கணக்கு ஒண்ணா இருக்கும். பகவான் போடற கணக்கு வேற மாதிரி இருக்கும். அதான் கேட்டேன்.”
உள்ளுக்குள் வேறு என்னவோ குழப்புகிறது அவரை. ஆனால் அதை விடுத்து வேறு என்னத்தையோ பேசிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் மகாதேவனுக்குப் புரிந்தது. கொஞ்ச நாட்களாகவே அவரது போக்கு வேறுமாதிரியாகத்தான் இருக்கிறது. பாவம் அவரும் ஒண்டிக்கட்டை. என்ன கஷ்டமோ?
“பாகவதர் அண்ணா, மத்தவா எல்லாம் மகாராஷ்டிரா போயிட்டாங்க. இல்லேன்னா இந்த சேதிய அவங்ககிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா. அண்ணாவுக்குத்தான் இதப் பத்தி பேச்செடுக்கறதே பிடிக்கலை. எரிஞ்சு விழறார். இந்த எடம்னு இல்லேங்கறதாலே போன்லயும் பேசவே முடியலை.” மகாதேவன் சொன்ன நொடியில் அவரது மனம் திடுக்கிட்டது.
சிதம்பரத்திலிருந்து காஞ்சிபுரத்துக்குப் போன கையோடு புனேவுக்கு புறப்பட்டுபோன விஷயம் வாத்தியார் அறிந்ததுதான். அன்றிரவு அவரைக் கடந்து சென்ற ஆட்டோவிலிருந்து எட்டிப் பார்த்த மங்கையின் முகத்தை மீண்டும் பார்க்கும் துணிச்சல் அவருக்கிருக்கவில்லை. ஆனால் வியாச பாகவதர் சிதம்பரத்திலிருந்து புறப்படும் நாளன்று வீட்டுக்கு வந்து விடைபெற்றுப் போனார். நல்லவேளையாய் அவளை அழைத்து வரவில்லை. ஒரு வகையில் அவர்கள் அங்கிருந்து போனது அவருக்கு ஆசுவாசத்தைத் தந்தது.
இப்போது அவரது மனம் அந்த இருட்டில் மங்கலான தெருவிளக்கின் வெளிச்சத்தில் மூக்குத்தி சுடர் மின்னலுடன் கண்ட அவளது முகத்தை மீட்டுக்கொள்ள முயற்சித்தது.
வக்கீல் குமாஸ்தா அவசரமாக வாத்தியாரிடம் வந்தான். “சாமி, அவா வந்துட்டாளா? ரெடியா இருக்கச் சொல்லி ஐயா சொன்னாரு.”
வாத்தியார் நிமிர்ந்து பார்த்தார். ஆட்கள் பரபரப்புடன் விரைந்தபடியிருக்க கருப்புக் கோட்டுகள் காற்றில் பறக்க வக்கீல்கள் கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாய் யோசனை மிகுந்த முகத் தோற்றத்துடன் நெற்றிச் சுருக்கங்களுடன் கடந்து போனார்கள். சரவணனும் மதுவும் தர்க்கம் செய்தபடியே வந்துகொண்டிருக்க, சற்று பின்னால் மதுவின் அம்மாவும் அப்பாவும் எப்போதைக்குமான விசன முகத்துடன் தொடர்ந்திருந்தார்கள்.
வாத்தியார் எழுந்து அவர்களை நோக்கி நடந்தார். மகாதேவன் போகலாமா வேண்டாமா என்ற யோசனையுடனே தயங்கினான். மதுவின் உருவத்தைப் பார்த்ததும் மனம் படபடத்தது. எத்தனை நாட்களுக்குப் பிறகு பார்க்கிறான். இந்த நொடியில் இப்போதும் இவள் என் மனைவிதான். எனக்கானவள்தான். அந்த எண்ணமும் அவள் தோற்றமும் அவனைத் தடுமாறச் செய்தது. இதனால்தான் வாத்தியார் அப்படிக் கேட்டாரா? கல்யாணமான சமயத்திலும் அவள் அழகுதான். ஆனால் இப்போது என்னவோ அபார மெருகுடன் பேரழகியாகத் தெரிகிறாள். இந்தப் பேரழகு இன்னும் தன்னிலிருந்து அவளை விலக்கி வைக்கவல்லது என்பதும் உறைத்தது. ஐயோ என்றிருந்தது. பார்வையைத் தணித்துக்கொண்டான்.
