கபாடபுரம் கலை இலக்கியத்தை முதன்மையான நோக்கமாக கொண்ட இணைய இதழ். தமிழின் நீண்ட தீவிர இலக்கிய இதழ் மரபில் தன்னையும் ஒரு கண்ணியாக இணைத்துக் கொள்கிறது. இத்தருணத்தில் சூழலுக்கு மதிப்பீடுகளையும் அறங்களையும் உருவாக்கிய முன்னோடிகளை காவல் தெய்வங்களாகக் கருதாமல் முன்னத்தி ஏராக நினைத்து தோழமை உணர்வு ததும்ப மிகுந்த மதிப்புடன் நினைவு கூர்கிறேன். பெரும் படைப்பாளிகளும் பெயர் அறியாத ஊரிலிருந்து இலக்கியப்பித்துடன் அலைந்தவர்களும் கொண்டு வந்த இலக்கிய இதழ்களும், மாற்று இதழ்களுமே நவீன தமிழை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றன. மனம் உந்த இலக்கிய வேதாளம் தலையில் ஏறியமர்ந்து விரட்ட, கனவுகளுடன் தங்கள் உடல், பொருள், ஆவியை ஈந்து புதிய சிந்தனைகளை, மாற்றுக் கருத்தாக்கங்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தங்கள் இலக்கிய இதழ்களின் மூலம் வழி சமைத்துத் தந்த அந்த அர்ப்பணிப்பாளர்களுக்கு என் வணக்கங்கள். நவீன தமிழ் அடைந்த செழுமைக்கான காரணங்களுள் ஒன்றாக எப்போதும் அவர்கள் இருந்து கொண்டிருப்பார்கள்.இலக்கியம் பயிலத் தொடங்கி அது சார்ந்த கனவுகளின் உடையாத குமிழ்கள் மனதில் தோன்றி நகர்ந்து கொண்டிருந்த நாட்களிலேயே இதழ் பற்றிய ஆசைகளும் முகிழ்த்துவிடும் என்று தோன்றுகிறது. பல மாதங்களாக உள்ளத்தில் கிடந்த விருப்பத்தை ஒரு ஞாயிறன்று நெருங்கிய இலக்கிய நண்பரிடம் பகிர்ந்தேன். உற்சாகமூட்டும் பதிலுடன் உத்வேகத்தை அளிக்கும் ஆலோசனைகளும் கிடைக்கவே இதழைக் கொண்டு வருவது சாத்தியம் என்ற உறுதியேற்பட்டது. அந்த ஞாயிறுக்கும் அந்த மனநிலைக்கும் பிரத்யேகமான நன்றிகள். இதழுக்கான முன்வரைவுகளும் திட்டங்களும் மனதிற்குள்ளும் கண் முன்பும் ஒவ்வொன்றாக உருப்பெற்று வரத் தொடங்கியது. படைப்பாளிகளிடம் அவர்களது ஆக்கங்களைக் கேட்கத் தொடர்பு கொண்ட போது எவரொருவரும் மறுதலித்துப் பேசாதது மட்டுமல்ல, அவர்களது எவ்வளவோ பணிச்சூழல்களுக்கு மத்தியில் பங்களிக்கச் சம்மதித்தார்கள். இந்தப் படைப்பாளிகளே கபாடபுரத்தின் பக்கங்களை ஒளிபெறச் செய்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நெஞ்சில் நிறுத்தி என் அன்பையும் நன்றியையும் – யந்திரத்தனமாக அல்லாமல், அதற்குரிய ஆழமான பொருளில்- தெரிவிக்கிறேன். இனி வரும் இதழ்களில் படைப்பாளிகளை ஆர்வமுடன் பங்கெடுக்குமாறு கோருகிறேன்.

இணையம் வெற்று அரட்டையாகவும் கூச்சலாகவும் வம்புகளாகவும் ஆனது என்பதை மறுத்து அதற்கென சீரிய முகமொன்றை அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டிருப்பதே இந்த இணைய இதழ்.

