இப்போதெல்லாம்
போய் வருகிறேன்
என்று யாரும் சொல்லிச் செல்வதில்லை

அப்படியே மறைந்துப் போகிறார்கள்

வழியனுப்பும் வகையில்லாமல்
சேமித்து வைத்திருக்கும் கண்ணீரில்
சில துளிகள்
கவனிக்கப்படாமல் வழிகின்றன

தொடர்பறுந்து போன
உரையாடலின் இறுதி வரி
நம்முடையதாக இருக்கும்போது
விம்மும் மனதை தேற்ற
உரியவரின் பதில் வரியையும்
நாமே எழுதிக்கொள்ள வேண்டியிருக்கிறது
நினைவாக மறுக்கும் நினைவாக
விடாமல் துரத்தும்
அருகாமை சூட்டையும், வாசத்தையும்,
ஈரத்தையும், தீண்டலையும், பார்வையையும்
இல்லை என்று ஒரு இறுதியாகாத சொல்
எதிர்கொள்ள முடியாமல் மாள்கிறது

ஒரேயடியாக யாரும்
போய்விடுவதில்லை தான் என்றாலும்
விடைகொடுத்தல்
இல்லாத பிரிவு
எழுதி முடிக்கப்படாத கவிதையை
ஒரு செத்த எலியாக்கி
காக்கையிடம் கையளிக்கிறது

அடுத்து