வாத்தியாரைப் பார்த்ததும் புன்னகைத்தான் சரவணன். மது இன்னும் அவனிடம் எதையோ வலியுறுத்துவது போல முணுமுணுத்தபடியே இருந்தாள். வாத்தியாரைப் பார்த்து சன்னமாக சிரித்தவள் மீண்டும் சரவணனிடம் தன் முணுமுணுப்பைத் தொடர்ந்தாள். அவர் விலகி பெற்றோர்களிடம் நகர்ந்தார்.
மதுவின் அம்மா அவரைப் பார்த்த நொடியில் விசும்பத் தொடங்கினாள்.
“என்னம்மா இது. இப்ப போயி.. விடுங்க. நம்ம கையில எதுவுமே இல்லை. நடக்கறதை வேடிக்கை மட்டுந்தான் பாக்கலாம். அதான் நமக்கு மரியாதை. நீங்க இன்னிக்கு வந்திருக்கவே வேண்டாமே.. எதுக்கு அழைச்சுட்டு வந்தேள்?”
மதுவின் அப்பா உதட்டைப் பிதுக்கியபடி “நா சொல்றத யார் கேக்கறா வாத்யார். வீட்ல தனியா விட்டுட்டு வரதுக்கும் யோசனையா இருந்துச்சு. அங்க உக்காந்து இதையேதான் மாஞ்சு மாஞ்சு யோசிச்சுண்டு கெடப்பா. அதான் வரட்டுமே இந்தக் கண்றாவியையும் பாக்கட்டுமேன்னுதான்” என்றார். அவருக்கு மாமியில்லாமல் எதுவும் முடியாது என்பது வாத்தியாருக்கும் தெரியும்.
“வீட்டுப்பக்கம் எட்டிப் பாக்கறாளா இல்லே அவன் வீட்லயேதான் இருக்காளா?”
“அதெல்லாம் அவ மனசுப்படிதான் வாத்யார். எப்பவாவது நெனச்சா வருவா. அவகிட்ட ரெண்டு வார்த்தை பேசுவா. என்னத்தையாச்சும் தேடுவா. கலைச்சுப் போடுவா. போயிடுவா. சமயத்துல அவனையும் கூட்டிட்டு வந்து தங்குவா. பாவம் அந்தப் பையன். நல்லவன்தான். அவளைக் கட்டிட்டாலும் பரவாயில்லை. இப்படியே இருக்கறதுதான் சங்கடமா இருக்கு. இந்த பிரச்சினை முடிஞ்சு அவனையாச்சும் கல்யாணம் பண்ணிட்டாள்னா நிம்மதியா இருக்கும். என்ன நடக்குமோ?”
வாத்தியாருக்குத் தெரியாதது இல்லை. இருந்தாலும் கேட்டு வைத்தார். சரவணன் அவரிடம் அப்படித்தான் சொல்லியிருக்கிறான்.
ஒருநாள் மாலை பல்கலைக்கழக வளாகத்தில் நூலக வாசலில் சந்தித்தபோது சொன்னான். “மதுவுக்கு இதுல இஷ்டம்தான். எனக்கும் ஆட்சேபணை இல்லை வாத்தியார். ஆனா என்னால இப்பத்திக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னா அவ பரவால்லேங்கறா. சேந்து இருக்கலாம். முடியறப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ங்கறா.”
“அவளே சொல்றச்சே நீ ஏன்டா பயப்படறே? மும்முரமா உங்கக்கா கல்யாணத்தை முடி. அப்பறமா சந்தோஷமா இருக்கலாமோன்னா?” வெளிப்படையாய் கேட்டதுமே சரவணன் தயங்கவில்லை.
“உங்களுக்கு தெரியாதா வாத்தியார். நான் இப்ப இருக்கற நெலமையில கல்யாணத்தைப் பத்தி யோசிக்க முடியுமா வாத்யார்.”
“இதுல ஒருமாதிரி சௌகரியம் இருக்கும்போல சரவணா. இருக்கற மட்டும் அனுபவிக்கலாம்ங்கற மாதிரி…..” சரவணனின் முகத்தையே உற்றுப் பார்த்தபடி கேட்டார்.
சரவணன் சிரித்தான். இப்படிக் கேட்கிறாரே என்று அவன் துணுக்குறவில்லை. வாத்தியார் எப்போதும் அப்படித்தான். பட்டென்று உடைத்துக் கேட்டுவிடுவார். அவரிடம் மனம் திறந்து பேச முடியும்.
