‘உங்கள் படங்களின் உட்பிரதி குறித்து பல்வேறு வகையான அனுமானங்கள்
உலவுகின்றன. உண்மையில் நீங்கள் எதை/எவற்றை உணர்த்த
விழைந்தீர்கள்?”எனது திரைப்படங்களில் ஆழ்பிரதி என ஏதுமில்லை. அப்படி எதுவும்
இருப்பதாக நான் இதுவரை அறிந்திருக்கவில்லை.’
– பேலா தார் (இயக்குநர் – ஹங்கேரி )

கலையின் உட்பிரதியை (Subtext) ‘அறிந்துகொள்ளும்’ நிலையிலிருந்து தடுமாறி ‘கண்டுபிடிக்கும்’ போக்கு புத்திஜீவிகளிடையே தொற்று நோயாக ஒளி வேகத்தில் பரவியபடியே இருக்கிறது. ஒரு திரைப்படம் அல்லது இலக்கியப் பிரதி ஒட்டுமொத்த தரிசனமாகத் திரண்டு தன்னை முன்வைப்பதை புறந்தள்ளிவிட்டு அவற்றைத் துண்டு துண்டுகளாக கட்டுடைத்து (Interpret) ‘அ’ பாகம் குறிப்பது ‘அ’ பாகத்தை தான் போன்ற தோற்றமயக்கதை உண்டாக்குகிறதே ஒழிய உண்மையில் ‘அ’வை அல்ல, ‘ஒள’ வை என்கிறார்கள். ஒரு கதாபாத்திரம் எதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாலும் அக்காட்சியின் ஓரத்தில் அலங்காரத்திற்காக மட்டுமே இடம்பெற்றிருக்கக் கூடிய புத்தர் சிலையை, பூதக்கண்ணாடி வழி தோண்டியெடுத்து நம்மை கீழானவர்களாக எண்ணச்செய்து நமக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்கும் வல்லமை பொருந்திய வெற்றிச் சிரிப்பை உதிர்க்கிறார்கள்.கட்டுடைத்தலின் இயல்பேயான முடிவின்மை காரணமாக இவை நீண்டு நீண்டு பலவந்தமாக அவிழ்க்கப்படும் கிழவனின் வேஷ்டி, கதாநாயகியின் நெற்றிப்பொட்டு, சுவர்ச் சட்டகங்களுக்குள் இருக்கும் ஆப்பிள், அச்சடிக்கப்படும் போது ஏற்பட்ட குளறுபடியால் பத்தியின் குறுக்கே விழுந்துவிட்ட இரு கோடுகள் என அனைத்தும் குறியீடுகளாகி விடுகின்றன. இத்தகைய அபாயகரமான சூழலில் அழகியல்/இன்ன பிற காரணங்களுக்காக அல்லது காரணமே இன்றி கூட ஒரு இயக்குநர் பாம்பையோ மானையோ காட்சிப்படுத்திவிட முடியாது. (அவன் எதுக்கு சார் திடீர்னு மானை காட்டணும்? கம்ப ராமாயணத்துல சீதை மானை பாக்கறா இல்லியா, இல்ல மான் இவளை பாக்குதா? சீ… இட் இஸ் சப்ஜக்டிவ்) ஒரு ஆப்பிள், புத்திஜீவிகளாக இவர்கள் கருதும் படைப்பாளிகளின் படைப்புகளில் மட்டும், எப்போதும் ஜெனஸஸின் குறியீடாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? அது ‘ஆப்பிளாக’ மட்டுமே தோன்றும் பொற்கணம் ஒன்றேனும் அதற்கு வாய்க்கட்டும். பெலினி முதல் பேலா தார் வரை மாபெரும் கலைஞர்கள் எவரும் தங்களது படைப்புகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதை விரும்பியதில்லை. ஏனெனில் இன்றைய விமர்சகன் என்பவன் கையில் பிரம்புடன் பார்வையாளன் முன் அமர்ந்து இந்தத் திரைப்படத்தை இப்படித் தான் அணுக வேண்டும் என்கிறான். மீறினால் ரசனைக் குறைபாடுள்ளவன் என ஒற்றை வரியில் நிராகரிக்கப்படுகிறான். விமர்சனம் என்பது விமர்சகன் தன்னை மேட்டிமை பாவனைகளால் நிறுவிக் கொள்ளும் அபத்தமாக மாறிவிட்டிருக்கிறது.

