தொக்கடாவின் கவைகளில் கால்களை அழுத்தி ஊன்றியவாறு மேற்குவானில் தகதகத்த சூரியனையே பார்த்தான். பார்வை குழம்பி வளையங்களுடன் கண்களுள் இருள் நிரம்ப கண்களை விலக்கிக்கொண்டு கீழே குதித்தான். வரப்பில் அமர்ந்திருந்த அம்மாவின் கலைந்த தலைமுடியின் ஓரங்கள் வெயிலுக்கு மின்னின. தலைகுத்தி மேய்ந்த மறிகளின் வெண்மஞ்சள் உடல்களின் மீதொரு கரிக்குருவி மாறி மாறி அமர்ந்து விளையாடியது. அவனுடைய இடுப்புயரம் வளர்ந்து காய்ந்திருந்த ஊசிப்புற்கள் வெயிலுக்கு மின்னலோடியவாறு காற்றுக்கு அசைந்தன. சின்னத்தையும் தம்பியும் முன்னால் போய்க்கொண்டிருந்தார்கள். அம்மாவுக்குக் கை காட்டலாம் என்று நினைத்த அதே நொடியில் திரும்பிப்பார்த்த சின்னத்தை இவனை வேகமாக நடக்கச்சொல்லி சத்தம்போட்டாள்.

முதுகின் மீது அம்மாவின் பார்வை கனத்தாலும் சின்னத்தைக்குப் பயந்து பின்புறம் திரும்பாமல் நடையை வேகமாக்கினான். காட்டின் மூலையில் தெற்கே நீண்ட கைஇட்டேறியின் மணலுக்குள் கால்கள் புதைந்தெழுவது மிகச்சுகமாகவும் கிளுகிளுப்பாகவும் இருந்தது. வேலியின் பசிய மிஷ்டைக்கொடிகளிடையே பழுத்திருந்த கோவைப்பழங்களைக் கண்டவுடன் நாவிலூறிய எச்சில் சின்னத்தை மீதான பயத்தின் வெப்பத்தால் வறண்டுபோனது. கைஇட்டேறி பெரிய இட்டேறியைத் தொட்டு மேற்கே திரும்பிய முக்கில் வேகமாக ஓடிய சுக்குட்டாயின் மீது சிறுகல்லை எடுத்து வீசினான். அது இவனை ஏமாற்றி வேலிக்குள் போய் மறைந்தது. வேலியுச்சிகளில் சிட்டுக்கள் குதியாளம் போட்டன. கொறங்காட்டுப் பனைகளின் வறண்ட ஓலைகளின் மீது காற்று மோதுவதால் எழுந்த ஓசையைக் கேட்கையில் அவன் பெயரை யாரோ கூப்பிடுவது போலவே இருந்தது.

தடத்தில் கிடந்த கல்லில் கால் தட்டிவிட கீழே விழப்போனவன் வெறுப்போடும் கோபத்தோடும் குனிந்து அக்கல்லை எடுத்து வீசிவிட்டு நடந்தான். சின்னத்தையின் சீலைவெண்மை கண்களை நிறைத்தது. அம்மா கலர்சீலை கட்டியிருக்கிறாள். சின்னத்தை ஏன் வெள்ளைச்சீலை கட்டியிருக்கிறாள் என்ற சந்தேகத்தை தனக்கு விழப்போகிற கொட்டைக்குறித்த பயத்தையும் மீறி ஒருநாள் சின்னத்தையிடமே கேட்டான். ஆனால் அவள் பதில் சொல்லாமல் இழுத்து மடியில் அமர்த்தி வெகுநேரம் தலையைக் கோதிக்கொடுத்தாள். குவியும்போது கொடூரமாய் இருக்கும் அவள் விரல்கள் விரியும்போது மென்மையாய் இருப்பதை உணர்ந்தான்.