“நீங்க வேற வாத்யார். பயமா இருக்கு. யட்சிகிட்ட மாட்டிக்கிட்ட மாதிரிதான். சேந்து இருக்கும்போதுகூட நமக்குள்ள ஒரு ஜாக்கிரதை உணர்ச்சி மணியடிச்சுட்டே இருக்கும். அவஸ்தை வாத்தியார்.”
அன்றைக்கு அவன் சொன்னது சரிதான் என்பது போல இப்போதும்கூட அவள் அவனிடம் தணிந்த குரலில் எதையோ வலியுறுத்திக்கொண்டுதான் இருந்தாள்.
வாத்தியார் மகாதேவனைத் தேடினார். கண்ணில் படவில்லை. ஆனால் எங்காவது நின்று அவர்களைக் கண்காணித்தபடிதான் இருப்பான் என்று நினைத்துக்கொண்டார்.
குமாஸ்தா வந்து வக்கீல் அழைப்பதாகச் சொன்னதும் எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள். மகாதேவன் அவசரமாக வந்து சேர்ந்துகொண்டான்.
0
வெளியில் வந்தபோது உடலிலிருந்து ஆற்றல் அனைத்துமே வடிந்துபோனது போல் களைப்பாக இருந்தது. மகாதேவனும்கூட தளர்ந்தே காணப்பட்டான். கண்ணீர் விட்டபடியே விசும்பிக்கொண்டிருந்த மதுவின் அம்மாவும்கூட இப்போது வீங்கிய முகத்துடன் வெறித்த பார்வையுடன் நின்றிருந்தாள்.
நீதிபதி செங்கமலம் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் பொதுவாகப் பேசினார். மனமொத்த முறிவுதான் என்றாலும் காலம் எல்லாவற்றையும் சரிப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதால் பொறுத்துப்போக வேண்டும் என்றும் இந்தக் காத்திருப்பு காலத்தில் ஒருவேளை மனம் மாறி இருவரும் சேர்ந்து வாழும் முடிவுக்கு வந்தால் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அப்படி எதுவும் நடக்காதபட்சத்தில் குறிப்பிட்ட தேதியில் விவாகரத்து தீர்மானிக்கப்படும் என்றும் சொல்லிவிட்டு இருவரின் சம்மதத்தையும் கோரினார். அத்துடன் மன்றம் கலைந்தது. நீதிமன்ற குமாஸ்தா வக்கீலின் உதவியுடன் சில கையெழுத்துகளை வாங்கிக்கொண்டார்.
எதுவுமே பேசாது எல்லோரும் நீதி விநாயகர் கோவிலுக்கு அருகிலிருந்த வேப்ப மரத்தடிக்கு வந்து நின்றார்கள். விடைபெற்றுச் செல்லும் தருணம் என்பதாலோ இனி விவாகரத்து நாளன்று வரவேண்டும் என்பதாலோ தயக்கத்துடன் முகம் பார்த்தார்கள்.
“நல்ல பசி நேரம். சாப்பிட்டுட்டு போலாமா?” சரவணன்தான் கேட்டான்.
“அதெல்லாம் வேணாம் சரவணா. ரொம்ப களைப்பா இருக்கு. வீட்டுக்கு போயிர்லாம். அப்பறம் பாக்கலாம்.” வாத்தியார் தீர்மானமாக சொன்னார்.
“இல்ல வாத்யார். வீட்டுக்கு சாப்பாடுகொண்டுவரச் சொல்லி ஏற்கெனவே மாமி மெஸ்ல ஆர்டர் பண்ணிட்டேன். சிரமம் பாக்காம சித்த வந்து சாப்டுட்டு போயிடுங்கோ. யார் சொன்னாலும் வயிறு சொல்றத கேட்டுத்தானே ஆகணும்” சரவணன் விடவில்லை.
மதுமதி இதைக் குறித்துத்தான் அவனிடம் தர்க்கம் செய்திருக்கவேண்டும். மகாதேவனின் பார்வை மதுவின் மீதே நிலைத்திருப்பதை அப்போதிருந்தே கவனித்துக்கொண்டுதான் இருந்தார். மதுவின் அப்பாவும் வீட்டுக்கு வரச் சொல்லி வற்புறுத்தினார். “அவரையும் வரச் சொல்லுங்கோ, பரவாயில்லை. எதும் மனசுல வெச்சுக்கப்படாது” என்று மகாதேவனையும் அழைத்து வரச் செய்தார். சரவணின் வண்டியில் ஏறிக் கொண்ட மது கடந்து செல்கையில் மகாதேவனைப் பார்த்தபடியே சென்றாள்.
