பெண் மொழி

ஒவ்வொரு இதழிலும் பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புலகின் அகத்தையும்
புறத்தையும் விரிவான தளத்தில் இங்கு எழுதவிருக்கிறார்கள்.அவ்வகையில் இந்த முதல்
இதழில் கவிஞர்.அனாரின் கட்டுரை வெளியாகியிருக்கிறது.இக்கட்டுரையின் இரண்டாம்
மற்றும் இறுதிப்பகுதி அடுத்த இதழில் வேறொரு பெண் படைப்பாளியின் புதிய
கட்டுரையுடன் சேர்த்து வெளியாகும்.

– ஆசிரியர்

எனக்கான விளையாட்டுகள், எனக்கான கல்வி, சென்றுவரக்கூடிய ஒரே இடமாகவிருந்த பாடசாலை எல்லாம் என்னை விட்டகன்றபோது வெறுமை மெல்ல மெல்ல தின்னத் தொடங்கியது. நான் நானாக மாறிக் கொண்டிருந்தேன். முன்னோடிக் கவிஞர்களை வாசித்துவிட்டோ இலக்கியப் பரிச்சயத்தோடோ எழுத வந்தவள் அல்ல நான். ஆனால் கவிதை என்னை வந்தடைய சில விடயங்கள் ஆதாராமாக இருந்திருக்கிறது என இப்போது உணருகிறேன். என்னுடைய பால்யகால அழகியவருடங்கள், மதரீதியான வரலாற்றுத் தொன்மங்களும் மரபுகளும் கவிதைகளுக்கான பல திறவுகோல்களைக் கொண்டிருந்தது. மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் என்னுடைய கவிதைகளில் அவை வெளிப்படுகின்றன. என்னைப்பாதித்த வலுவான காரணங்களாக எங்கள் மண்ணின் நாட்டார்பாடல்கள் அதாவது நாட்டுப்புறக் கவிகள் மூன்று நான்கு வயதிலிருந்தே எனக்குள் புகுந்தவை. இவைகள் கவிதை களுக்குரிய கற்பனைகளையும் காதலையும் வளர்த்தெடுத்திருக்கின்ற என்றே நம்புகின்றேன்.

90 காலப்பகுதியில் எழுதவந்தவள் நான். எனது ஊர் பல கலவரங்களைக் கண்டிருக்கிறது. அரசியல் கொந்தளிப்புகளைக் கடந்திருக்கிறது. எனவே எழுதுவது தப்பித்தலுக்கான ஒரு தற்காலிக ஏமாற்று வழியாக எனக்கிருந்தது. இன்றுவரை கவிதையைத் தொடர்வேன் என்றெல்லாம் அன்று நான் திட்டமிட்டதோ எண்ணியதோ கிடையாது. பூட்டப்பட்ட கதவுகளுக்குள் இருந்தபடி எப்படி சுதந்திரத்தை அடைவது என கவிதை எனக்கு சொல்லிக் கொண்டிருந்தது. கவிதை எழுதுவதற்கு புதிய காரணங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. மரணங்கள் வித்தைகளைப்போல நிகழ்ந்தன. எதை எழுத வேண்டுமோ அதை நேரடியாக எழுதமுடியாது என்ற போதும் பலரும் எழுதிக் கொண்டுதான் இருந்தனர்.

கவிதை, சொல்ல முடியாததை சொல்வது, பகிர்ந்து கொள்ள முடியாததை பகிர்நதுகொள்வது. பெறமுடியாததை தருவது. கிடைக்காததை கேட்பது. இருப்பின் அடையாளத்திற்காகவும் அரசியல் ரீதியான முன்னகர்விற்காகவும் வாழ்வை எதிர்கொண்டு முன்னெடுப்பதற்காகவும் கவிதைகள் எழுதும் புதிய ஒரு எழுச்சிமிக்க புதியவர்களோடு நானும் இணைந்து கொண்டிருந்தேன். இறப்பின் பின்னரும் பிறப்பின் முன்னரும் இருக்கக்கூடிய அரூப உயிர் கவிதை. பல இலக்கிய வடிவங்கள் ஒன்றிணைந்து இயங்கக்கூடிய வடிவம் என நான் நினைக்கிறேன். ஐம்பூதங்களும் ஐம்புலன்களும் சங்கமிக்கின்ற வளமிக்க செயல்பாட்டு வடிவம். மொழியின் ஆகச்சிறந்தவெளிப்பாடு.

ஆனால் அதனைக் கையாள்பவர்களிடமுள்ள திறனைப்பொறுத்தே இக்காலங்களில் கவிதைக்குரிய கணிப்பீடுகளை முன்னெடுக்க முடியும். எல்லையற்ற ஒன்றை எப்படி வரையறை செய்வது? அந்த விதமான அளவுகோலை முழுமையாக செயலிழக்கச் செய்வது கவிதை.

அன்றாடச் சுமைகள் நெருக்கடிகள் கசக்கிப் பிழியக்கூடிய சாதாரண பெண்ணாக இருந்து கொண்டுதான் என் கனவு மாளிகையின் முற்றத்தில் கவிதைப்புறாக்களை வளர்க்கின்றேன். அவை கொறிக்கும் தானியங்களால் என் கூடை நிரம்பியுள்ளன. புறாக்கள் கோதுவதும் கொஞ்சுவதும் குறு குறுப்பதும் பார்த்துப் பார்த்து அவைகள் மயங்கும்படி இசைக்கின்றேன். எப்படிப்பட்ட இசை அது! புறாக்களின் அரவணைப்பும் நெருக்கமும் மென் இறகுகளின் கதகதப்பும் தனிமையின் நிறங்களுக்குள் என்னை அடைகாக்கின்றன. என் கனவுகளில் அவை இருக்கிறதென்றும் இல்லையென்றும் தோன்றுகின்றது. சிலவேளை புறாக்கள் வேறெங்கும் திசைமாறிச் செல்வதில்லை. என்னுடைய கனவுகளின் ருசிக்கு பழக்கப்பட்டிருக்கின்றன. அவை எங்கே எத்திசையில் செல்கின்றன? புதிய புறாக்களுடன் எப்போது திரும்புகின்றன? என்பதை கணிக்க முடியாது. மாயப் புறாக்கள் என்னிடம் வருவதுபோல் ஒருநாள் வராமலும் போகலாம். எதுவும் நிச்சயமில்லாதது.

தொடரும்…