ஒன்றுக்கு வருவது போலிருக்க வலப்பக்கமாகத் திரும்பி குஞ்சுமணியை வட்டமாய் ஆட்டி ஆட்டி இருந்தான். டவுசருக்குள் விடும்போது துளி சிறுநீர் விரலில் பட்டுவிட சின்னத்தைp பார்க்கிறாளா என்று கள்ளப்பார்வை பார்த்தவாறு விரலைச் சப்பினான். ஒருமாதிரி உறைப்பாக இருக்க டவுசரில் விரலைத் தேய்த்தவாறு அவர்களை எட்டிவிடும் முசுவோடு நல்ல பையனாய் நடக்கையில் மினுமினுக்கும் உடம்போடும் சரசர சத்தத்தோடும் வீம்சாய் தெற்கே நெளிந்து நெளிந்து வந்தது ஒரு பாம்பு. தன்னிச்சையாய் அலறியவனின் தொண்டையிலிருந்து சத்தம் மேலெழவில்லை. ஆனால் பாம்பு இவனைக் கண்டுகொள்ளாமல் வேலிக்குள் போய் மறைந்துவிட மணலில் பதிந்திருந்த அதன் தாரையை மிதிக்காமல் தாண்டிக் குதித்தோடி பாம்பு பாம்பு என்று கத்தினான். சின்னத்தையும் தம்பியும் திரும்பிப் பார்த்தார்கள். கிழக்கே கையை நீட்டி பாம்பைப் பற்றிச் சொன்னபோது ஒழுங்காக பின்னாலேயே நடந்து வரச்சொல்லி சின்னத்தை போட்ட அதட்டலுக்கு கண்களில் நீர்கோர்த்துவிட்டது. கொக்காணி காட்டிய தம்பி சின்னத்தையின் கையைப் பிடித்தவாறு போக நீர் மிதக்கும் கண்களோடு அவர்களைத் தொடர்ந்தான்.

மாதாசிங்கன் கோவிலில் பெரிய வேப்பமரத்திற்கு கீழே மண்மேடையில் இருந்த சாமிகளிடம் ஓடிப்போய் இனிமேல் தனக்குப் பாம்பைக் காட்டக்கூடாது என்று கேட்டுக்கொண்டான். பழுத்த வேப்பம்பழங்கள் மண்மேடையெங்கும் உதிர்ந்து நசுங்கிக்கிடந்தன. காய்ந்த வேப்பமுத்து ஒன்றைப் பொறுக்கியவன் இரண்டாக உடைத்து உள்ளிருந்த பருப்பைக் கிள்ளி வீசினான். இடதுகையின் பாம்புவிரலை மேற்குவித்து அதன் முட்டியில் ஓட்டைக் கவிழ்த்து வலதுகையால் ஒங்கித்தட்டி விரல்முட்டியில் ஏற்பட்ட செங்கீறலைச் சுவைத்தான். தன் ரத்தம் பெருஞ்சுவை. கோவிலைத் தாண்டி நீண்ட இட்டேறியின் மேற்குச்சரிவில் கூழாங்கற்கள் கிடக்க சிறியதான ஒன்றை எடுத்து வாயிற்குள் அதக்கினான். மண்வாசனையோடு இளஞ்சூடாக இருந்த அக்கல்லை திரும்பத்திரும்ப நாவால் உருட்ட வாய்நிறைய எச்சிலாகச் சுரந்த மகிழ்ச்சியை அப்படியே விழுங்கினான்.