ஆட்டோவில் வந்து இறங்கும்போது சரவணன் மட்டுந்தான் வீட்டில் இருந்தான். “தலைவலின்னு சொன்னா. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வந்துடுவா. நீங்க சாப்பிடுங்கோ” என்று சமாதானம் சொன்னான்.
வாத்தியாருக்கு எதுவும் இறங்கவில்லை. என்னவோ சாப்பிட்டதாய் பேர் பண்ணினார். மகாதேவன் வாசலை எட்டியெட்டிப் பார்த்தபடியே நிமிர சாப்பிட்டான். பாயசம், மோர் சாதம் தொட்டுக் கொள்ள சாம்பாரிலிருந்து பருப்பும் தாணும் வேண்டுமென்று வக்கணையாய் சாப்பிட்டு முடித்தான். தாம்பூலம் தந்தாலும் கூச்சமின்றி போட்டுக் கொண்டிருப்பான் என்றுதான் தோன்றியது. வாத்தியாருக்கு அவனைப் பார்க்கப் பார்க்க பற்றிக்கொண்டு வந்தது. என்ன மனுஷன் இவன்? என்ன நடக்கிறது? இனி என்ன நடக்கப் போகிறது என்று புரிந்துதான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறானா? வயிற்றைத் தாண்டி இவனால் வேறெதையும் யோசிக்க முடியாதா?
மகாதேவன் அன்று காலை திருவையாற்றிலிருந்துகொண்டு வந்த பெட்டி கூடத்தில் இருந்தது. பக்கத்திலேயே மெருகு குலையாத சீர் பாத்திரங்களுடன் கோணிப் பைகள் வரிசையாக நின்றன. திருமணத்தின்போது பிறந்த வீட்டிலிருந்து அனுப்பிய சீரோடு வந்த பெட்டி. அவளுடைய புடவைகளும் கொஞ்சம் நகைகளும் இருந்த பெட்டி.
“எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு சொல்லுங்கோ. இருக்கணும். அவ வந்ததுக்கப்பறம் யாரும் தொட்டுக்கூட பாத்திருக்க மாட்டா. யார் இருக்கா சொல்லுங்கோ.” வாத்தியார் சொன்னபோது மதுவின் அம்மா குமுறி அழுதபடியே, சிறிய மஞ்சள் பையை கொண்டுவந்து அவர் கையில் தந்தாள்.
மகாதேவன் தரப்பிலிருந்து மதுவுக்கு மணநாளன்று அணிவித்த நகைகள், திருமாங்கல்யம் உட்பட அனைத்துமே சிறிய பட்டுத்துணியில் பொட்டலமாய் அதற்குள் இருந்தன.
“குந்துமணி தங்கம் தங்கப்படாதுன்னு மாங்கல்யத்தையும் கழட்டிக் குடுத்துட்டா பாவி மக. நீங்க தப்பா நெனக்காதீங்க. சரியா இருக்கான்னு அவர்கிட்ட கேட்டுச் சொல்லுங்கோ“ மதுவின் அப்பா மகாதேவனைப் பார்த்தபடியே கெஞ்சினார்.
விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தார்கள். மதுமதி அதுவரையிலும் வரவில்லை. அவள் வரமாட்டாளென்று மகாதேவனைத் தவிர பிறர் அனைவருக்குமே தெரியும். மகாதேவன் அவர் தோளைத் தொட்டு “ஒரு நிமிஷம் வாத்யார். கொஞ்சம் அப்பிடி வாங்கோ.” என்று வாசலில் இருந்த பூவரசு மரத்தின் நிழலுக்கு அழைத்து வந்தான். அவருடைய காதருகில் கிசுகிசுப்பாய் என்னவோ சொன்னான். சட்டென்று விலகி மகாதேவனின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். “அந்த ஒரு தொழில்தாண்டா பாக்கி. அதையும் செய்யச் சொல்றியாடா நாயே” என்ற கடிந்தபடியே திரும்பிப் பார்த்தார். கையிலிருந்த மஞ்சள் பையை அவன் முகத்தில் எறிந்தார். நடக்கத் தொடங்கினார். விடுவிடுவென்று வெயிலில் நடந்த வாத்யாரையும் அவருக்குப் பின்னால் கீழே விழுந்த பையை எடுத்துக்கொண்டு தலையைக் குனிந்தபடியே மெதுவாக நடந்த மகாதேவனையும் என்ன நடந்தது என்று புரியாமல் பார்த்து நின்றார்கள்.
(தமிழினி பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவரவிருக்கும் நாவலின் ஒரு அத்தியாயம்)