குறியீடுகளை பயிலும் – பயிற்றுவிக்க முற்படும் விமர்சகன் அப்பிரதியின் இயல்புத் தன்மையையும் வெளிப்படையான சில உண்மைகளையும் குலைத்து மற்றொன்றை கொண்டு அடுக்கி நிரப்புகிறான். குறைபாடுள்ள கருவிகளை பயன்படுத்தி ஒன்றை ஆராய்கையில் பெரும்பாலும் அப்படைப்பின் பூரணம் சீர்கெட்டு அது சுட்டிக்காட்ட விரும்பிய தளங்களும் அதன் இலக்குகளும் திசை தவறி விமர்சனம் என்பது வெறுமனே புத்திசாலித்தனமான செயல்பாடாக மட்டுமே எஞ்சுகிறது. அச்செயல் ஒரு கலைப்படைப்பில் கட்டாயம் உட்பிரதி என்கிற வஸ்து ஒளிந்திருக்கும் என நம்புகிறது. அதை நிரூபணம் செய்யத் தகுந்த ஒன்றிரண்டு கூறுகளை படைப்பில் இருந்தே பிரித்தெடுத்து அவற்றிற்கு விமர்சகன் தான் சரியென கருதும் வேறோர் பொருட்சாயம் பூசுகிறான். பின்னர் அக்கூறுகள் படைப்பாளி உத்தேசித்திருந்ததற்கு முற்றிலும் மாறானதாக அமைந்துவிடுகின்றன. காலப்போக்கில் நிலைபெற்று விடும் இத்தவறான கூறுகளை உடைத்தெறிந்து உண்மையை நெருங்குவதென்பது வருங்காலத்திற்கு சவாலானதாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

ஒரு படைப்பு குறியீடுகளை/ உட்பிரதிகளை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டுமா? ஆம் எனில் அவற்றை எங்ஙனம் மிகச் சரியாக அடையாளம் காண்பது? இல்லாதன பலவும் கண்டுபிடிக்கப்பட்டு பரப்பப்படும் நிலையில் போலி அறிவுஜீவிகள் முன்முடிவுகளை கொண்டு கட்டவிழ்க்கும் பொய்களை எத்தனை நாட்கள் தான் சகித்துக்கொள்வதோ? குறியீடுகள் அவை உணர்த்த விரும்புவதை படைப்பின் இயங்கு தளத்திலேயே பொருத்தியிருக்கும். அவை அப்படைப்புடன் வெளிப்படையான உறவை பேணுபவை. திரை மறைவில் அல்ல. அதன் அர்த்தங்கள் காலத்தின் சுழற்சியில் சமூக நாகரீக வளர்சிகளுக்கேற்ப மாறுபடலாம். உதாரணமாக ஹோமர் எழுதிய காலத்தில் கடவுளாக மட்டுமே அறியப்பட்ட ஜீயஸ் இன்று அதிகாரத்தின் மையமாக விளங்கிக் கொள்ளப்படுவதைப் போல.சராசரி நுட்பங்களும் குறியீடுகளும் அடையாளம் காட்டப்பட்டவுடன் சுவாரஸ்யம் இழப்பவை.

தர்க்காவ்ஸ்கியின் ‘The Sacrifice’ திரைப்படத்தில் மையக் கதாபாத்திரம் பங்கு கொள்ளும் ‘கருப்பு வெள்ளை’ சம்பவங்கள் நிஜமா அல்லது அக்கதாபாத்திரத்தின் பயங்கள் உண்டாக்கும் கனவுச் சித்திரங்களா என்பது நாற்பது ஆண்டுகளாக புலப்படாத சுவாரஸ்யம். தெளிவின்மையின் பேரானந்தம். இதற்கு முற்றிலும் மாறானது ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸின் ‘Germany O pale mother’ திரைப்படம். படத்தின் நாயகி ஜெர்மனியாக உருவகிக்கப் படுகிறாள் என்பது தலைப்பிலிருந்து அழுத்தமாக ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளனுக்கு உணர்த்தப்படுகிறது. இருப்பினும் அதன் உச்ச கணங்கள் மங்கிவிடவில்லை. ரசிகனின் கற்பனையை கோரும் அதன் சாத்தியங்களும் குன்றவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் கிளாசிக்ஸ் குறித்து ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதிக் குவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் வெளியான சிறந்த படங்களை நோக்கி நம் கவனம் குவிப்பதே இத்தொடரின் முதன்மை நோக்கம். ஈரானிய மெலோ டிராமாக்களும் கிம் கி டுக் போன்ற அசட்டுத்தனங்களும் கொண்டாடப்படும் மலிந்த சூழலில், அசல் சினிமா படைக்கும் பெல்ஜியம் இயக்குநர்களான டார்டென் சகோதரர்களின் படைப்புலகம் உலகனைத்துக்கும் பொதுவானது.