சத்யராசுவின் தோட்டத்தை நெருங்குகையில் வாயிற்குள் இருந்த கூழாங்கல்லை எடுத்து ஜோபிற்குள் வைத்துக்கொண்டான். வேலியோரக் கட்டித்தாரையில் இருவரும் சேர்ந்து கட்டியிருந்த மண்வீடு இடிந்து கிடந்தது. கட்டித்தாரையில் வீடுகட்டி விளையாடலாம் என்ற யோசனையை சத்யராசுதான் சொன்னான். சாயங்காலப் பொழுதொன்றில் காப்பி குடித்துவிட்டு சதயராசுவின் அந்த ஊரடித் தோட்டத்திற்கு வந்தார்கள். எப்படி வீடு கட்டவேண்டுமென்று தெரியாமல் முழிக்கையில் சத்யராசுவின் கண்களில் கற்பனைக்குதிரை பலகால்களில் பாய்வதைப் பார்த்தான். அவன் சொற்படி சாணிக்கூடை நிறைய செம்மண் அள்ளிவந்து கொட்ட இட்டேறிக்குள்ளிருந்து சத்யராசு நிறைய ஓடைக்கற்கள் பொறுக்கி வந்தான். மாட்டுத்தாழியிலிருந்து நீரள்ளி இவன் ஊற்ற அவன் மண் பிசைந்தான். கற்களை அடுக்கி மண்ணைக் குழைத்துப் பூசப்பூச வீடு அழகாக எழுந்தது. நாற்பக்கங்களிலும் ஓரடி உயரத்திற்கு சுவர்கள் வைத்து மேற்கூரைக்கு சுள்ளிகளையும் இலைகளையும் பொருத்தி மண்பூசினான் சத்யராசு. கடைசியாக அவனுடைய கையகலத்திற்கு வாசல் வைத்து மாட்டுச்சாணியைக் கரைத்து வீட்டை மெழுகிவிட அது இன்னும் அழகாகிவிட்டது.

இருட்டானபோது பால்கறக்க வந்த சத்யராசின் அப்பா இருவரையும் வீட்டிற்குத் துரத்தினார். மறுநாள் இவன் அரிசியும் சர்க்கரையும் கொண்டு போக சத்யராசு உப்பு மற்றும் புளியோடு சாமி படத்தையும் கொண்டுவந்தான். எல்லாவற்றையும் உள்ளே வைத்து சின்னச்சின்ன ஊஞ்சல் குச்சிகளில் கம்பி ஒயர் வைத்துக்கட்டி வீட்டிற்கு கதவை மாட்டினான் சத்யராசு. பிறகு தினமும் மாலையில் வந்து பார்க்கையில் சாரையாய் ஊர்ந்த எறும்புகள் சர்க்கரைத்தூளையும் அரிசிமணிகளையும் சேர்ந்து இழுத்துப் போய்க்கொண்டிருந்தன.அந்த நாட்களின் இரவுகளில் இருவரும் தங்கள் ஆவிகளை அனுப்பி இந்த வீட்டில் உறங்கச்செய்தார்கள். ஒருநாள் சத்யராசின் கொம்புக்காளை முளையிலிருந்து அவிழ்ந்தோடியதில் வீடு இடிந்துவிட்டது. வீடு இடிந்ததைக் கண்டு சோகமடைந்த இருவரின் ஆவியும் தத்தம் வீடுகளுக்குத் திரும்பிய இரவில்தான் இட்டேறி வேலியெங்கும் மிதந்த மின்மினிகளைப் பார்த்தன. தெற்கே சுடுகாட்டில் எழுந்த ஆந்தையின் குரலுக்குப் பயந்து கைகோர்த்து நடந்த இருவரின் ஆவியும் தலைவாசலுக்கு வந்தவுடன் கைகளைப் பிரித்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு ஓட்டமெடுத்தன.

குளத்தை நெருங்கும்போது சின்னத்தையும் தம்பியும் குளத்தைத் தாண்டி போய்விட்டிருந்தார்கள். கரைகளிலும் உள்ளேயும் இருந்த புளியமரங்களின் நிழல்கள் பாளப்பிளவுகளில் அடைந்துகிடக்க மறிகள் அந்த நிழல்களை முகர்ந்துகொண்டிருந்தன. குளத்தின் வடமேற்குப்புறக் கரையின் உள்நோக்கிய சரிவில் பதிக்கப்பட்டிருக்கும் வரிக்கற்களின் வழியாக குளத்திற்குள் இறங்கி மேலேறுவது இவனுக்கும் மிகப்பிடிக்கும். கரையிலிருந்து எம்பிக் குதித்தால் புளியமரத்தின் கீழ்த்தணிவாக சாய்ந்திருக்கும் மிலாறுகள் கைக்கு எட்டிவிடுமென்பதால் சிறுவர்களுக்கு அந்த இடம் பிடித்திருந்தது.