’டிராட்ஸ்கி’ மருதுவை இதழில் இடம்பெற்ற கதைகளுக்கான ஓவியத்திற்காகவே தொடர்பு கொண்டேன். ஆனால் அவரது திட்டங்கள் வேறாக இருந்ததை அறிந்தேன். தன் புதிய பாணி ஓவியத்தை ஒவ்வொரு இதழிலிலும் வரைந்தளிக்க உள்ளார். இதைத் தொடராக செய்து தர இசைந்த மருதுவுக்கு நன்றி.

கபாடபுரம் என்னும் எழுத்துருவை உருவாக்கியவரும் இதழில் இடம்பெற்றுள்ள நெடுங்கதைக்கு தனியாக ஓவியம் வரைந்து தந்தவருமான ஓவியர். அனந்த பத்மநாபனுக்குத் தனித்த நன்றிகள்.பஷீரின் கதைக்கு ஓவியம் வரைந்து தந்த கவிஞர். றஷ்மிக்கு நன்றி.

இதழில் ‘சிறார் இலக்கியம்’ பற்றித் தொடராக எழுதவிருப்பவர் விஷ்ணுபுரம் சரவணன். ‘சினிமா’ பற்றிய தொடரின் வழி உலக சினிமா ஆளுமைகளையும் அவர்களது திரைமொழியையும் எழுதவிருப்பவர் கோகுல் பிரசாத்.

ஒவ்வொரு இதழிலிலும் பெண்மொழி என்னும் பகுதி இடம்பெறவிருக்கிறது. இதில் பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புலக பயணம் குறித்தும் தங்கள் ஆக்கங்களின் அக புற சூழல்களைப் பற்றியும் எழுதவிருக்கிறார்கள். முதல் இதழில் கவிஞர். அனார் இத்தொடரைத் தொடங்கவிருக்கிறார். இதன் அடுத்த பகுதியை வரும் இதழ்களில் எழுதுவார். இரண்டாம் இதழில் பெண்மொழி பற்றி எழுதவிருப்பவர் தமிழ்நதி.

சமகாலத்தில் வெளியான முக்கியத்துவமுடைய பத்து நூல்களுக்கு கணியன் பூங்குன்றன் இவ்விதழில் எழுதியிருக்கும் நுட்பமான விமர்சன குறிப்புகள் அந்நூலின் மேல் ஒளியைப் பாய்ச்சுகிறது.

முதல் இதழ் என்பதால் கலை அழகு மிக்க வடிவமைப்புக்கான மெனக்கெடலில் தவிர்க்க முடியாத காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.வசீகரமும் அழகுணர்ச்சியும் ததும்ப கபாடபுரத்தின் வடிவமைப்பை அபாரமாக உருவாக்கிய நண்பர் சந்தோஷ்க்கும் அவரது நிறுவனத்திற்கும் (Happily Ever After Design,Coimbatore) பொறுத்துக் கொண்ட படைப்பாளிகளுக்கு மனம் நெகிழும் நன்றிகள் பல.அடுத்தடுத்த இதழ்கள் குறித்த நேரத்தில் வெளியாகும் என உறுதியளிக்கிறேன்.

படைப்பாளிகளையும் வாசகர்களையும் நண்பர்களையும் இதழ் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.இதழை மேலெடுத்துச் செல்வதற்கான உந்துதலை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.இதழ் குறித்து பலரிடத்தும் பகிர்வதன் வழி அதைச் சாத்தியமாக்க முடியும்.

புதுமைப்பித்தன் சிறுகதையை கைகொண்டது தமிழின் நல்லூழ்.தன் மேதமைமிக்க படைப்பாக்கத்தால் தமிழ்ச் சிறுகதைகளை பலகாத தூரம் முன்னோக்கிச் செலுத்திய புதுமைப்பித்தனின் சிறுகதையே ‘கபாடபுரம்’. புனைவை வெகு சுதந்திரமாக பயன்படுத்திய கதை மட்டுமல்ல, புதுமைப்பித்தனின் ஆளுமை வெளிப்படும் கதைகளுள் ஒன்றும் கூட. அந்த மேதைக்கு என் வணக்கங்களும் நன்றிகளும்.

மிக்க அன்புடன்

கே.என்.செந்தில்
ஆகஸ்ட் 2015.

editor@kapaadapuram.com