சென்ற ஆண்டு கான் திரைப்பட விழாவில் வெளியான இவர்களது சமீபத்திய படமான ‘Two Days One Night’, இழந்த தனது வேலையை மீண்டும் பெற அலைக்கழிக்கப்படும் ஒரு மத்திய தர வர்க்கத்துப் பெண்ணின் கதை. ஒரு புதிய ஊரைப் பற்றி மேலதிக தகவல்களால் விவரிக்க கூர்ந்த அவதானிப்பை நிகழ்த்த ஓர் அந்நியனை அவ்வூருக்குள் புகுத்துவது ஒரு இலக்கிய உத்தியாகவே பின்பற்றப்படுவதை போல, சினிமா இயக்குநர்களுக்கு துயரத்தை சுமக்க பாவப்பட்ட பெண்களைத் தவிர புகலிடம் ஏதுமில்லை. The Passion of Joan Of Arc தொடங்கி வைத்த இம்மரபு எழுபத்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது. தந்தை நாடு (Deutschland) என வழங்கப்படும் ஜெர்மனியின் புகழ்பெற்ற இயக்குநரான ரெய்னர் வெர்னர் பாஸ்பைண்டர் கூட இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையே படமாக்குகிறார் (The Marriage of Maria Braun). ஹெல்மா சாண்டர்ஸின் இலக்கும் ஒரு தாயின் போராட்டம்தான். பின்னர் 2002ம் ஆண்டு விதிவிலக்காக த பியானிஸ்ட் எடுத்து ரோமன் போலன்ஸ்கி ஆண்களின் மனக்குறையை போக்கினார்.இரு குழந்தைகளுக்கு தாயான சான்ட்ரா மன அழுத்தம் காரணமாக நீண்ட விடுப்பில் இருக்கிறார். அதையே காரணமாகக் கொண்டு சான்ட்ரா வேலை செய்த நிறுவனம் அவளை பணி நீக்கம் செய்கிறது. அவள் இடம்பெற்றிருந்த குழுவிற்கு வெள்ளிக்கிழமை அன்று ஆயிரம் யூரோக்கள் போனஸாகவும் அறிவிக்கப்படுகிறது. தான் தற்போது வேலைக்கு தகுதியானவளாக இருப்பதாகவும் தன்னை நீக்கக் கூடாது என்றும் மேலதிகாரியிடம் முறையிடுகிறாள் சான்ட்ரா . அவள் பணியாற்றிய குழுவில் உள்ள பதினாறு நபர்களில் பெரும்பான்மையானோர் அறிவிக்கப்பட்டிருக்கும் ஊக்கத் தொகையை இழக்கத் தயாராக இருந்தால் அவளை மீண்டும் பணியில் அமர்த்திக் கொள்வதென்றும் திங்கட்கிழமை இதன் பொருட்டு இரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்றும் முடிவாகிறது. இரண்டு தினங்களுக்குள், அதுவும் கொண்டாட்டங்களில் திளைக்கும் வாரத்தின் இறுதி நாட்களில், சான்ட்ரா தனது வேலையைப் பெற ஒன்பது நபர்களை சந்தித்து தத்தம் ஊக்கத் தொகையை அவர்கள் மறுப்பதற்கு ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும்.