வரிக்கற்களுக்குக் கொஞ்சதூரம் தள்ளி சிறுவர்கள் ஒண்ணுக்கடிக்கப்பதற்காக தனித்தனியான தாரைகள் இருக்கின்றன. இளமதியம் பதினொரு மணிக்கும் சாயங்காலம் மூணு மணிக்கும் ஒண்ணுக்குந்தண்ணிக்கும் விடும்போது எல்லோரும் ஹோவென்று சப்தம் போட்டவாறு கரைமேட்டிற்கு ஓடி தங்கள் தாரைகளில் ஒண்ணுக்கிருப்பார்கள். எந்த அவசரத்திலும் யாருக்கும் தாரை மாறாது. ஒண்ணுக்குப் போன ஈரத்தாரையில் குச்சியை வைத்து அழுத்தி இழுத்து இழுத்து உருவான சரிவான வளைவுத்தடத்தில் பாம்புகளாய் சிறுநீர் வளைந்து வளைந்து போகும். ஒரே நேரத்தில் அத்தனை பாம்புகள் போவதைப் பார்க்கக் குஷியாக இருக்கும். வயிறு முட்ட தண்ணீரோ காப்பியோ குடித்திருந்த பாம்புகள் மட்டும் குளத்தின் தரைபோய்ச் சேர மற்றதெல்லாம் பாதியிலேயே மறைந்துவிடும். பெண்பிள்ளைகள் எல்லோரும் குளத்திற்கு வடக்குப்பக்கம் இருக்கும் வேலிக்கருவை அடர்ந்த பீமந்தைக்கு போய்விடுவார்கள்.அவர்கள் உடலிலிருந்து பாம்புகள் எப்படி வெளியேறுமென்று இவனுக்குத் தெரியவில்லை.

ஊருக்குள் நரிக்குறவர்கள் வந்திருந்தபோது வடபுறத்துக் குளத்துமேட்டில்தான் கூடாரம் போட்டிருந்தார்கள். பெரிய கூட்டுவண்டிகளையும் அவர்கள் போட்டிருந்த துணிகளையும் பார்க்க அதிசயமாகவும் கொண்டாட்டமாகவும் இருந்தது. குறவர்களின் நாவு வேறு தாளத்தில் இயங்குவதைக் கேட்கக்கேட்க இனிமையாக இருந்தது.தலைக்குப் பனையோலைத் தொப்பி மாட்டியிருந்த முக்கால் நிர்வாணக் குறவர்கள் மாடுகளின் மீதேறி கொறங்காடுகளுக்குள் முயல்வேட்டைக்குப் போனார்கள். கறிசோற்றிற்காக பூனையை அரிந்துகொண்டிருந்த வயதான குறவனின் கைவேலையை பார்க்கையில் தன் வாயிலிருந்து தொடர்ச்சியாய் பூனைகள் குதிப்பதைப் போலொரு உணர்வெழ சத்யராசை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு ஓடிவந்துவிட்டான். தூங்கப்போகும்வரை குளத்துமேட்டில் லாந்தர் வெளிச்சமும் இரைச்சலும் இருந்தன. அன்றைய இராக்கனவில் ஒரு குறவன் இவனையும் சத்யராசையும் தன் மாட்டின் மீது ஏற்றி அமர்த்திக்கொண்டு மாட்டை விரட்ட அது காற்றில் பறந்தது. காலையில் தூக்கக்கலக்கத்தோடு திண்ணையின் மரத்தூணில் தொங்கியவாறு கிழக்கே பார்க்கையில் குளத்துமேடு காலியாகக் கிடந்தது. சத்யராசு வரவும் இருவரும் போய் குளத்துமேட்டைப் பார்த்தார்கள். சின்னச்சின்ன எலும்புகளும் கந்தல் துணிகளும் ஈரம் காயாத மிளகாய்களும் கிடந்தன.

