டிராட்ஸ்கி மருது பக்கம்

இளம்வயதில் ஓவியக்கல்லூரி மாணவனாக இருந்த போது 19-ஆம் நூற்றாண்டு ஓவியர் “காமிலிகரோட்” தீட்டிய இயற்கைக்காட்சிகள் எனக்கு அதிகம் பிடிக்கும். அவ்வியற்கைக்காட்சி ஓவியங்களில் இருக்கும் மனித உருவ இணைப்பு தான் அதற்கு காரணம். மனிதனின் இருப்பு நேரடியாக இருக்கும் போது அது எனக்கு அருகில் இருப்பது போல உணருகிறேன். அப்போது படித்த பெரும் விமர்சகர்களின் கூற்றும் வெறும் இயற்கைக்கட்சிகளை ரசிப்பதை மட்டுப்படுத்தியது. அசைவின் மீதும், உடல்மொழியின் மீதும் பெரும் ஈடுபாடு கொண்ட எனக்கு அது சரி என்று இருந்த காலம் அது. பிறகு அவற்றையும் பொருள் கொள்ளும் நிலையும் வந்தது.

திரைபடத்துறையில் கலை இயக்குனராக பணியாற்றுகிற போது லொக்கேஷன் பார்க்கச் செல்லும் நேரங்களில் எல்லாம் பல கோணங்களில் எடுத்து வந்த புகைப்படங்கள் ஏராளம். டிஜிட்டல்யுகம் அளிக்கும் சுகம் அது. அப்புகைப்படங்களில் மனிதர்களையும், உருவங்களையும், புலப்படாதவற்றையும், காலத்தையும் இணைத்து ஓவியமாகத் தீட்டுவது, தொடர்ந்து எனக்கு மகிழ்வைத் தருகிறது.அப்படி நான் வரைந்த Moonlight series போன்ற பல புகைப்படக்கோர்வையில் தேனிக்கு அருகில் நான் எடுத்த ஒரு புகைப்படத்தில் நுழைந்தகாலமும் சந்திக்காத உருவமும் தான் நீங்கள் சந்திப்பது.