சான்ட்ராவாக நடித்திருக்கும் மரியான் கோடிலார்டிற்கு சோகத்தை பிரதிபலிப்பதற்கென்றே படைக்கப்பட்ட பெரிய விழிகள். சிரிக்கையிலும் மென்சோகம் வழியும் அசாதாரணமான கண்கள். கொஞ்சம் பிசகி இருந்தாலும் மெலோ டிராமவாகிவிடக் கூடிய அதிகபட்ச சாத்தியங்கள் கொண்ட கதையை தனது நடிப்பாற்றலால் வேறொரு உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறார். சந்திக்கும் ஒவ்வொரு ஊழியரிடமும் சான்ட்ரா பேச வேண்டியவை ஒன்றே. அவ்வூழியர்கள் ஒவ்வொருவருக்கும் பணத் தேவைகள் முதுகை அழுத்திக் கொண்டிருக்க சிலர் மறுக்கிறார்கள். சிலர் முகம் சுளிக்கிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே இல்லையென பொய் சொல்லி அவமானப்படுத்துகிறார்கள். சிலரோ மனமுடைந்து அழுகிறார்கள். ‘நான் உங்களிடம் மண்டியிடவில்லை. பிச்சை கேட்கவில்லை. என் நிலைமையில் இருந்து யோசித்துப் பாருங்கள்’ என்கிறாள். சக மனிதன் மீதான அக்கறையினால் உங்கள் சுயத் தேவைகளை ஒதுக்கத் துணிந்தவரா நீங்கள் என சான்ட்ரா கேட்பது தனது சகாக்களிடம் மட்டுமல்ல.

A Cinema Without Style என்பது இச்சகோதரர்கள் மொழிந்த புகழ்பெற்ற வாக்கியம். மையக் கதை மாந்தர்களின் பின்னணி குறித்த மிகக் குறைந்த தகவல்கள் கூட நாம் ஊகித்து அறிய வேண்டுபவை. இவர்களின் கதாபாத்திரங்கள் தெருக்களிலேயே அலைகிறார்கள். அப்புறவுலக பாதிப்புகள் அந்தரங்க உறவுகளை சிதைக்கின்றன. வறுமையிலும் மன அழுத்தத்திலும் சிக்கித் தவிக்கையில் மனிதத்தின் மீதான நம்பிக்கையும் எதிர்காலம் குறித்த கனவுகளுமே மிச்ச வாழ்க்கையை கடக்க உதவுகின்றன. அதே சமயம் பிறருடன் இணக்கமான உறவை பேணுவதில் உள்ள தயக்கங்களும் சமூகத்தோடு முயங்கி வாழ்வதன் இடர்களும் (Social Misfits) இவர்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. குறும்படங்களின் மூலம் தொடக்க காலத்தில் இடதுசாரிகளாக அறியப்பட்ட டார்டென் சகோதரர்கள் 1996ம் ஆண்டு வெளியான Le Promesse திரைப்படத்திற்கு பின்னர் எவ்வித சித்தாந்தங்களுக்குள்ளும் வரையறுக்கப்பட்டுவிட முடியாத உயரங்களை தொட்டனர். Rosetta(1999), The Kid With a Bike (2011) ஆகியன இவர்கள் இயக்கியதில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய மற்ற படங்கள்.

இரு முறை தங்கப்பனை விருது வென்றவர்களான டார்டென் சகோதரர்கள் மனிதர்களின் சரி – தவறுகளுக்குள் தராசை தூக்கிப் பிடிப்பதில்லை. நவீன வேலைச் சமூகத்தின் அழுத்தங்களும் எளிய மனிதர்களின் அன்றாட புறவுலக ஊசலாட்டங்களுமே இவர்களின் கதைக்களம். தங்களுக்குப் பிறந்த குழந்தையை விற்க வேலையற்ற இளைஞனும் அவனது தோழியும் முடிவெடுக்கும் தருணத்தில் கூட (L’Enfant) உணர்ச்சிகளை வலிந்து திணிக்காமல் விலகி நின்று வாழ்வை சித்தரிக்கும் கனிந்த மனம் கொண்ட பாக்கியசாலிகள். எளிமையின் முழு வீச்சுடனும் கலையின் பரிபூரண தாக்கத்துடனும் டிசிகாவின் The Roof திரைப்படத்திற்குப் பிறகு இன்னுமொரு படம் வெளியாக அறுபது ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது காலம். அந்த எளிமையின் முன் மற்ற அனைத்தும் மண்டியிடத் தான் வேண்டும்.கோகுல் பிரசாத்: பொறியியல் பட்டதாரி. இலக்கியத்திலும் உலகத் திரைப்படங்களை தேடிப் பார்ப்பதிலும் தொடர்ந்த ஈடுபாடு உண்டு. சிவகாசியை பூர்வீகமாக கொண்ட இவர் தற்சமயம் கோவையில் வசிக்கிறார்.