குறவர்கள் வந்துபோன சில மாதங்களுக்குப் பின்னால் ஒருசமயம் மழை விடாமல் பெய்து இரண்டு நாட்களுக்கு ஓடையைப் போல் தண்ணீர் இட்டேறியிலிருந்து மேற்கே வந்து குளம் நிரம்பிவிட்டது. வடகிழக்குக் கரையில் கடைபோய் பீமந்தைக்குள்ளும் தண்ணீர் தேங்கியது. ஊருக்குள்ளிருந்து இட்டேறிக்குப் போகும் தென்புறத் தடத்திலும் தண்ணீர் தேங்கிவிட கிழக்கே காடுகளுக்குச் செல்பவர்கள் தெற்கே போய் சுடுகாட்டைச் சுற்றிப் போனார்கள். குளத்திற்குள் இருந்த சிறுமரங்கள் எல்லாம் நீரில் மூழ்கிவிட்டன. குளம் நிரம்பியபின் சிறுவர்களை பெரியவர்கள் குளத்துப்பக்கம் விடவில்லை. தப்பித்தவறி குளத்துப்பக்கம் எவரேனும் எட்டிப்பார்த்தால் யாராவது எங்கிருந்தாவது சத்தம் போட்டு விரட்டினார்கள். திருட்டுத்தனமாக எட்டிப்பார்க்கையில் அத்தனை தண்ணீர் பயமூட்டியது. அந்நாட்களின் ராத்திரிகளில் தவளைகளின் கொரக் கொரக் சத்தம் இவனுடைய உறக்கத்தின் பாதாள லோகம் வரை கேட்டு மறைந்தது.

பள்ளிக்கூடம் இல்லாத நாளொன்றில் குட்டிச்சுவராய் கிடக்கும் தெற்குவாசல் வீட்டில் சththத்யராசோடு விளையாடுகையில் தலைவாசலிலிருந்து ஒலித்த கூச்சலைக் கேட்டு விளையாட்டை பாதியில் விட்டுவிட்டு ஓடினார்கள். குளத்தின் வடகரையெங்கும் ஆட்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் காலிடைவெளிகளில் எட்டிப்பார்க்க நீர் அலையில்லாமல் இருந்தது. வடக்குப்புறப் பீமந்தையில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. தண்ணீர் வார்க்க குளத்திற்குள் இறங்கிய பண்டக்காரன் பாசிப்பயத்தான் சேற்றில் சிக்கிவிட அவனைக் காப்பாற்றப் போன அண்ணன் தம்பியான ராமனும் வீரனும் சேர்ந்து குளத்திற்குள் மூழ்கிவிட்டதாக பேசிக்கொண்டார்கள். திரும்பவும் பயத்தோடு குளத்தைப் பார்க்க தவளைக்குட்டிகள் சில துள்ளி விளையாடின. அன்றைய ராச்சோற்றிற்கு அப்பத்தா தோசை சுட்டுப்போட்டாள். விடியும்வரை காற்றில் மிதந்த ஒப்பாரி உறக்கத்தின் பாதாள லோகத்தில் மறையாமல் எதிரொலித்தது.

காலையில் கோவில் திண்ணையில் ஆட்கள் நிரம்பிக்கிடந்தார்கள். இரண்டு போலீஸ்காரர்கள் குளத்துமேட்டில் நின்றிருக்க குளத்தைப் பார்க்க நோட்டமிருந்தாலும் போலீசுக்குப் பயந்து சத்யராசும் இவனும் கோவிலோடு நின்றுவிட்டார்கள். மத்தியானச் சோற்றைத் தின்றுவிட்டு திண்ணைத்தூணில் தொங்கியவாறே தலைவாசலையும் குளத்துமேட்டையும் பார்க்கையில் கோவில் திண்ணையில் ஓரிருவர் மட்டும் உட்கார்ந்திருக்க குளத்துமேடு வெறிச்சோடியிருந்தது. வீதியிலிருந்து சத்யராசு கையசைத்துக் கூப்பிட அப்பத்தாவிற்கு தெரியாமல் நழுவியவன் அவனுடன் சேர்ந்துகொண்டு தெற்கே போய் ஊரைச் சுற்றிவந்து பார்க்கையில் தன்னுள் மூன்றுபேரை புதைத்திருப்பதின் எந்தத் தடயமுமின்றி அமைதியாக இருந்தது குளம்.

மறுநாள் மதியம் ஊரே குளத்துமேட்டில் கூடியிருந்தது. சத்யராசும் இவனும் கரையேறிப் பார்க்கையில் யாரும் இவர்களை விரட்டவில்லை. நடுக்குளத்தில் பனங்காய்களைப் போல் மூன்று உச்சந்தலைகள் வட்டமாய் மிதப்பதைப் பார்க்க பயமாக இருந்தது. ஜீப்பும் ஒரு வேனும் குளத்தின் தெற்குப்பக்கத்தில் நின்றிருக்க காக்கி டவுசரும் வெள்ளைப் பனியனும் போட்டிருந்தவர்கள் நீளமான வடக்கயிறுகளை ஒன்றோடொன்று பிணைத்தனர்.பனியனைக் கழற்றிய ஒருவர் வடக்கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு குளத்திற்குள் குதித்து பனங்காய்களை நோக்கி நீந்தியதைப் பார்க்கையில் ரொம்பவும் பயமாகி திரும்பவும் வீட்டிற்கு ஓடிவந்துவிட்டான்.தலைவாசலில் உடல்கள் கொண்டு வந்து கிடத்தப்படும்போது வானெங்கும் மிதந்த வெளிறிய வெயிலின் மீது மாதாரிகளின் ஓலம் எதிரொலித்தது.

இப்போது வறண்டுவிட்ட குளத்தின் ஞாபகத்தில் மூழ்கியிருந்தவனுக்கு சின்னத்தையும் தம்பியும் வீட்டிற்கே போயிருப்பார்கள் என்று நினைப்பு வரவும் நடையை எட்டிப்போட்டான். நாவிதர் வீட்டின் வாசலில் கோழிகள் திரிந்தன. குளத்தையொட்டி அவர் போட்டிருக்கும் தொண்டுப்பட்டியிலிருந்து வரும் கிடாய்க்குசுவின் வாசனையை முகர்வதில் அப்படியொரு சுகம். நாவிதர் வீட்டைத்தாண்டி வடக்குப்பக்கத்தில் அவன் படிக்கும் ஊர்ப்பள்ளிக்கூடம். மச்சுக்கட்டிடமான அதற்கு மேற்குப்பக்கத்திலும் கிழக்குப்பக்கத்திலுமாய் அதற்கு இரண்டு கதவுகள். ஆனால் ஒரே வாத்தியார்தான்.

இவனுக்கோ பள்ளிக்கூடம் போவதற்கே பிடிப்பதில்லை. வாத்தியார் எந்த வகுப்பிற்கு பாடம் எடுக்கிறாரோ அந்த வகுப்பு மட்டும் முன்னால் உட்கார்ந்திருக்க மற்ற வகுப்புகள் எல்லாம் பின்னால் உட்கார்ந்திருப்பார்கள். சில நாட்களில் வாத்தியாருக்குத் தெரியாமல் பின்கதவு வழியாக நழுவி வீட்டிற்குப் போய் அப்பத்தாவிடம் தின்பதற்கு ஏதாவது கேட்பான். நேரத்திற்கு தகுந்தாற்போல் காப்பியோ முறுக்கோ கொடுத்து மறுபடியும் பள்ளிக்கூடத்திற்குத் துரத்துவாள். பின்கதவு வழியாக திருடனைப்போல் நுழைகையில் வாத்தியாரிடம் சிக்கிக்கொள்வான். மக்குப்பண்டாரம் மக்குப்பண்டாரம் என்றவாறு காதைப்பிடித்து அவர் திருகுகையில் மற்ற பிள்ளைகள் எல்லாம் சிரிப்பார்கள். திருட்டுத்தனத்திலும் தான் மக்காய் இருப்பதை நினைத்து வெட்கமாகப் போய்விடும். இனிமேல் போகவேகூடாது என்ற நினைப்பெல்லாம் ஒரு சில நாட்களுக்குத்தான். திருட்டுத்தனம் செய்ய வயிறு அவனைத் துண்டிவிட்டால் தன்னால் அவனைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடிவதில்லை.

தின்பண்டத்திற்காக வீட்டிற்கு நழுவும் சமயங்களில் சின்னத்தை பெரும்பாலும் காட்டுக்குப் போயிருப்பாள். ஒருநாள் இவன் போகையில் அவள் வீட்டிலிருக்க ஊஞ்சமிலாறால் கால்களில் விளாசி பள்ளிக்கூடத்திற்குத் துரத்தினாள். அடி விழுந்த இடங்களில் தீயால் கோடுகள் இழுத்தாற்போல் எரிந்தது. திரும்ப வரும்போது வாத்தியாரிடமும் சிக்கிக்கொள்ள அவர் பங்கிற்கு அவரும் கொடுத்தார். வீங்கிப்போன கால்களை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு ராத்திரி வேதுகொடுத்தாள் அப்பத்தா.

கோவிலடிக்கு வந்துவிட்டவன் நேராக வீட்டிற்குப் போகாமல் கல்திண்ணையில் அமர்ந்தான். இங்கு வைத்துத்தான் அவனையும் தம்பியையும் போட்டோ பிடித்தார்கள். அந்தக் கறுப்புவெள்ளைப் போட்டோவைப் பார்க்கையில் தன்னையே பிடிக்கவில்லை. தம்பிதான் அழகாக இருந்தான். அப்போட்டோவை எப்போது எடுத்துப்பார்த்தாலும் தம்பியின் முகத்தை மட்டும் நன்றாக பார்த்துவிட்டு தன் முகத்தை ஒரே ஒரு கணம் பார்த்துவிட்டு வைத்துவிடுவான்.

கோவிலெங்கும் சுலுக்கைகள் ஊர்ந்து கொண்டிருக்க வேப்பம்பூக்கள் உதிர்ந்திருந்தன. கோவில் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு வீட்டின் கற்கட்டுச்சுவருக்கு உள்பக்கத்தில் நின்றிருந்த சின்னத்தை சத்தமிட்டுக் கூப்பிட்டாள். எழுந்து தலைவாசலைக் கடந்தவன் கற்கட்டுச் சுவரின் இடைவெளிகளுக்குள் பல்லி பாப்பிராணி ஏதாவது தெரிகிறதா என்று வழக்கம்போல் பார்த்தவாறு வாசலுக்குள் நுழைகையில் திண்ணையில் அமர்ந்திருந்த மச்சானைக் கண்டு குஷியாகி ஓடினான். அவன் இவனை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றி இறக்கவும் மச்சானின் மடியிலேறி அமர்ந்துகொண்டான். கதவிற்குப் பின்னாலிருந்து ஒருகண்ணில் இவனையும் மச்சானையும்
பார்த்த தம்பிக்கு கொக்காணி காட்ட நினைத்தான். ஆனால் காட்டவில்லை.


தக்கை பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவரவிருக்கும் நாவலிருந்து ஒரு பகுதி.